07/07/2024
மாத்தறை முதல் தொல்புரம் கீரிமலை வரை
ஆருதிருமுகனின் பல்வேறு முகங்களில் சாதனைகள்
தகப்பனார் ஆறுமுகம்
தாயார் சரஸ்வதி
கோப்பாய் வராம்பற்றை, இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த ஆசிரியர் கந்தையா ஆறுமுகம் – இணுவிற்பதி ஆசிரியை சரஸ்வதி ஆறுமுகம் ஆகியோரின் புதல்வராக 1961 மே மாதம் 28 ஆம் திகதியன்று பிறந்தவர். ஆரம்பக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். 1989 இல் ஆசிரியராக நியமனம் பெற்று 2012 இல் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபராக சேவையில் இருந்து இளைப்பாறுகை பெற்றார்.
இலங்கையில் திருக்குறளுக்கு முதன்முதலாக உரைவகுத்து முப்பாநூற்சர்க்கம் என வெளியிட்ட பண்டிதர் வி.வேலுப்பிள்ளை இவரது குடும்ப மூதாதை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுக்குப் பின் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக 2008 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்படுகின்றார். கோண்டாவில் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் செயற்படும் இவர், சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லம் என்பன தோற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்ததோடு அதன் தலைவராகவும் செயற்படுகின்றார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு சமய சமூக அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றார்.
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் வெளியிடுகின்ற ‘அருள் ஒளி’ என்ற ஆன்மீக சஞ்சிகையின் ஆசிரியர். இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் ஒன்று Thirumurugan’s Spritual Lecturers என்ற பெயருடன் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.
கீரிமலை சிவபூமி மடம் மற்றும் சிவபூமி கலைக்களஞ்சியம் என்பவற்றின் ஸ்தாபகர், அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் என்பவற்றின் உபதலைவர், குப்பிளான் சிவபூமி ஆச்சிரமம். உடுவில் கேன் புற்றுநோயாளர் காப்பகம் என்பவற்றின் பணிப்பாளர், அகில இந்து மாமன்றத்தால் நடத்தப்படும் நல்லூர் இந்து ஆராய்ச்சி நிலையப்பணிப்பாளர் எனப் பல தளங்களில் சமய சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
இவரது சமூகப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டில் கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தின் இளைய மகனாக இவர் அலங்கரித்தார். இவர் இணுவை மண்ணுக்குப் பெருமை சேர்ப்பாரென அன்று எவரும் அறியவில்லை. பெற்றோரின் பண்பான வழி காட்டலில் இவருக்கு இராமநாதன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு கல்விக் கண்ணைத் திறந்தது. யாழ் இந்துக் கல்லூரி அறிவுப் பசிக்குத் தீனியிட்டது.
வித்தகக் குருவாயமைந்த சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும் யாவற்றையும் நெறிப்படுத்தும் இணையற்ற ஆசானுமாகிய இ.மகாதேவா திருமுருகனின் சிறப்பான முன்னேற்றத்துக்கு அடி எடுத்துக் கொடுத்தார். உயர் வகுப்பு மாணவர்களின் பேச்சுப் போட்டி, விவாதத்திறமை, கல்லூரி விழாக்களிற் பட்டி மன்றம் யாவற்றிலும் பங்குபற்றிய வேளை இவரின் சிந்தனாசக்தி, நாவன்மையுடன் சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய அழகு தமிழ் எளிய நடையில் இனிய குரல் வளம் சிறக்க இறையருள் கைகொடுத்தது
கல்லூரியிற் பெற்ற கல்வித் தகைமையுடன் கலைமாணி (BA) பட்டப் படிப்பையும், மேல் படிப்பையும் நிறைவு செய்தார். இவருக்கு உடன் வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை. அக்காலத்தில் எம்மண்ணில் யுத்த நிலை ஏற்பட்டதால் எம்மவரிற் பலர் தமது பாதுகாப்புத் தேடி அலைந்தபோது குடும்பமும் சிதறி அலைந்தது.
பாதுகாப்புத் தேடியபோது திருமுருகனின் இருபத்தாறு வயதான கட்டுமஸ்தான தோற்றமும் அங்கப் பொலிவும் நாட்டில் அமைதியை நிலை நாட்டவந்த படையினர் சந்தேகக் கண் கொண்டு பார்க்க நேர்ந்தது. அப்பாவியான இவரின் உயிரைப் பிரிக்கவல்ல கொடூரமான தாக்குதலுக்கு இலக்கானார். குற்றுயிராய் அல்லலுறும்போது தமது சித்தத்தைச் சிவன்பால் வைத்து எல்லாம் உனக்கே அடைக்கலம் என்று கூறி இறைவனிடம் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும்இணுவில் காரைக்கால்சிவனிடம் ஒப்படைத்தார்.
திருமுருகனின் வேண்டுதலை ஏற்ற இறை மனித வடிவில் வந்து அரவணைத்தது இறைவனால் ஆட்க்கொள்ளப்பட திருமுருகன் இல்லறம் நாடாது நலிவுற்றோரை மனித நேயத்துடன் அரவணைக்கும் பாங்கில் சபதம் பூண்டு புதுயுக அருட்சிந்தனையுடன் வலம் வந்தார்.
அவரின் கல்வித்திறமைக்கேற்ப 1989இல் அரச ஆசிரியர் நியமனம் கிடைத்தது. சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் ஆசிரியரான இவரிடம் கல்விப் பணிகளும் இதர பணிகளும் ஒப்படைக்கப்பட்டன. இறையருளையே சிந்தையாகக் கொண்டவர் பாடசாலையின் சுத்தம் பேணி அங்குள்ள சுற்றுச் சூழலையும் பேணியதுடன் குடிதண்ணீர்க் கிணறு கலக்கி இறைத்தும்மனமகிழ்வுகொண்டார்
பாடசாலையின் செலவைக்குறைத்து மாணவர்களினுதவியுடன் வகுப்பறைச் சுவர்களுக்கு வெள்ளையடித்துப் பிரகாசிக்க வைத்தார். ஒரு சமயம் பாடசாலைக்கு வருகை தந்த கல்விப் பகுதி உயர் அதிகாரிகள் இவரின் சேவையை மெச்சி இவருக்கு 1991 இல் நல்லாசிரியர் விருது வழங்கிக் கௌரவித்தனர் . தன் சேவையை மேலோங்கச் செய்த பாடசாலை வளர்ச்சிக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி உதவினார்.
இவ்வறப்பணி இவரின் எதிர்கால அறப்பணிகளின் முன்னோடியாகவே அமைந்த சிறப்பாகும். 1993 இல் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு இட மாற்றாலானார். அறப்பணிகளின் தொடர்புகளும் பதவி உயர்வுகளும் சைவம் பேணிக் கல்வியால் உயர்ந்த நல்லாசிரியருக்குப் புதிய கல்லூரியில் உயர் வகுப்புகளில் சைவ சமயமும் தமிழும் போதிக்கும் பணி தரப்பட்டது. இவரின் தூய சேவையால் பல மாணவர்களின் கல்வியுயர்வும் பரீட்சையில் நற் பெறுபேறுகளும் கிடைத்தன.
இதனால் இக் கல்லூரிக்குப் பெருமையும் இவருக்குப் பல படியேற்றங்களும் கிடைத்தன. 16-03-2008 அன்று இக் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார். இக்கல்லூரியின் சேவையால் இவருக்கு வலிகாமம் வலயத்தில் நல்லாசிரியர் விருது இரண்டாவது தடவையாகவும் கிடைத்தது
இவர் ஆசிரியர் நியமனம் பெற்றது முதல் அண்மையிலுள்ள துர்க்காதேவி ஆலய தரிசனத்தையும் செய்து வந்தார்.
இவரின் தாயாரும் துர்க்காதேவி அறங்காவலர் சிவத்தமிழ்ச்செல்வியும் ஆசிரியர் பணி சார்பில் ஏற்கனவே பெரு நட்புப் பூண்டிருந்தனர்.
