11/07/2024
கார்த்திகை மாதம் வந்து விட்டது.
ஶ்ரீ லங்கா நாடாளுமன்ற தேர்தலும் இம்முறை கார்த்திகையில் வருகிறது.
அண்மைக்காலங்களில் தென்னிலங்கை கட்சிகள் சார்பாக போட்டியிடுபவர்கள் , முன்னர் அவர்களுக்கு அடிவருடி இப்போது தனித்து போட்டியிடுபவர்கள் என அனைவரின் இலக்கும் தமிழ் தேசியத்தை இத்தோடு ஒழித்து விடுவது என்பதாக இருக்கிறது.
அதற்கு அவர்கள் மக்களை தங்கள் பக்கம் இழுக்க காட்டும் கவர்ச்சிகளாக ஊழல் எதிர்ப்பு , அபிவிருத்தி , பொருளாதார வளர்ச்சி என பல சில்லறைகளை சிதற விடுகிறார்கள்.
ஆனால் இன்னும் ஏன் அவர்கள் சொல்லவில்லை
" காணாமல் போன உங்கள் பிள்ளைகளை பற்றி இனி பேச யாரும் வர போவதில்லை அவர்களை மறந்து விடுங்கள் " என்பதை.
" பிடுங்கப்பட்ட உங்கள் காணிகள் தரப்பட போவதில்லை அவற்றை மறந்து விடுங்கள் " என்பதை.
" உங்கள் வழிபாட்டு தலங்கள் உங்கள் நிலங்களில் முளைக்கும் புத்த சிலைகளை , புத்த வழிபாட்டு தலங்களை பற்றி நாம் கவலைப்பட போவதில்லை " என்பதை.
" உங்களுக்காக வீழ்ந்த உங்கள் பிள்ளைகள் உறங்கும் பூமிகள் இனி சூறையாடப்பட்டு அழிக்கப்படும் , நினைவுகள் இல்லாது செய்யப்படும் " என்பதை.
" வெறும் அற்ப சலுகைகளை காட்டி இப்போது வளரும் தலைமுறைகள் தனித்துவம் இல்லாத , அடையாளம் இல்லாத , இனமாக இனி வரும் காலத்தில் மாற்றப்படும் " என்பதை.
இதுபோல எரளாம் உண்டு.
தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள் இவற்றை ஏன் சொல்லவில்லை.
ஒரு காணாமல் போன மகனின் தாயிடம் , கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு மகளின் தந்தையிடம் , தன் நிலம் இழந்து புலம் பெயர்ந்து அலையும் ஒரு அண்ணனிடம் , இன்று கடந்து போனவை அறியாத தம்பி தங்கைகளிடம் ஏன் நீங்கள் இவற்றை விளக்கமாக சொல்லவில்லை.
இல்லையெனில் " மறப்போம் மன்னிப்போம் " என வாசகம் கொண்டு வருவதாக இருந்தால் அதை யார் சொல்ல வேண்டும் தெரியுமா??
ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு மூன்று பிள்ளைகளை இனத்திற்கு காவு கொடுத்து விட்டு அன்றாடம் முதுமையிலும் சுயமாக உழைத்து வாழும் முதுமை பெற்றோர் சொல்லட்டும்.
சிறை கூடங்களில் சித்திரவதை அனுபவித்து வாழ்வின் பாதி இழந்தவன் சொல்லட்டும்.
நிலைதை இழந்தவன் சொல்லடும், வாழ்வை இழந்தவள் வந்து சொல்லட்டும்.
எங்கள் மக்களே..!!
ஆண் பெண் பேதமின்றி உங்களை உயிரினும் மேலாக நினைத்து இன்னுயிர்களை ஈகை செய்த பிள்ளைகளை நினைவில் கொள்ளுங்கள்.
தன் வாழ்வும் , குடும்பம் தான் உருவாக்கி வளர்த்த ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் என அனைத்தையும் அந்த உயர்வான உங்களின் மகன் நந்தி கடலோரம் தியாகம் செய்த காரணம் என்ன??
அவர் சலுகைகளை அன்றே ஏற்றுக்கொள்ளாத காரணம் என்ன??
அப்படி ஏற்றுக்கொண்டு அவர்கள் அனைவருமே சொகுசாக வாழ்ந்து இருக்கலாம் அல்லவா??
லட்சம் மக்களும் , ஆயிரத்தில் மறவர்களும் இன்று சுக போகம் கண்டிருக்கலாம் அல்லவா??
அவர்கள் எதற்காக அப்படி செய்யவில்லை.
எங்கள் உறவுகளே , நாங்கள் எப்போது இப்படி மாறினோம்??
எத்தனை பொருளாதார தடைகளை கடந்து விட்டோம்.
மண்ணெண்ணெய் ஊற்றி வாகனம் ஓடினோம் , பனம்பழத்தில் ஆடைகள் துவைத்தோம்.
அப்போது நாங்கள் சரியாக இருந்தோம் எனில் எப்போது மாறினோம்.???
எமக்கு அனைத்தும் தேவை , அபிவிருத்தி , சமூக மேம்பாடு அனைத்துமே ஆனால் அவற்றை எமது தமிழ் தேசியம் பேசும் பிள்ளைகளை கொண்டு செய்யுங்கள்.
செய்யவில்லையா கேளுங்கள் , கேளுங்கள் உங்களுக்கு உரிமை உண்டு உங்கள் பிள்ளைகள்.
அதற்காக தென்னிலங்கை அடி வருடிகளின் காலில் விழுவது சரியா???
ஊழல் செய்யாத , பண்புள்ள , இன தேசியம் பேசும் உங்கள் பிள்ளைகளை தேர்வு செய்யுங்கள்.
தேர்தலில் எனது தனிப்பட்ட தெரிவு சைக்கிள் சின்னம்.
எனது பிரதேச வேட்பாளர் Mahathevan Nadanathevan அவர்கள்.