11/09/2023
#கருப்பு
மணி 9:15 கடந்து கொண்டிருந்தது அவசர அவசரமாக மனைவியிடம் மதிய உணவை வாங்கிக் கொண்டு ஓடிவந்த என் செல்ல மகளுக்கு ஒரு முத்தத்தையும், தவழ்ந்து வந்த என் தங்க மகனுக்கு இன்னொரு முத்தத்தையும் கொடுத்துவிட்டு, மறந்துவிட்ட தலைக்கவசத்தை மனைவி வேகமாக எடுத்து வர... என் இரு சக்கர வாகனத்தை இயக்க ஆரம்பித்தேன்.
அன்று திங்கள் கிழமை என்னை போன்ற சராசரி மனிதர்கள் வேகமாக ஓடும் அதிகாலை. எப்பொழுதும் செல்லும் அதே வழியில் 15 நிமிடத்தில் பள்ளியை சென்றடைய வேண்டும் என்ற பதட்டத்தில் சற்று அதி வேகமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன்..
சற்றும் எதிர்பாராத நேரத்தில் செல்லச் சண்டையுடன் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குட்டி நாய்கள் விரட்டி பிடிக்க ஆரம்பித்தனர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு சாம்பல் நிற நாய்க்குட்டி துரத்த கருப்பு நாய்க்குட்டி என் வண்டியை நோக்கி பாய்ந்தது.
பதறிப் போன நான் மொத்த கவனத்தையும் வண்டியின் மீது செலுத்தி வண்டியை நிறுத்த முற்பட்டேன் ஆனால் வண்டியின் வேகம் காரணமாக என் கட்டுப்பாட்டை மீறி அந்த கருப்பு குட்டியின் கால்கள் மீதும் வாயின் மீதும் மோதி...
பதறிப் போனேன் என் கைகள் நடுங்கின, நிலை தடுமாறி அந்த வண்டியை நிறுத்தி விட்டேன். பசியில் பாலுக்காக அழும் குழந்தையின் அழுகை சத்தம் விட பல மடங்கு சத்தமாக அழுவது அந்த குட்டி நாய். அந்த நாய்க்குட்டியை தூக்க ஓடிய போது அந்த குட்டி நாய் தாயானது பாசப் போராட்டத்தோடு குட்டி நாய் நோக்கி ஓடி வந்தது.. அந்த வாயில்லா இரண்டு ஜீவன்களின் மொழி எனக்கு தெரியாது ஆனால் இரண்டு ஜீவன்களும் தன் வலியையும் வேதனையும் பரிமாறிக் கொண்டன.
கைகள் இல்லாத தாய்க்கு நாக்கை கைகளால் மாறி அந்த குட்டி நாயின் கால்களை தடவி கொடுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இன்னும் சில நாய்கள் அந்த குட்டி நாயக்கும், தாய் நாய்க்கும் ஆறுதலாய் சூழ்ந்து கொண்டு குறைக்க ஆரம்பித்தனர்.. நான் அந்த நாய்க்கு ஆறுதல் சொல்வதா, நாய்க்குட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக என்ற குழப்பத்தில் அதன் பாசப் போராட்டத்தையும் அந்த குட்டி நாயின் வேதனையும் ஒரு குற்றவாளியாய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் கூடி நின்ற மற்ற நாய்களோடு சேர்ந்து அந்த தாய் நாயும் அங்கு அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் துரத்த ஆரம்பித்தனர். அதற்கு தெரியாது அந்தக் குட்டி நாயை இடித்த குற்றவாளி அதன் அருகில் தான் இருக்கிறேன் என்று.
சிறிது நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு மனிதர்கள் என்னை நோக்கி வந்தார்கள் "சார் அது ஒன்றுமில்லை நீங்க கிளம்புங்க சார் நாங்க பார்த்துக்கிறோம் ஆனால் பாவம் சாரு குட்டி நாய் அடிபட்டுருச்சு அது ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும் ஒரு 200 ரூபாய் மட்டும் கொடு சார் ஆட்டோவுக்கு வேணும் என்றார்கள்" அவர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது அவர்களின் எண்ணம் அந்த குட்டி நாயை காப்பாற்றுவது அல்ல என்னிடம் பணம் பறிப்பது தான்.
"இல்லண்ணே வாங்க என் வண்டியில வச்சு கூட்டிட்டு போனேன் நீங்க யாராவது ஒரு ஆளு வாங்க அந்த நாயை தூக்கி வச்சுக்கோங்க என்றேன் " இல்ல தம்பி எங்களுக்கு வேலை இருக்கு நீங்க வேற ஆளை வைத்து கூட்டிட்டு போங்க என்று கூறி அங்கிருந்து விலகிச் சென்றனர்.
ஒரு குட்டி நாய்க்கு அடிபட்டதும் அந்த பகுதியில் இருந்த எல்லா நாய்களும் ஒன்று கூடி அதற்கு நீதி கேட்டு எல்லா வாகனங்களையும் விரட்டி விரட்டி தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த மனிதர்களும் எந்த நொடியில் எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் அதை தனக்கு சாதகமாகவும் லாபம் ஆகும் மட்டுமே என்னும் இந்த உலகம்.
சிறிது நேரத்தில் அந்த குட்டி நாயும் கத்தும் சத்தம் குறைந்தது எழுந்து நடக்க ஆரம்பித்தது ஆனால் அதன் கண்ணீர் மட்டுமே நின்றது வாயில் சிறிது ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. தன் குட்டியின் காயத்திற்கு தன் நாக்கின் மூலம் மருந்தை தடவிக் கொண்டே அந்த தாய் நாய் அரவணைத்துக் கூட்டிச் சென்று.
பெருந்துயரம் என் மனதில் பற்றி கொன்றாலும் அந்த குட்டி நாய் பிழைத்து விட்டது என்ற ஆறுதலோடு கனத்த இதயத்தோடு வீடு வந்து சேர்ந்தேன். என் இரண்டு குழந்தைகளின் அப்பா என்று ஆனந்த சந்தோசத்தில் என்னை ஓடி வந்து கட்டியணைத்தார்கள் என் கண்களில் கட்டி வைத்திருந்த மடை திறந்து கொட்டி தீர்த்தது..
தினம் தினம் அந்த சாலையில் தான் செல்கிறேன் , அந்த இடத்தில் மெதுவாகத்தான் செய்கிறேன் அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் அந்த கருப்பு குட்டியை பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்தோடு தினமும் கடந்து கொண்டிருக்கிறேன், ஒரு வாரம் கடந்து விட்டது ஒரு முறை கூட அந்த கருப்பு குட்டி என் கண்ணில் படவில்லை ஆனால் உயிருடன் இருக்கும் என்று நம்பிக்கையில் எனக்கு நானே ஆறுதல் சொல்லி கடந்து கொண்டே இருக்கிறேன்...
மனிதர்களையும் மட்டும் நேசிக்கும் நான் மற்ற உயிரினங்களையும் நேசிக்க சில நேரங்களில் மறந்து தான் போகிறோம்....
#கனத்த_இதயத்துடன்
#சிவனேஷ்_பூசைத்துரை
#சிபூ