27/06/2024
பேசலாங்களா...?
சிறீலங்காவின் அடுத்த ஆறு மாதங்களுக்கான பிரதான பேசுபொருள் என்னவென்றால், அது ஜனாதிபதி தேர்தல்தான். அனுரகுமார, சஜித் ஆகிய இருவரைத்தவிர தெற்கின் ஏனைய அரசியல்வாதிகள் யாரும் விரும்பாத ஜனாதிபதி தேர்தல் இது என்பதையும், எவ்வேளையிலும் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி இத்தேர்தலை நிறுத்தவோ ஒத்திவைக்கவோ முடியும் என்பதையும் யாம் நினைவிற்கொள்வோம். அதேபோல இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அமெரிக்காவோ, இந்தியாவோ விரும்பாத தேர்தல் இது என்பதையும், அவர்கள் ரணில் விற்கிற மா சிங்கவிற்கு வெளியில் யாரையும் தேடவிரும்பாத தேர்தல் இது என்பதையும் யாமறிந்துகொள்வோம்.
இப்படியொரு தேர்தல் நாடகத்தின் பிரதான பார்வையாளர்களாகிய தமிழர்கள் மத்தியில், “தமிழ் பொதுவேட்பாளர்” என்கிற வெங்காயவெடி வீசப்பட்டுள்ளது. இந்தியாவின் 13ஆம் திருத்தத்தின் தீவிர விசிறிகளான அரசியல் தலைவர்களும், அவர்களின் தொண்டர்களும், அவர்களின் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 13 ஆகிய ”பெட்டிக்கு வெளியே” நின்று சாம்பல் அரசியல் பேசும் புதிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வெங்காய வெடியின் உற்பத்தியாளர்கள்.
உண்மையில் தமிழ் பொதுவேட்பாளர் என்பது மெல்லிய மழைநேரத்தில் கிடைக்கும் வாய்ப்பனும் பிளேன்ரீயும் போன்றது. அதாவது அருமையான விடயம் எனச் சொல்ல வருகின்றேன். 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்படியான பொழுதுகள் மூன்று தடவைகள் வந்தன. அத்தனை தடவைகளிலும் இந்த விடயம் பேசப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் எனப் பல அவதாரங்களை எடுத்த சிவாஜிலிங்கம் அய்யா இந்த விடயத்தை சிரமேற்கொண்டார். களத்தில் நின்றார். அப்போதெல்லாம் அவர் மீது வெங்காய வெடி உருவாக்குநர்கள் உமிழ்ந்த வார்த்தை, “உந்தாளுக்கு விசர்”.
தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் சிவாஜிலிங்கம் அய்யா எடுத்த முடிவும், குதித்த களமும் - காலமும் 100 வீதப் பொருத்தமானவை. ஏனெனில் அப்போதுதான் தாயகமும் புலமும் ஒரேதளத்தில் நின்றன. அப்போதுதான் இந்தச் சனத்திடம் விடுதலை ஓர்மம் ஒரு ஓரமாகவாவது ஒட்டியிருந்தது. அப்போதுதான் இந்தச் சனம் நல்லிணக்க பள்ளத்தாக்கில் விழாமல் கிடந்தது. அப்போதுதான் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் ஒரு தொலைபேசி அழைப்பிற்கே டக்கெனப் பதில் தரக்கூடியவர்களாக இருந்தனர். குறிப்பாகத் தமிழ் பத்தியாளர்கள் தம் சாத்திரப் பொத்தகங்களை தொலைத்தமை காரணமாக, சிறிதுகாலம் அமைதியாக இருந்தனர். பேராற்றுத் தண்ணீர்போல சனம் தெளிவாக ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் இப்போது நிலமையோ முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டது. சிவாஜிலிங்கம் அய்யாவுக்கும் முன்பைவிட வயதாகிவிட்டது. சலித்தும் போனார். அந்த சலிப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அவருக்கு வழங்கிய கௌரவபட்டத்தைப் பறிக்க ஒரு கூட்டம் வாசலில் வந்துநிற்கின்றது. மதிலுக்கு மேலே எட்டிப்பார்க்கிறது. தாயகம் சிதறிக்கிடக்கிறதென்றால் புலம்பெயர்தளம்மோ குதறிக்கிடக்கிறது. அங்கஜனுக்கு ஒரு கூட்டம், டக்ளசுக்கு இன்னொரு கூட்டம், பிள்ளையானுக்கு ஒரு கூட்டம், வியாழேந்திரனுக்கு இன்னொரு கூட்டம் என சனம் அபிவிருத்தி அரசியலுக்குப் பின்னால் திரண்டுபோயிருக்கிறது. இடையில் சம்பந்தருக்காகத் திரண்ட கூட்டம் மருண்டுபோய் கிடக்கிறது. இளைய தலைமுறையைப் பற்றி இவ்விடத்தில் சொல்ல என்ன இருக்கிறது. டிக்டொக், ரின், மாவா, பொயிலை, பொருள், டிசிஎல் என்று அவர்களின் உலகம் தனியானது. அந்தரத்தில் உலாத்துவது. இதையெல்லாம் மீறி போராட்டத்திற்கு வருகிற இளையவர்கள், “கிளியராக - வேறவேற ஆங்கிளில் (Angle) போட்டோ எடுத்து தாங்கோ" எனத் தொலைபேசியை நீட்டுபவர்களாக இருக்கி்ன்றனர். அவனவனுக்கு "அசைலம்"தானே இங்கே பிரச்சினை. தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகளைப் பற்றி நான் சொல்லவா வேண்டும்..! இந்தியன் தூதரக நிகழ்வுகள் தவிர வேறெங்கையும் அவர்கள் சங்கமிக்கும் கிளைகள் கிடையாது.
