10/10/2023
கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்தப் பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் ஒக்டோபர் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம், பட்டப்பின்படிப்பு பட்டங்கள், உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டங்கள் என 1760 பட்டங்கள் உறுதி செய்யப்பட்டன.
கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுபெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமைதாங்கிய இப்பட்டமளிப்பு விழாவில், வேந்தரால் பட்டங்கள் உறுதி செய்ததுடன் பட்டதாரிகளுக்கான பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென் ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னனி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான பேராசிரியர் கர்ஷ அத்துருபனே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மேளவாத்தியங்கள் மற்றும் பல்ககைலைக்கழக மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகளுடன், அனைத்து பட்டதாரிகளும் விழா மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டதுடன் பட்டமளிப்பு விழா மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. இதன்போது, வேந்தரின் ஆசிச்செய்தி ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களாலும், பட்டமளிப்பு விழா ஆசிச்செய்தி இலங்கை, பேராசிரியர் கர்ஷ அத்துருபனே அவர்களாலும் வழங்கப்பட்டன.
முதலாம் நாள் முதலாம் அமர்வில், நிகழ்வில் 1 கலாநிதி, 5 விஞ்ஞான கல்வியில் முதுமாணி, 14 விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, 1 கல்வியியல் முதுமாணி, 12 கலை முதுமாணி, 8 வியாபார நிர்வாக முதுமாணி, 13 அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, 1 முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா ஆகிய 55 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 87 வைத்தியமாணி - சத்திரசிகிச்சைமாணி, 34 தாதியியல் விஞ்ஞானமாணி, 31 சித்தமருத்துவம் - சத்திர சிகிச்சை இளமாணி, 61 சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி என 213 இளமாணி பட்டங்களும் வழங்கப்பட்டன.
முதலாம் நாள் இரண்டாவது அமர்வில், 10 வணிக நிர்வாகமாணி, 72 சிறப்பு வணிக நிர்வாகமாணி, 9 சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, 5 வணிகவியல்மாணி, 36 சிறப்பு வணிகவியல்மாணி, 37 கணக்கீடு மற்றும் நிதியியல் சிறப்பு வணிகவியல்மாணி, 43 முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, 37 கணக்கியல் மற்றும் நிதி முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, 10 தகவல் முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி, 4 மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, 11 வியாபார முகாமைத்துவத்தில் விஞ்ஞானமாணி என 274 பட்டங்களும், 3ஆவது அமர்வில் 142 விஞ்ஞானமாணி, 65 நுண்கலைமாணி - இசை, 41 நுண்கலைமாணி – நடனம், 28 நுண்கலைமாணி – நாடகமும் அரங்கியலும், 42 நுண்கலைமாணி - கட்புலமும் தொழிநுட்பவியல் கலையும் என 318 பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இரண்டாம் நாளில் முதலாம் அமர்வின்போது, 1 கல்விமாணி, 250 கலைமாணி (விசேட மற்றும் பொதுப்பட்டம்) என 251 பட்டங்களும் இரண்டாம் அமர்வின்போது 250 கலைமாணி (விசேட மற்றும் பொதுப்பட்டம்), 47 பிரயோக பௌதீகவியல் மற்றும் இலத்திரனியல் விஞ்ஞானமாணி, 41 கணினி விஞ்ஞானமாணி ஆகிய 338 பட்டங்களும், மூன்றாம் அமர்வின்போது 77 விவசாய தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மையில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப கௌரவ இளமாணி, 112 தொடர்பாடல் கற்கைகளில் கலைமாணி, 66 மொழியில் கலைமாணி, 7 வியாபார நிர்வாகமாணி (வெளிவாரி), 49 வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) என்ற ரீதியில் 311 பட்டங்கள் 2ம் நாளின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் பட்டதாரிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.