01/09/2021
சுரண்டப்படும் புன்னை மண்ணின் இயற்கை வடிகால்
புன்னைக்காயல் கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தின் மற்ற கடற்கரை ஊர்களை போன்ற மணற்பகுதியான நில அமைப்பைக் கொண்டதில்லை (கடற்கரை பகுதியை தவிர). இதற்கு காரணம் தாமிரபரணி ஆறு. தாமிரபரணி ஆறு பல கிளைகளாகப் பிரிந்து இங்கு கடலுடன் கலப்பதால் தீவுப் போன்ற பல கழிமுகப் பகுதிகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு பகுதியில் தான் நமது கிராமமும் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஊருக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படுவது காலம் காலமாக தொடர்ந்து வருவது தான். தாமிரபரணியின் கடைமடைப் பகுதியாக இருப்பதால் வெள்ளப்பெருக்கு என்பது நாம் வழக்கமாக எதிர்கொள்ளும் ஒன்று தான். ஆனால் எந்த நதியால் வெள்ளப்பெருக்கை நாம் எதிர்கொண்டேமோ அதே நதி அந்த வெள்ளப்பெருக்கை வடிய வைக்கும் வடிகால்களையும் நமக்கு தந்து உதவியதுதான் அதன் சிறப்பு. ஆனால் அது இன்று அறியாமையாலும், ஒரு சிலரின் பேராசையாலும் ஆக்கிரமிக்கப்பட்டும் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டும் கொண்டிருக்கிறது. அதுதான் சவேரியார் கோயில் பகுதி வழியாக ஓடும் ஆறு.
இக்கிளை ஆறானது நூறு வீடு தெற்கு பகுதி வழியாக ஓடும் கிளை ஆறில் இருந்து பிரிந்து பவுலா நகர், இருதயபுரம், சவேரியார் ஆலயம், தெற்குத் தெரு வழியாக கடற்கரை பகுதியை அடைகிறது. ஒருகாலத்தில் எப்போதும் தண்ணீர் நின்று கொண்டிருந்த (backwaters) இந்நதியில் மீன், இறால், நண்டு எப்போதும் கிடைத்து கொண்டிருந்தது. ஆனால் எப்போது இந்த கிளை தண்ணீர் (backwaters) இன்றி வறண்டுப்போனதோ அப்போதிருந்து ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த இந்த கிளை ஆறு தான் இவ்வளவு காலம் புன்னையில் பெய்த பெருமழையையும், தாமிரபரணியால் ஊருக்குள் வந்த வெள்ளப்பெருக்கையும் கடலுக்குள் கொண்டு செல்லும் வடிகாலாக பயன்பட்டு வந்திருக்கிறது. (இனி இந்த கிளை ஆறை பின்வரும் பத்திகளில் புரிதலுக்காக சவேரியார் வடிகால் என்று குறிப்பிட்டுள்ளேன்)
சவேரியார் வடிகாலின் ஓரத்தில் தெற்குப்பகுதியில் உள்ள 60 வீடு, நூறு வீடு பகுதியில் பெய்யும் மழை நீரும், வடக்குப் பகுதியில் உள்ள பவுலா நகர், இருதயபுரம் பகுதியில் பெய்யும் மழை நீரும் இயற்கையாகவே இவ்வடிகால் வழியாக வழிந்து கடலுக்கு சென்று விடும். மேலும் தெற்குத் தெருவின் பள்ளமான பகுதியான அந்தோணியார் கோவில் பகுதியில் தேங்கும் வெள்ள நீரும் சவேரியார் வடிகாலின் வழியாகவே வடிந்து கடலுக்கு செல்லும். இந்தப் பகுதிகள் மட்டுமில்லாமல் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் வேளாங்கண்ணி மாதா கோவில் பகுதியிலிருந்தும், மறக்குடி தெரு பகுதியிலிருந்தும் வெள்ளமானது வடக்குப் பகுதியில் உள்ள ஆறின் மூலமாக வெளியேறாமல் ஆத்தூர் மெயின் ரோட்டைக் கடந்து இருதயபுரம் மற்றும் பவுலா நகர் பகுதிகளில் நுழைந்து சவேரியார் வடிகாலின் மூலமாகவே வெளியேறும். இதற்கு கடந்த வருட வெள்ளமே உதாரணம் எப்படி மெயின் ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது, வேளாங்கண்ணி மாதா கோவில் பகுதிகள் மற்றும் மறக்குடித் தெரு பகுதிகளில் உள்ள மழை நீரானது எங்கெல்லாம் ரோட்டை கடந்து புனித ஜெபஸ்தியார் கெபி, தெருக்கள் வழியாக சவேரியார் வடிகாலை சென்றடைந்தது என்று.
