21/08/2023
மொழிவழி ராஜ்யம் - ஜனநாயகத்தின் ஒரு முக்கிய படி!
தமிழர்கள் ஆட்சி உரிமைபெற்ற ஒரு இனமாக மலர வேண்டுமானால்,
1.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்தும் பொருட்டு நம் மீது திணித்த ஆங்கில மொழியை அதிகார மொழி என்ற நிலையிலிருந்து விரட்டவேண்டும்;
2. ஆங்கிலத்திற்குப் பதில் இந்தியைக் கட்டாய ஆட்சி மொழியாக்கக் கைக்கொள்ளும் முயற்சியை எதிர்த்து முறியடிக்கவேண்டும். இந்திய யூனியனிலுள்ள பல்வேறு மொழிகளுக்கிடையில் பரஸ்பரம் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்;
3. இந்திய யூனியனின் பாராளுமன்றத்திலும் சர்க்கார் நடவடிக்கைகளிலும் தமிழ்மொழி மட்டும் தெரிந்தவர்களுக்கு, அந்த மொழியில் பேசவும் எழுதவும் உரிமை வேண்டும். தமிழில் பேசப்படுவதை, எழுதப்படுவதை மொழிபெயர்த்து மற்ற மொழியினர்க்குத் தெரிவிக்கவும், மற்ற மொழியினர் பேசுவதை, எழுதுவதை தமிழில் பெயர்த்துத் தரவும் தகுந்த உரிமை அளிக்கப்படவேண்டும்;
4. சட்டசபையிலும் சர்க்கார் அலுவலகத்திலும், நமது சர்க்கார் நிர்வாகத்தின் சகல துறைகளிலும் உபயோகிக்கப்படும் மொழி நமது தாய் மொழியாகிய தமிழாகவே இருக்கவேண்டும். இது நடைமுறையில் வரும் பொருட்டு, தமிழ் மக்கள் பெருவாரியாக வாழ்வதும், ஒட்டிக் கிடப்பதுமான பிரதேசங்களை உருட்டித்திரட்டி, ஐக்கிய தமிழகமாக்கி, ஒரு தனி ராஜ்யம் அமைக்கவேண்டும்.
இவ்வாறு ஐக்கிய தமிழகம் உருவானால் மட்டுமே 3 கோடி தமிழ் மக்களுக்கும் ஆட்சியின் சகல துறைகளிலும் பங்கெடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் வசதியும் ஏற்படும்.
இதனால்தான் ராஜ்ய உருவாக்கத்தில் மொழிக்கு முதல்பெரும் முக்கியத்துவம் உண்டென்று கூறுகிறோம். இதில் மொழிக்குரிய இந்த முதல்பெரும் முக்கியத்தன்மையை மறுப்பவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஆட்சி முறையில் சர்வசாதாரணப் பொதுமக்களுக்கு இருக்கவேண்டிய முதற்பெரும் ஸ்தானத்தை மறுக்கிறார்கள்.
அதிகார பீடங்கள், அநியாயத்திற்குப் பொங்கலிட்டுப் பூசை போடும் ஆதிக்கக் குழுவின் செல்லப் பிள்ளைகளான ஒருசில மெத்தப் படித்தவர்களின் பாசறைகளாக இருக்கட்டும்; சாதாரண மக்களுக்குப் புரியாத - தெரியாத அரசியல் தந்திர விளையாட்டுகள் நடைபெறும் இரகசியக் குகைகளாக இருக்கட்டும் என்று விரும்புகிறார்கள்.
- ப.ஜீவானந்தம்