27/11/2019
மலையகம் மறந்த மகாத்மா!
மலையகம் மறந்த மகாத்மா!
தோட்டத்தொழிலாளர்களுக்காக சொத்து, சுகமென அனைத்தையும் இழந்த சரஸ்வதி வித்தியாலயம் நிறுவுனர் கே. இராஜலிங்கம்
காரை விற்று தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்த உத்தமர்
அடக்குமுறையாலும், வறுமையின் கோரத்தாண்டவத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களின் வாழ்வில் ஒளிபிறக்கவேண்டி தமது வாழ்வையே அர்ப்பணிப்பவர்களையும், சொத்து, பணமென அனைத்தையும் மக்களுக்காகவே வாரிவழங்கிய எவ்வித பந்தாவும் கட்டாமல் எளிமையாகவே வாழ்ந்து மடியும் மனிதர்களை இன்றைய நவீன உலகில் சினிமாப்படங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆனால், நிஜவாழ்விலும் இப்படியான மகான்கள் வாழ்ந்திருந்தாலும் அவர்கள் தற்புகழை தேடிச்செல்லாததால் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். அத்தகையவர்களை இன்றைய தலைமுறையினருக்கு அறியப்படுத்துவதுதான் பச்சை தங்கத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும்.
இப்படிதான் மலையக மக்களுக்கு கல்விகண் திறப்பதற்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சொத்துகளையெல்லாம் விற்று, கிடைத்த அரச சேவையையும் துறந்து – திருமணம்கூட முடிக்காமல் செத்து மடியும்வரையும் மக்களுக்காகவே வாழந்தவர்தான் மலையக காந்தியென போற்றப்படும் கே. இராஜலிங்கம்.
இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகவும் அன்று இலங்கை, இந்திய காங்கிரஸாகவும் இருந்த அமைப்பின் ஸதாபகப் பொதுச்செயலாளர் இவர்தான். அவ்வமைப்பின் தலைமைப்பதவியையும் அலங்கரித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர். புஸல்லாவை – சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகர். தோட்டத்தொழிலாளர்களுக்காக இவர் செய்த சேவைகளையும், தியாகங்களையும் வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரித்துவிடமுடியாது.
இப்படியானதொரு மகானை வரலாற்று ஏற்றில் இடம்பெறவைக்கும் நோக்கில் அவர் வாழ்ந்த வீடுதேடி சென்று தகவல்களை திரட்டியது பச்சை தங்கம் குழு. பல வியக்கவைக்கும் தகவல்களை கிடைத்ததுடன், அட, நம் மலை மண்ணில் இப்படியும் தலைவர்கள் வாழ்ந்துள்ளனரேயென நெஞ்சமும் நிமிர்ந்துநின்றது.
இராஜலிங்கம் ஐயாவின் தந்தை காளிமுத்து கங்காணி
பிறப்பும் கல்வியும்
18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பெரும் பஞ்சத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொழிலாளர்களை கைக்கூலிகளாக இலங்கை அழைத்துவந்தது முதலாளி வர்க்கம்.
இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களில் ராமன் என்பவரும் ஒருவர். ( 1930 – ராஜலிங்கத்தின் தாத்தா) கம்பளையிலிருந்து புஸல்லாவை நோக்கி செல்லும் வழியிலுள்ள சங்குவாரி தோட்டத்தில் குடியேறினார். கடின உழைப்பால் காலப்போக்கில் பெரிய கங்காணியாகவும் நியமிக்கப்பட்டார். இவரின் மூத்த மகன்தான் காளிமுத்து. இவரும் சங்குவாரி தோட்டத்தில் பெரிய கங்காணியாக பதவிவகித்தார்.
காளிமுத்து கங்காணிக்கும், காளியம்மாலுக்கும் பிறந்த ஆறுக்குழந்தைகளில் மூத்தவர்தான் நமது நாயகன் கே. ராஜலிங்கம். 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி பிறந்த அவர், சிறுவயது முதலே கல்விமீதும், சமூகம்மீதும் அதிக பற்று வைத்திருந்தார். தனது தந்தை பெரிய கங்காணியென்பதால் ஆரம்பக் கல்வியை கம்பளை, அன்றூஸ் கல்லூரியில் பயின்றார்.