எனவே இப்போது காலம்கடந்து கொண்டுவரப்பட்டுள்ள தமிழ் பொதுவேட்பாளர் என்கிற வெ.வெடியால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. எங்களின் கால்களுக்குள் நாங்களே தயாரித்து வீசிக்கொண்ட இந்த வெ.வெடியானது, மிகுந்த ஆபத்திற்குள் நம்மைத் தள்ளிவிடப்போகிறது.
நாம் என்னதான் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தை தமிழ் தேசத்தின் அரசியல் தீர்மானமாக வெளிக்காட்ட முயற்சித்தாலும், அவையனைத்துமே சிறீலங்கா எனும் பௌத்த சிங்கள பெரும்பான்மைவாத ஒற்றையாட்சி சட்டங்களுக்குள் நின்றுதான் ஆற்றவேண்டும். இந்த ஒற்றையாட்சி முறைமைக்கு வெளியே நிற்கின்ற தமிழரது அரசியலை, அதற்குள் நின்று எப்படி சாதித்துக்கொள்ள முடியும்? சிறீலங்காவின் பாராளுமன்றத்திற்கு வெளியில் தமிழர்களின் அரசியலைத் தீர்மானிக்கக்கூடிய பலமானதொரு சக்தி இல்லாவிட்டால், இந்நாட்டின் ஜனநாயக அரசியல் விழுமியங்கள், நீரோட்டங்களில் கலந்து தமிழர்களால் எதனையும் சாதிக்க முடியாது என்பதற்குப் பல நூறு உதாரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு திருகோணமலையின் அரசியல் அடையாளங்களில் ஒன்று, எதிர்க்கட்சி தலைவருக்கான வாசஸ்தலத்தில் இன்னமும் குடங்கிக் கிடக்கிறது. சிங்கள மக்கள் அதற்கும்கூட கடந்த வாரம் கணக்கு விபரம் கேட்டிருந்தார்கள் என்பது வேறுசெய்தி.
தமிழர்களின் தேசம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய விடயங்களை வெளிப்படுத்துவதாக இந்தப் பொதுவேட்பாளரும், அவருக்கு அளிக்கப்படப்போகும் வாக்குகளும் தீர்மானிக்கும் என்றால், 50 வீதத்திற்கு மேலான ஆதரவை அவர் பெறவேண்டும். அப்படி பெறத்தவறின், தமிழர்கள் தேசம், தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டார்கள் எனப் பொருள்கோடலாம் அல்லவா? எனவே என்ஜிஓக்களுக்குள் ஒளிந்துநின்றபடி சிவில் சமூக அரசியல்பேசும் தரப்புகள் இப்படியொரு பொருள்கோடலை தம் நிதிவழங்குநர்களுக்கு சான்றுப்படுத்திக்கொடுக்கவா இந்த வெங்காய வெடியைத் தமிழ் சமூகத்தினுள் வீச முயற்சிக்கின்றனர். ஏற்கனவே தமிழர்களுக்கு ஜனநாயக வகுப்பெடுக்கும் உலக நாடுகள் இலங்கைத்தீவில் நடப்பது மத முரண்பாடு தானே தவிர இனப் பிரச்சினையல்ல என உருட்டிக்கொண்டிருக்கின்றன. தமிழர்களின் பிரச்சினை உள்நாட்டளவில் பேசித்தீர்த்திக்கொள்ள வேண்டுமே தவிர, இந்தப் பக்கம் வராதீர்கள் எனச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் பிரச்சினையெல்லாம், தமிழர்களுக்கு மனிதவுரிமைகள் மீறப்பட்டு விடக்கூடாதென்பதுதான்.
இன்றிருக்கின்ற தமிழ் வெகுசன அரசியலில் தமிழ் பொதுவேட்பாளர் 50.1 வீத ஆதரவை பெற முடியுமா? இன நலனை தெருவில் விட்டுவிட்டுத் தம் சுயநலன்களுக்கும், வசதிக்கும், வாய்ப்புக்கும் பின்னால் ஓடத்தொடங்கியிருக்கும் தமிழ் சமூகத்திடமிருந்து 50.1 வீத ஆதரவைப் பெறுதல் எப்படி சாத்தியமாகும்?
இலங்கையில் அருகிவரும் இனமாகிய தமிழர்களில், பெரும்பான்மையானவர்கள் புலம்பெயரிகள். அவர்கள் தொழில்நிமித்தமாகவும், பாதுகாப்பிற்காகவும், இன்னபிற வசதி வாய்ப்பிற்காகவும் பிறநாடுகளில் தங்கியிருப்பவர்கள். அனேகமானவர்கள் தம் தாய் நிலப்பகுதியுடனான அரசியல், பண்பாட்டு, வணிக உறவுகளைத் துண்டித்துக்கொள்ளவில்லை. எனவே தாயகத்தில் வாழுகின்ற தமிழ் சமூகம் எடுக்கின்ற அரசியல் தீர்மானங்களில் புலம்பெயர்ந்தவர்களது பங்களிப்பும் இருக்கவேண்டும். கிட்டத்தட்டப் பொதுவாக்கெடுப்பிற்கு இணையானதாகக் காட்டப்படும் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் புலம்பெயர்ந்தவர்கள் எப்படி பங்கெடுப்பது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் கூட்டுவெளிப்பாடாக சொல்லப்படும் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில், புலம்பெயர்ந்தவர்கள் எப்படி பங்களிப்பது. தேர்தல் செலவுகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் நிதிப் பங்களிப்பு அவர்தம் அரசியல் பங்களிப்பாகக் கொள்ளப்படுமா?
இப்படி பல கேள்விகள் உள்ளன. எதற்கும் அடுத்த வாரம் வரைக்கும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தொடரும்...