12/12/2023
இலங்கைக்கு பச்சைக்கொடி: இரண்டாம் கட்ட கொடுப்பனவை வழங்க IMF அனுமதி
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையுடனான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு நேற்று இடம்பெற்றது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கை காட்டிய முன்னேற்றத்தில் திருப்தி அடைவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, முதல் மதிப்பாய்வின் நிறைவிற்கு அமைய SDR 254 மில்லியன் (சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதி வசதியை உடனடியாக இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி SDR 508 மில்லியன்களாகும்.
இலங்கையின் மைக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.
நிர்வாக சபையின் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் EFF-ஆதரவு (EFF - விரிவாக்கப்பட்ட நிதி வசதி) திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஜூன் இறுதிக்கான அனைத்து அளவு செயல்திறன் அளவுகோல்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. செலவு மிகுதி மற்றும், வரி வருவாயைத் தவிர அனைத்து குறிகாட்டி இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்து ஏழு தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை மூழ்கியது.
எனினும் மார்ச் 2023 இல் IMF பிணை எடுப்பு 2.9 பில்லியன் டொலர்களை முடக்கியதில் இருந்து, நாடு அதன் பொருளாதாரத்தை ஓரளவு உறுதிப்படுத்தவும், பணவீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் நாணய இருப்புக்களை மீண்டும் உருவாக்கவும் முடிந்தது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு EFF திட்டம் ஆதரவளிக்கிறது.
இதற்கிடையில், இலங்கை அதன் கடன்களை மறுசீரமைப்பதற்காக சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி (எக்சிம்) வங்கி, அதன் மிகப்பெரிய இருதரப்பு கடனாளர் மற்றும் உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) ஆகியவற்றுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தங்களை எட்டியுள்ளது.
நவம்பர் 29 அன்று, இலங்கை அரசாங்கமும் OCC யும் கடன் முறைமைக்கான நிதி விதிமுறைகள் குறித்து கொள்கையளவில் ஒரு உடன்பாட்டை எட்டியதாக வெளிப்படுத்தியது.
கொள்கை ரீதியான ஒப்பந்தமானது சுமார் 5.9 பில்லியன் டொலர் நிலுவையில் உள்ள பொதுக் கடனை உள்ளடக்கியது. மேலும், நீண்ட கால முதிர்வு நீட்டிப்பு, வட்டி விகிதங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளது.
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் உள்ள கடனை உள்ளடக்கிய சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நாடு ஒப்பந்தம் செய்து கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு OCC மற்றும் இலங்கை இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) மற்றும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் கடன் முறைமைகள் தொடர்பான இலங்கையின் கொள்கை ரீதியான ஒப்பந்தங்கள் EFF இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன.
உத்தியோகபூர்வ கடனளிப்பவர்களுடனான ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதும் கையொப்பமிடுவதும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்நிலையில், சீர்திருத்த வேகத்தையும், சீர்திருத்தங்களின் வலுவான உரிமையையும் நிலைநிறுத்துவது ஒரு முழுமையான மற்றும் விரைவான மீட்சியை உறுதி செய்வதற்கு இன்றியமையாதது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.