27/12/2016
கிரில்டு சிக்கன் (அவனில் செய்யும் முறை)
தேவையானவை:
முழுக் கோழி - 1 கிலோ
மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டேபிஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - ஒன்று
உருளைக்கிழங்கு - இரண்டு
அலுமினியம் ஃபாயில் - தேவையான அளவு
உப்பு - ஒன்றரை டேபிஸ்பூன்
செய்முறை:
முழுக் கோழியைத் தோலுடன், அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள அனைத்தையும் நீக்கிவிட்டுத் தரும்படி கடையிலேயே கேட்டு வாங்கவும். வாங்கிவந்த முழுக் கோழியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும்(கோழியில் சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துத் தேய்த்தும் கழுவிக்கொள்ளலாம்).
மசாலாத்தூள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அரை மூடி எலுமிச்சைச் சாற்றை அதில் பிழிந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மசாலாவாகப் பிசையவும். அந்த மசாலாவை, கழுவி வைத்திருக்கும் கோழியின் மேலும், உட்பகுதியிலும் நன்றாகத் தடவவும்(மசாலா கெட்டியாக இருந்தால் மட்டுமே கோழியுடன் பிடித்துக்கொள்ளும் என்பதால், மசாலா பேஸ்ட் செய்யும்போது தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்). வயிற்றின் உள் பகுதியில் மீதமிருக்கும் எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக்கி வைக்கவும். அப்போதுதான் நாம் தடவி வைத்திருக்கும் மசாலாவின் சாறு வயிற்றுப் பகுதியில் இறங்கி சுவை கொடுக்கும் மசாலா தடவிய கோழியை ஒரு பாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பையில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்(ஃப்ரீஸரில் அல்ல). ஓர் இரவு இப்படி வைத்து மறுநாள் வெளியே எடுத்து, ரூம் டெம்ப்பரேச்சருக்கு வரும்வரை வைத்திருக்கவும்.
அவனை 10 நிமிடங்களுக்கு 200 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யவும். அலுமினியம் ஃபாயில் பேப்பரை உருட்டி, சிறிய உருண்டைகளாகச் செய்து வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் ஃபாயிலைப் பரப்பவும். அதில் இரண்டு உருளைக்கிழங்குகளை நறுக்கிச் சேர்க்கவும். கூடவே உருட்டிய அலுமினியம் ஃபாயில் பேப்பர் உருண்டைகளையும் சேர்க்கவும். இந்த ஃபாயில் பேப்பர் உருண்டைகளின் மேல் சிக்கனை வைக்கவும். இந்த ஃபாயில் பேப்பர் உருண்டைகள் சிக்கனின் முதுகுப்பகுதி, அதாவது அடிப்பாகம் டிரேயின் சூட்டில் கருகாமல், முழுமையாக வேக உதவும்.
இப்போது இதை அவனின் நடு ரேக்கில் வைத்து 200 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் 170 டிகிரி செல்சியஸுக்கு மாற்றி ஒரு மணி நேரம் வேகவிடவும். (முதலில் வெப்பம் அதிகமாக வைப்பதால் சிக்கன் ஜுஸியாக இருக்கும்).
அவனை இடையிடையே இரண்டு முறை திறந்து பார்த்து, வெந்த சிக்கனில் இருந்து வடிந்திருக்கும் சாற்றை, ஃபுட் பிரஷ் மூலம் தொட்டு சிக்கன் மேலே தடவ வேண்டும் (அல்லது, வெண்ணெய்/சன்ஃபிளவர் ஆயில் சிறிது மேலே தடவிவிடலாம்). இது சிக்கன் டிரை ஆவதைத் தடுக்கும்.
முடிந்ததும் எடுத்து அப்படியே பரிமாறலாம். கீழுள்ள உருளைக்கிழங்கு சிக்கன் வெளியிட்ட சாறில் நன்றாக வெந்திருக்கும். அதையும் சாப்பிடலாம்.