உயர்கல்வியை கண்டி, புனித அந்தனீஸ் கல்லூரியில் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தமிழ், ஆங்கிலமென இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சர்வதேச பரீட்சைகளிலும் சித்தியடைந்தார். இதனால், தமது பாடசாலைக்கே இவரை ஆசிரியராக நியமித்தது பாடசாலை நிர்வாகம்.
சரஸ்வதி பாடசாலை
உதயம் - 1932
தொழிலுக்கு இவர் பாடசாலை செல்லும்போது, தோட்டப்பகுதியிலுள்ள பிள்ளைகள், தேயிலை மலைகளுக்கோரம் காலை முதல் மாலைவரை இருப்பதை கண்டுள்ளார். ஏன் எமது மக்கள் இவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர், ஓரங்கட்டப்படுகின்றனர் என சிந்தித்த அவர், தோட்டப்பகுதி பிள்ளைகளுக்கு கல்வி அமுதூட்டும் முடிவுக்கு வந்தார். இதனால், ஆசிரியர் பதவியை துறந்து – சங்குவாரி தோட்டத்தில் கூடாரம் அமைத்து பாடசாலை அமைத்தார். தோட்டங்களுக்கு சென்று கல்வி விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தினார்.
சரஸ்வதி கல்லூரி அமைவதற்கு முன்னர் - ஆரம்பத்தில் இயங்கிய பாடசாலை
இதற்காக தனது தந்தையிடமும், சகோதரர்களிடமுமே பணம் பெற்றார். ஏனைய தோட்டப்பகுதிகளிலுமுள்ளவர்கள் பயிலவேண்டும் என்ற நோக்கில் புஸல்லாவை சரஸ்வதி வித்தியாலயத்தை 1932 இல் ஆரம்பித்தார்.
தனது தந்தைக்கு சொந்தமான தேயிலை தோட்டமொன்றை விற்பனை செய்தே பாடசாலை நிறுவினார். ( கம்பளையிலிருந்து, புஸல்லாவை செல்லும் வழியில், அட்டபாகை எனும் நகரம் தாண்டியதும் உள்ள பாஸ்ரோக் தோட்டமே விற்கப்பட்டது). அதன்பின்னர் ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சேவைகளுக்காக வீட்டிலிருந்து தங்க ஆபரணங்கனை விற்பனை செய்தார்.
குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் எதிர்த்துள்ளனர். எனினும், மக்களுக்காக அனைத்தையும் அவர் செய்தார். இதனால், அவரது தந்தையும், சகோதரர்களும் பொருளாதாரமட்டத்தில் கீழிறங்கினர். இவரால் ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி வித்தியாலயம், இன்று ஒரு தேசிய பாடசாலையாக சிறந்து விளங்குகின்றது.
தோட்டப்பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். சமூக மாற்றத்துக்கு கல்விபுரட்சியே சிறந்த வழி. அதை அன்றே உணர்ந்தவர்தான் கே. இராஜலிங்கம்.
இலங்கை, இந்திய காங்கிரஸ்
உதயம் - 1939
இலங்கை, இந்திய காங்கிரஸ் 1939 ஆம் ஆண்டு உதயமானது. மகாத்மா காந்தியின் சிறப்பு பிரதிநிதியாக நேரு கொழும்பு வந்திருந்தார். அவரின் மத்தியஸ்தத்துடனேயே அவ்வமைப்பு உதயமானது. அதன் ஸ்தாபகப் பொதுச்செயலாளராக இராஜலிங்கமே நியமிக்கப்பட்டார்.
காந்தி, நேரு ஆகியோர் இலங்கை வந்தபோதெல்லாம் அவர்களை சந்தித்து பெரும் வரவேற்றை பெற்றிருந்ததால், இவர்களின் ஆசியுடனேயே பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனது பேச்சை உரைபெயர்ப்பதற்கு இராஜலிங்கத்தையே நேரு அழைப்பார்.
