13/04/2024
📌 #ஆசிரியர்_தலையங்கம்
மீண்டும் ராஜபக்ச பூச்சாண்டி!!!
போரின் பின்னரான ஜனாதிபதித் தேர்தல்களின் போது தமிழ் மக்களின் பிரதான அரசியல் தரப்பாக விளங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானங்கள் கால ஓட்டத்தில் தவறானவையாகவே மாறியிருக்கின்றன. ராஜபக்சக்களை வீழ்த்துதல் என்ற ஒற்றைப்புள்ளியை மையப்படுத்தியதாக எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானங்கள் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தரவில்லை. மாறாக தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட நன்மைகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கூட இதே சாரப்பட ஒரு குற்றச்சாட்டை கூட்டமைப்பின் தலைவராக இருந்த சம்பந்தன் மீது சுமத்தியிருந்தார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எப்போதுமே ராஜபக்சக்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை. அவர்களைத் தோற்கடிப்பதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். அதனால் தான் போரை நடத்திய இராணுவத்தளபதி பொன்சேகாவுக்கு கூட வாக்களித்திருந்தார்கள். அதன் பின்னரான தேர்தல்களிலும் ராஜபக்சக்களை எதிர்த்து களமிறங்கிய ஒருவரை ஆதரித்திருந்தார்கள். இந்தப் பின்னணியிலும், ஒவ்வொரு தேர்தல்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்குமாறு கோரும் போது 'அது ராஜபக்சக்களுக்கு ஆதரவான நகர்வு' என்ற பரப்புரையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் முன்வைத்திருந்தது. ஆனால் தாம் ஆதரவளித்த வேட்பாளர்கள் ஆட்சியில் அமர்ந்த பின்னர் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் மக்களுக்காக அவர்களிடம் எதனைப் பெற்றுக்கொடுத்தார்கள். நல்லாட்சி க்காலத்தில் மைத்திரி -ரணில் அரசாங்கத்தை தாங்கள் கொண்டு வந்ததாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிலும் குறிப்பாக சம்பந்தன் - சுமந்திரன் இருவரும் பகிரங்கமாகக் கூறிவந்தனர். அந்த அரசாங்கத்தைப் பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் தமிழ் மக்கள் முன்னெடுக்கக்கூடாது என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் விந்தையானது. அதாவது தெற்கில் மீண்டும் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்களாம். இதைச் சொல்லியே நல்லாட்சிக் காலத்தில் முட்டுக்கொடுத்தார் சம்பந்தன். நல்லாட்சி அரசின் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாக்கம் என்று சொல்லியே சம்பந்தன் - சுமந்திரன் இணை காலம் கடத்தியது. கடைசியில் புதிய அரசமைப்பும் வரவில்லை. ஒன்றும் நடக்கவில்லை. தமிழ் மக்கள் குழப்பாமலேயே ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.
இப்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னிலங்கையில் ஜே.வி.பி. சார்பில் அநுரவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித்தும், ஜனாதிபதி ரணிலும் களமிறங்குவது இதுவரை உறுதியாகியிருக்கின்றது. பொதுஜன பெரமுன சார்பிலும் ஒருவர் நிறுத்தப்படக்கூடும். இவர்களில் யாருக்காவது வாக்களிக்கக் கூடிய மனநிலையில் தமிழ் மக்கள் இல்லை. போரின் பின்னரான ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்சக்களுக்கு எதிரானவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடிய தென்னிலங்கைத் தலைவர்கள் அதன் பின்னர் தமிழ் மக்களை 'அம்போ' எனக் கைவிட்டமைதான் வரலாறு. அப்படியிருக்கையில் இப்போது களமிறங்குபவர்களில் எவரும் தமிழ் மக்கள் ஆதரிக்கக் கூடியவர்கள் இல்லை. இதனால், தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற இரண்டு தெரிவுகள் மாத்திரமே தமிழ் மக்களிடம் உண்டு. அந்தத் தெரிவுகளை நோக்கி தமிழ் மக்கள் செல்லும் போது மீண்டும் ராஜபக்ச எதிர்ப்பு என்ற அதரப்பழசான புராணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கையில் எடுத்திருக்கிறார். கடந்த காலங்களில் அவர் முன்வைத்த இந்த ராஜபக்ச எதிர்ப்புக்கோசத்தால் தமிழ் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? அதைச்சீர்தூக்கிப் பார்த்த பின்னரே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் அணுகவேண்டும்.
(11. 04.2024-உதயன் பத்திரிகை)
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன்