09/15/2024
சேலமும் பிரியாணியும்!
===================
இலங்கையில் இந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு புதுவரவு, சேலம் R.R பிரியாணி அல்லது Salem R.R Biriyani. இலங்கையில் முதல் கிளையை யாழில் திறந்து அதன் உரிமையாளரான தமிழ்ச்செல்வன் தானே முன்னின்று பிரியாணி செய்து பரிமாறுகிறாராம். பிரியாணி ரசிகர்கள் அவரது கைப்பக்குவத்தை ருசித்து, அதனை ரசித்துப் பாராட்டுகிறார்களாம்.
கடைக்குச் சென்று பிரியாணியை அங்கு சென்று சுவைப்பவர்கள் ஒருபுறம் இருக்க, தமிழில் ஏன் பதாகை இல்லை, அது சேலமா இல்லை சலீமா என்று “தமிழறிஞர்கள்” இன்னொரு புறம் சமூக வலைத்தளத்தில் மகாநாடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சிலர் சேலம் என்ற “தூய தமிழ்” வார்த்தையை எப்படி ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று மறுபுறத்தில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் பதிவுகளும் பின்னூட்டங்களும் Salemஇன் பின் செல்லத் தூண்டியதில், தேடத் தொடங்கியதில் சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.
தமிழ்நாட்டில் இருக்கும் சேலம் என்ற இடத்திற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதற்கு பல்வேறு கதைகளும் காரணங்களும் சொல்லப்படுகின்றன. இந்த இடம் சமணர்களின் முக்கிய தளமாக இருந்ததால் சைலம் என்று அழைக்கப்பட்டு பின்னர் சேலம் என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது. மலைகளால் சூழப்பட்ட பகுதி என்பதால் அசலம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. அக் காலத்தில் சேரர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி இதுவென்றும், சேரலம் என்பதே மருவி சேலம் என்று ஆனது என்று விவாதிப்போரும் உண்டு. சேலை நெசவில் பெயர் பெற்ற சேலையூர் என்ற பெயர் சேலம் ஆனது என்று கூறுவோரும் உண்டு.
அதே நேரம், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர், 1792இல் தமது நிர்வாக அலகுகளில் ஒன்றாக சேலம் மாவட்டத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர் ஏற்கனவே இந்தியாவில் பாவனையில் இருந்த சேலம் என்ற சொல்லை இந்த சேலம் மாவட்டத்திற்குச் சூட்டினார்களா அல்லது இங்கிலாந்தில் இருக்கும் Salem என்ற இடப் பெயரைப் பின்பற்றி Salem District என்று பெயர் வைத்தார்களா? என்பது விவாதத்திற்குரியது.
ஏனெனில் இந்தியாவிற்கு வெளியே Salem என்ற பெயரில் சிறு நகரங்கள், பெருநகரங்கள் அமெரிக்க, ஆஸ்திரேலியா, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பாக் கண்டங்களில் இருக்கின்றன. அமெரிக்காவில் Masssachusettes, New Hampshire, Virginia, Oregon, Indiana, North Carolina, New York, Ohio, Michigan, எனப் பல மாநிலங்களில் Salem என்ற நகரம் இருக்கிறது. அதேபோல தென்னாபிரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா (Adelaide), கனடா என்று பல இடங்களில் Salem என்ற நகரம் இருக்கிறது.
ஆனால் இந்த சேலம் (say’luhm) Shalom என்ற Hebrew வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் அர்த்தம் சமாதானம் என்று சொல்லப்படுகிறது. பைபிளில் சொல்லப்படும் புனித நகரான ஜெருசலேமைக் (Jerusalem) குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்தான் Shalom என்றும் சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கைப் பொறுத்தவரை யூதர் மற்றும் அராபியர் மத்தியில் Salem என்பது ஆட்களுக்கு வைக்கப்படும் முதற் பெயராகவும் சில குழுக்களில் குடும்பப் பெயராகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பாதுகாப்பு, அமைதியான, முழுமையான, பூரணமான என்று பொருள் வரும் இந்தப் பெயர் ஆண் பெண் இருவருக்கும் பொதுப் பெயராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அராபியர் மத்தியில் Saleem, Salem, Selim, Salim என்று வெவ்வேறு பகுதிகளில் எழுதப்படும் வழக்கம் இருந்தாலும் அங்கு சலீம் என்றே உச்சரிக்கப்படுகிறது. Selima, Salima Saleemah, Salma போன்ற பெயர்கள் Salem என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒட்டமான் பேரரசை உருவாக்கிய துருக்கியில் Selam என்ற வார்த்தை (செலம் என்று உச்சரிக்க வேண்டும்) இன்னொருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறப் பயன்படும் வார்த்தையாக இருக்கிறது. Selamun Aleykum என்ற வார்த்தைகளின் சுருக்கமே இந்த செலம்.
இப்படி சேலம் அல்லது Salem ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. எனினும் Salem என்ற வார்த்தையை அதிக இடங்களுக்குக் காவிச் சென்ற பெருமையை ஆங்கிலேயர்களே தட்டிச் சென்றுள்ளார்கள். ஆங்கிலேயர்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. தாம் செல்லுமிடமெல்லாம் இங்கிலாந்தில் உள்ள ஊர்கள், நகரங்களின் பெயரை தாம் கைப்பற்றிய உலக நாடுகளில் சூட்டும் வழக்கம்தான் அது. நான் வாழும் கனடாவிலும் ஒன்ராரியோவில் உள்ள லண்டன் நகரமும் அவ்வாறு சூட்டப்பட்ட பெயர்தான்.
தமிழகத்தில் சேலம் என்று தமிழில் பெயர் வழங்கப்பட்டாலும் ஆங்கிலத்தில் இன்றும் Salem என்று எழுதப்படுவதற்கு இந்திய நகரங்களுக்கு தமது ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டி ஆங்கிலத்தில் ஆவணப்படுத்திய ஆங்கிலேயர்களின் செல்வாக்கே காரணமாக இருக்க வேண்டும். இன்றும் இந்தியாவில் அரச ஆவணங்களில் Salem என்பதே பாவனையில் இருக்கிறது.
நாங்கள் Facebookஇல் எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும் தமிழ்செல்வனும் Salem என்பதை Selam என்று மாற்றப் போவதில்லை. தமிழக அரசும் தனது ஆவணங்களில் Selam என்று மாற்றப் போவதில்லை. எனவே வீண் விவாதங்களை விட்டு விட்டு தமிழ்ச்செல்வன் தனது கையாலே விறகடுப்பில் சமைத்துப் பரிமாறும் பிரியாணியைச் சாப்பிட்டு சந்தோசமாக இருங்கள்.
- வீமன் –