15/11/2024
"விடைபெறுகிறேன்" - ஓய்வை அறிவித்த நியூசிலாந்து ஜாம்பவான்..!!
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், முதன்மை வேகப் பந்துவீச்சாளருமான டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
அடுத்த மாதம் ஹமில்டன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக டிம் சவுத்தி அறிவித்து இருக்கிறார். அவருக்கு 35 வயது ஆகிறது. தனது சொந்த ஊரான ஹமில்டனில் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுத்து இருக்கிறார். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள டிம் சவுத்தி, அதில் 385 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சர் ரிச்சர்ட் ஹாட்லி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 431 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
டிம் சவுத்தி தனது 19 ஆவது வயதில், 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகியிருந்தார். தற்போது அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்து இருக்கிறார். ஹமில்டன் டெஸ்ட் போட்டியே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூஸிலாந்தின் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும். ஒருவேளை நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதில் மட்டும் விளையாடுவேன் எனவும் டிம் சவுத்தி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட்களையும் இவர் வீழ்த்தி இருக்கிறார். உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் டிம் சவுத்தி.