1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை, இந்திய காங்கிரஸின் முதலாவது மாநாடு கம்பளையில் நடைபெற்றது. தொண்டமானுடன் இணைந்து இவரே மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். 47 முதல் 50 வரை இதொகாவின் தலைவராகவும் பதவிவகித்தார். அன்று சந்தாப்பணம் இருக்கவில்லை. இதனால், சொந்த பணத்தை பயன்படுத்தியே இவர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். ஜெனிவா மாநாடு உட்பட பல இடங்களுக்கு சொந்த பணத்திலேயே தொழிலாளர்களுக்காக சென்றுள்ளார்.
சௌமியமூர்த்தியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்தவர். ஏன், தளபதி என்றுகூட சொல்லாம். அஸீஸ், வெள்ளையன், வேலுப்பிள்ளையென முக்கிய தலைவர்கள் கட்சிலிருந்து வெளியேறும்போது தொண்டமானுக்கு பக்கபலமாக இவரே கைகொடுத்தார். 42 இல் அஸீஸ் காங்கிரஸை கைப்பற்றியபோது – தொண்டமான் பக்கம் நின்று குரல்கொடுத்தார். இப்படி இன்றுள்ள இ.தொ.காவின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்குண்டு.
நேருவின் பேச்சை மொழிப்பெயர்த்தபோது....
போராட்டக்களத்திலிருந்தவர்களுக்காக
காரைவிற்று பணம்கொடுத்த கர்ணன்
தொழிலாளர்களுக்காக அவர் பல இடங்களுக்கு செல்வதால், தந்தையால் காரொன்று வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. நாவலப்பட்டிய, லட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சென்றிருந்த அவர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதை அறிந்தார். உடனே காரை விற்பனை செய்த அவர், அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டு, பாதி தூரம் கால்நடையாகவும், மீதி தூரம் பஸ்ஸிலூமாக வீடுவந்து சேர்ந்தார். தொழிலாளர்களின் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
1947 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர், எந்தவொரு சலுகையையும் பெற்றதில்லை. திருமண வாழ்வில் இணைந்தால் குடும்பத்தை சுமக்கவேண்டிவரும் என்பதால் அதை நிராகரித்தவர். இப்படி மக்களுக்காகவே வாழ்ந்த அவர், 1963 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமம் 11 ஆம் திகதி எம்மைவிட்டு பிரிந்தார்.
காந்தியின் காங்கிரஸ் கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் இலங்கையில் அமுல்படுத்தியதால் மலையக காந்தியென போற்றிப்புகழப்பட்டார். அவரின் சமாதி சங்குவாரி தோட்டத்தில், நுவரெலியா பிரதான வீதிக்கு மேழுள்ளது. வீதி அபிவிருத்தியின்போது அதை உடைப்பதற்கு முயற்சிக்கப்பட்டாலும் பின்னர் அது கைவிடப்பட்டது.
தனது குடும்பத்துக்காக அவர் எதையுமே சேமித்துவைக்கவில்லை. வீடொன்று மாத்திரமே இருக்கின்றது. அதற்கும் சட்டபூர்வமான ஆவணம் இல்லை. அதையாவது பெற்றுதருவதற்கு மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இதை செய்யாவிட்டால் வரலாறு எம்மை ஒருபோதும் மன்னிக்காது என்பதையும் கூறியாகவேண்டும்.
சின்னையா, தங்கவேல், ராஜரட்னம், தவமணியம்மாள், ராஜமணியம்மாள் ஆகியோர் N. இராஜலிங்கத்தின் சகோதர, சகோதரிகளாவர். இதில் தவமணியம்மாள் என்பவரே இவரின் அனைத்து தகவல்களையும் ஆணவப்படுத்தி வைத்துள்ளார். அதை தற்போது சீ. இராஜலிங்கம் என்பவர் பராமரித்துவருகிறார்.
இராஜலிங்கத்தின் தம்பியின் மகனே இவர். இராஜலிங்கம் தொடர்பில் ‘சிங்களத் தீவினில் தீனர்களின் தொண்டர் கே. இராஜலிங்கம்’ எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
பச்சை தங்கம் குழுவினருக்கு தகவல்கள் கிடைப்பதற்கு பெரும் உதவியாக இருந்த புஸல்வாவை சரஸ்வதி கல்லூரியின் உத அதிபர் ராமசீலன் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எழுத்து – எஸ்.பிரதா
( வட்டகொடை)
பச்சை தங்கம்