இப்படி ஊரில் தேங்கும் 70 சதவீத வெள்ளநீரை வெளியேற்றும் இவ்வடிகாலின் முக்கியத்துவம் அறியாமல் அதனை நில ஆக்கிரமிப்புக்கும், குப்பை கொட்டுவதற்குமான இடமாகவும் மாற்றி வைத்திருக்கிறோம். வடிகாலின் கரையோரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு உள்ளது (இடுகாடு உட்பட). வடிகாலுக்குள் நீர் வழிந்து செல்ல வழியில்லாமல் வீடுகள் குறுக்கும் நெடுக்குமாக தமக்கு ஏற்றார் போல் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் இப்பகுதிகளில் மக்களிடையே சண்டை வேறு, எங்கள் வீடு வழியாக தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோமென்று. இந்த பிரச்சினை போதாதென்று புதிது புதிதாக வீடுகள் வடிகாலுக்குள் உருவாகி கொண்டிருக்கிறது. ஆற்றில் ஆங்காங்கே வீட்டிற்கான அஸ்திவாரங்கள் தென்படுகின்றன. இதுதான் மிகப்பெரிய ஐயமாக இருக்கிறது, காலப்போக்கில் வடிகால் முழுவதுமே வீடுகளால் நிரம்பி விடுமோ என்று. ஆற்றுக்குள் வீடுகள் கட்ட ஊர் நிர்வாகமும், பஞ்சாயத்து அமைப்பும் எப்படி அனுமதிக்கிறது? இயற்கை நீர் வழிப்பாதையை மூடி எதன் வழியாக வடிகால்கள் அமைக்கப் போகிறோம்? பெருநகரங்களில் செய்யும் குளங்களையும் நீர் வழிப்பாதையும் மூடி அதில் பிளாட் போட்டு விற்கும் அற்பத்தனமான புத்தியால் அவை எவ்வளவு துன்பப்படுகின்றன என்பது நாம் அறிந்ததே. கடும் மழைக்காலங்களில் ஊரில் பெய்யும் மழை நீரும் வெளியேற வடிகால் அவசியம் என்பதை புரிந்து கொள்ள மறுப்பதேன்? தண்ணீர் வெறியேறாமல் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவ காரணமாகவும் அமைகிறது.
ஒரு சிலர் தடுப்பணை கட்டப்படுகிறது, இனி ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்படாது என்று சொல்லிக்கொண்டு திரிகின்றனர். கடந்த வெள்ளப்பெருக்கின் போது தாமிரபரணியில் 70000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இவ்வளவு தண்ணீரையும் கடைமடைப் பகுதியில் உள்ள இரண்டு அடி உயரமுள்ள தடுப்பணை கட்டுப்படுத்தி விடும் என்று எண்ணுவது எவ்வளவு மடத்தனமானது. கடைமடை தடுப்பணை கட்டுவது நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காகவும் கடற்கரையில் இருந்து உவர் நீர் ஊடுருவி நிலத்தை உப்பாக்கி விவசாய நிலங்களை பாழ்படுத்த கூடாது என்பதற்காகவும் தான். அது புன்னையின் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வல்ல. தீர்வென்பது வடிகால் பகுதிகளை தூர்வாரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி மழை நீரானது ஒவ்வொரு தெருவிலிருந்தும் எந்த ஒரு தடங்கலுமின்றி வடிகால்களை அடைய நீர்வழிப்பாதையை உருவாக்குவது தான். மேலும் அந்த சவேரியார் வடிகாலில் நூறு வீடு பகுதிக்கு செல்ல கட்டப்பட்ட பாலமும் ஆய்வு செய்யப்பட வேண்டியதே. அப்பாலம் குழாய் அமைப்பில் கட்டப்பட்டுள்ளதால் கடுமையான வெள்ள நேரங்களில் விரைவாக தண்ணீர் வெளியேற அனுமதிப்பதில்லை. வெள்ள நீர் வடிவதற்கு காலம் எடுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.
ஆதலால் போனது போகட்டும் இனியாவது ஊர் நிர்வாகமும், பஞ்சாயத்து நிர்வாகமும் அனைத்து வடிகால் பகுதிகளையும் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தாமல் தூர்வாரி, தூய்மைப்படுத்தி, கரையோரம் உள்ள வீடுகளை ஒழுங்குபடுத்தி நீர் வழிப்பாதையை அமைக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஊரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தகுந்த நபர்களிடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வடிகால்கள் பகுதிகளை ஆக்கிரமித்து விட்டு வரப்போகும் காலங்களில் இன்னும் கடுமையான வெள்ளங்களை எதிர்கொள்ள புன்னை மக்கள் தயார் படுத்திக்கொள்வோம்.
நன்றி
Admin -