12/10/2024
கேதார கௌரி விரதம் (12/10/2024 to 31/10/24)
இவ்வருடம் கேதார கௌரி விரதமானது ஆங்கில அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெறுகிறது.
இவ்விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. இருபத்தொரு நாட்ளைக் கொண்ட மஹோன்னத விரதம் இதுவாகும்.
சிவனுக்குரிய சிறந்த விரதங்களில் இவ்விரதமும் ஒன்றாகும். இவ்விரதம் அம்மன் மற்றும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்களுக்கு 21 நாட்கள் அமைந்த பிள்ளையார்கதை விரதம் போல பெண்களுக்கு 21 நாட்கள் அமைந்த கௌரி விரதமாகும்
மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டும் என்றும் மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிப்பர். ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிப்பதுண்டு.
எந்த விரதமாக இருந்தாலும் விரத ஆரம்ப நாளில் விநாயகர் பிடித்து வைத்ததே விரதத்தினை ஆரம்பிக்க வேண்டும். களிமண் அல்லது மாட்டுச் சாணம் அல்லது சந்தனம் அல்லது மஞ்சள் ஆகியவற்றில் ஒன்றினால் பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல் குற்றி பூசை அறையில் வைத்து விநாயகராக வழிபடல் வேண்டும்.
விரத நாட்களில் தினமும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைப் பொங்கல், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை படைத்து கௌரி நோன்பு பாடல் படித்து வழிபடல் வேண்டும்.
விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இருபத்தோராவது திதியான இறுதி நாளன்று அந்நூலை கோயில்களில் குருக்களைக் கொண்டும் அல்லது வீடுகளில் தாமாகவேனும் ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.
விரத வரலாறு
மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என் அழைப்பர். அப்படியான இமயமலை கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதிதேவி சிவனை நினைந்து சுயம்பு லிங்கத்தினை வழிபட்டு கேதார கௌரி நோன்பிருந்து அதன் பலனாக சிவனுடன் பாதியாக அதாவது அம்மை, ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவராக இணைந்து கொண்டார் என்பது புராணம். சிவனை நோக்கி இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும் தேவி வழிபட்டபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.
விரிவான வரலாறு
முன்னொரு காலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்து. பிருங்கிகிருடி முனிவரின் நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலாயமலையை விட்டுத் தவம் செய்வதற்காக இமயமலை கேதாரப்பகுதியில் கௌதம முனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் தோன்றினான். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று “அங்கனமே ஆகுக” என்று அருள் புரிந்தார் என்பது புராணம்.