15/05/2020
நுரையீரலை மட்டுமின்றி சிறுகுடலையும் தாக்கும் மனிதனை கொரோனா கொல்வது எப்படி?: ஆராய்ச்சியளார்கள் அதிர்ச்சி விளக்கம்
சீனாவின் ‘ஜார்னல் ப்ராண்டிஸ்’ என்ற பத்திரிக்கை, பொது சுகாதாரம் குறித்த மருத்துவ ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நமது உடலில் வைரஸ் தொற்று நுழைந்தவுடன் சுவாச பாதைகளை பாதிக்கிறது. செல்களுக்குள் சென்று பல மடங்கு பெருகுகிறது. நமது உடலில் நோய் தொற்று நுழைந்தவுடன் தடுப்பாற்றல் மண்டலம் அவற்றை உடனடியாக அழிப்பதற்காக முயற்சி செய்யும். இதற்காக சைட்டோகைன் நோய் தடுப்பு புரதங்களை ரத்த அணுக்களில் செலுத்தும்.
இதன் மூலமாக கிருமிகள் அழிக்கப்படும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலின்போது ரத்த வெள்ளை அணுக்களை இந்த சைட்டோகைன் புரதங்கள் அதிகம் தாக்குகின்றன. சார்ஸ் மற்றும் மெர்ஸ் நோய் தொற்றுக்கு பின்னர் மனித உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்ததோ, அதே மாற்றங்கள்தான் கோவிட் 19 வைரஸ் நோய் தொற்றுக்கு பின்னரும் நிகழ்ந்துள்ளது. கோவிட் 19 நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சைட்டோகைன் நோய் அறிகுறி தோன்றக் கூடும். வேகமாக அதிகரித்த சைட்டோகைன்கள் நோய் எதிர்ப்பு அணுக்களான லிம்போசைட்டுக்கள், நியூட்ரோபில்ஸ் போன்றவற்றை அதிகமாக ஈர்க்கின்றன. இதன் விளைவாக இந்த செல்கள் நுரையீரல் திசுக்களில் ஊடுருவி நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதன் காரணமாக அதிக காய்ச்சல், ரத்த நாளங்களில் அதிக கசிவு, உடலுக்குள் ரத்தம் உறைதல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகின்றன. மேலும் குறைந்த ரத்த அழுத்தம், ஆக்சிஜன் பற்றாக்குறை, ரத்தத்தின் அமிலத்தன்மை அதிகரித்தல், நுரையீரலில் திரவங்களை உருவாக்குவதற்கும் காரணமாகிறது. ரத்த வெள்ளை அணுக்கள் ஆரோக்கியமான திசுக்களை தாக்குவதற்கும் அழிப்பதற்கும் தவறாக வழி நடத்தப்படுகின்றன. நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுகுடல், சிறுநீரகங்கள் மற்றும் பிறப்புறுக்கள் செயலிழப்புக்கும் இவை வழிவகுக்கிறது. இதுபோன்று பல உறுப்புக்களின் செயலிழப்பு நோய் காரணமாக நுரையீரலின் செயல்பாடு மோசமாகி இறுதியில் நுரையீரலை மூடி விடுகின்றன. இதனால் கடுமையான சுவாசக் கோளாறு ஏற்படுகின்றது.
இதன் காரணமாக தான் பெரும்பாலான கொரோனா வைரஸ் பாதிக்கபட்டோர் உயிரிழப்புக்கள் சுவாச கோளாறு காரணமாக ஏற்படுகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான குறிப்பிட்ட தடுப்பு சிகிச்சை முறைகள் இல்லாத நிலையில், நோய் அறிகுறிகளை எதிர்த்து போராடுவது மற்றும் உடல் உறுப்புக்களின் செயல்பாட்டை பராமரிப்பதன் மூலமாக இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். எனவே, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவரின் நுரையீரல் செயல்பாட்டை உறுதி செய்வது அல்லது சிகிச்சை அளிப்பது அவசியம்.