01/01/2024
ஒரு சகாப்பதம் கண் முன்னிருந்து நிறைவுபெற்றது. ஐம்புலன்களின் உதவியோடு கண்டு கேட்டு அனுபவித்துணர்ந்த ஞானம் இன்று மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தகரணங்களுக்குள் அடங்கி நிற்கிறது.
திருமந்திரம் எனும் ஞானப் பெட்டகத்தின் திறவுகோலைத் தந்தவர், அதன் மூலம் பல்வேறு ஞானியர்களின் வாக்குகளை, வேதத்தின் சாரத்தை கற்றுணர வழி காட்டியவர். பக்தி, கர்மம், யோகம், ஞானம் என்ற மார்க்கங்களில் ஒன்றன்றி மற்றதல்ல, ஒவ்வொன்றும் பிறிதல்ல என்ற உண்மையை தெளியச் செய்தவர், இந்த ஊனுடம்பை ஆலயமாக்கும் சிவசூர்யனைக் காட்டித் தந்தவர். அனைத்தும் அன்னையே எனும் சக்தியின் வியாபகத்தை ஒவ்வொரு அணுவிலும் விளங்கிக் கொள்ள அடிகோலியவர், ஒரு சொல்லுக்கு, அது அமைந்த வரிக்கு அவர் கூறும் பொருளை புரிந்து கொள்ள நாமும் அவரோடு பல யுகங்களுக்கு பயணப் படவேண்டும், தமிழாய்ந்த அறிஞரில்லை ஆனால் அவர் சொல்லும் விளக்கம் தவறென்று நம்மால் மறுதலிக்கவே முடியாத கோணத்தை நம் முன்னிருத்தும். அதில் நாமும் பயணிக்கத் துவங்க வேறொரு உலகத்தையும், வாழ்வையும், யுகங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அண்டத்திலும் பிண்டத்திலும் விரவி நிற்கும் புறக்கண்கள் விளங்கிக் கொள்ள முடியாத பல காட்சிகளை அகக் கண்கள் உணர்ந்து கொள்ளும். நம்முள்ளும் புறமும் உலவும் பல மாயங்களை உணர்த்தியவர் எல்லா மாயங்களையும் தாண்டிய பேரறிவை உணர்வதே உயர்ந்த ஞானமென்று உணர்த்தியவர், இதுவே பேரானந்தமென்னும் நிறைவைத் தந்தவர்.
ஜென்ம ஜென்மாந்திர தொடர்ச்சியில், இந்தப் பிறப்பில் இவரை ஞானியாக, குருவாக, சித்தராக அறிந்து கொள்ள, அவரோடு சில காலம் பயணிக்கக் கிடைத்த பொன்னான தருணங்கள் இந்த சில வருடங்கள். ஞானம், முக்தி, பிறவாமை, இறவாமை, கடவுள், பிரபஞ்சம், மனிதர்கள், உலகு, உறவுகள், கனவு, நினைவு, நூல்கள், ஞானியர்கள், இப்படி என்னுள் இருந்த அத்தனை கற்பிதங்களையும் உடைத்தெறிந்து உண்மையை உணர்த்தியவர். எளிதில் புரிந்து கொள்ள முடியாத அவருடைய மொழியின் வெளிப்பாட்டில் பலர் குழப்பத்தில் அகன்று சென்றதுண்டு, எளிய சொற்கள் தான் ஆனால் உடன் பயணிப்பவரின் புரிதலுக்கு தக்கவாறு அதன் அடுக்குகள் விரிந்து செல்லும், ஆழத்தை உணர்த்தும்.
பகவான், பகவான் ஸ்வாமிகள், சக்திவேலன் ஸ்வாமிகள் என்றும் இன்னும் பலவாகவும் அவரை அறிந்தவர்களால் அன்போடு அழைக்கப் பெற்று கோவையில் ஸ்துலமாக இருந்து ஆட்சி செய்தவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அனைத்திலிருந்தும் விடுபட்டு தனித்திருக்கத் துவங்கியவர் அதை சூட்சுமமாக உணர்த்தியவர் 30 டிசம்பர் 2023 தன்னுடைய ஸ்தூலத்தில் இருந்தும் விலகிக் கொண்டார். அந்த பரத்தோடு கலந்திருக்கும் அவரது ஆன்மா தங்கியிருந்த அந்த உடலைக் காண்கையில் அந்த முகத்தில் தேங்கியிருந்த நிறைவும், அமைதியும், தெளிவும் உணர்த்தியது முக்தி எது என்பதை பேரானந்தம் எது என்பதை. கை கையாக அள்ளி கொட்டிய திருநீறும், வில்வமும் துளசியும், உப்பும் இன்றும் என்றும் கைகளில் கைகளில் உணர்வாக உறைந்து நிற்கும் என்று தோன்றுகிறது. அவர் அளித்த எளிய ஆனால் ஆழம் பொதிந்த வஸ்துகள், அவர் நேற்றும் இன்றும், நாளையும் மட்டுமில்லை, காலம் கடந்து நிற்பவர் என்ற உண்மையை இந்த உள்ளம் என்றோ உணர்ந்திருந்திருக்கிறது என்றுணர்ந்த நொடி தந்த தெளிவு புதியது அதுவே பேரானந்தம்.
சத்தியத்தையும் தர்மத்தையும் இந்த கலியுகத்தில் தொடர்ந்து உணர்த்திக் கொண்டிருப்பதொன்றே அவர் காட்டிய வழி அதைத் தொடர்ந்து செய்யும் வலிமையையும் தெளிவையும் அவரை தொடரும் அனைவருக்குள்ளும் ஊட்டிச் சென்றிருக்கிறார். அந்தந்த நிலத்திற்கேற்ப விதை வளரும், வினை நிகழும். ஜன்னல்களும் கதவுகளும் மூடிய அறைக்குள் நிறைந்திருக்கும் சாம்பிராணி புகை போல உள்ளே முழுவதுமாக வியாபித்திருக்கிறது அவரது ஞானம். அதுவே சிவசூர்யாலயம்.