இவர்களின் உறவு மட்டுமன்றிக் குரு சீடர் முறையாகவும் எதிர்காலத்தில் திருமுருகனே சகல நிர்வாகப் பொறுப்புகளையும் ஏற்கும் கடமை இருந்ததை அன்னை துர்க்காதேவி தமது திரு விளையாடலில் ஏற்படுத்தினார் .திருமுருகனும் சிவத்தமிழ்ச்செல்வியை தாயாகவும் குருவாகவும் ஏற்று அன்னையிட்ட பணியை தூய சிந்தனையுடன் நிறைவேற்றி இவ்வாலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவராக அரும் பணியாற்றுகிறார்.
இணுவில் காரைக்கால் சிவாலயத்தில் 1992 இல் நடைபெற்ற வருடாந்தப் பெருவிழாக் காலத்தில் திருமுருகனின் சமயத் தொடர் சொற்பொழிவு ஏற்பாடானது. இவரின் பேச்சை முதன் முதலில் கேட்பதற்கென பெருந்தொகையான பொது மக்கள் வயது வேறுபாடின்றி வந்து கூடினர். கொடியேற்றத்தன்று பொன்மாலைப் பொழுதில் சொற்பொழிவு ஆரம்பமானது.
இயல்பாகவே அமைந்த புன்சிரிப்பும் அடக்கமும் சிவ சிந்தனையும் மேலிட கன்னித்தமிழை நல்விருந்தாக நல்க இச்சிவாலயத்தில் முதன்முதல் ஆரம்பித்தார். இவரின் சொற்பொழிவின் இனிமையும், சொற்சுவை, பொருட்சுவையும் இலக்கண வரம்பு மீறாத ஆன்மிக அருளுரை யாவரையும் வியக்க வைத்தது. இதனால் நாளுக்கு நாள் மேலும் பலர் வந்து கேட்டின்புற்றனர்.
இவரின் சொற்பொழிவின் சிறப்பை உணர்ந்த ஆலயச் சமூகத்தினர் தீர்த்த விழாவின் மறுநாள் மாலை இவருக்கான கௌரவிப்பு விழாவில் “செஞ்சொற் செல்வர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தனர். பொது மக்களும் பொன்னாடை, நறுமலர் மாலை, புகழ் மாலைகளாக நூற்றுக்கணக்கில் அணிவித்து வாழ்த்தினர். இவ் வைபவச்சிறப்பை இவரின் பெற்ற அன்னை தமது குடும்ப சகிதம் வந்து நேரிற் கண்டு மகிழ்ந்ததுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து ஆசீர்வதித்தார்.
செஞ்சொற்செல்வரின் புகழின் வித்தாக முதன்முதல் சிவாலயத்தில் வழங்கிய சொற்பொழிவின் பெருமை திக்கெட்டும் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் பரவியதால் பட்டி தொட்டி எங்கும் அரிய நிகழ்வாக சொற் பொழிவுகள் அமைந்தன.
பிற மாவட்டங்கள், வெளிநாடுகளிலிருந்தும் இவரின் சொற்பொழிவுக்கான அழைப்புகள் வந்தன. யாவும் இறைவனின் சித்தப்படி நிறைவேறின. இவ்வரிய நிகழ்வின் சிறப்பை அன்னை சிவத்தமிழ்ச்செல்வி தாம் ஏற்கனவே சென்று பேசிய வெளிநாடுகளுக்குச் சென்று பணி செய்ய ஆலோசனைகளும், ஆதரவும், ஆசியும் பெற்றுத் தந்தார்.
இவர் சென்ற இடங்களில் தமக்கென ஏதும் பெற விரும்பவில்லை.மாறாக இவர் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் வளர வாய்ப்பு ஏற்பட்டது.
திருமுருகனின் அரிய சொற்பொழிவு இலண்டனில் 1999 இல் அகில உலக சைவ மகாநாட்டில் ஒலிக்க உதவிய இணுவிலைச் சேர்ந்த சிவ நெறியாளரும் கல்விமானுமாகிய ந.சச்சிதானந்தன் எம் இலங்கை மண்ணுக்கும் இணுவிலுக்கும் பெருமை சேர வைத்தார்
இதனைத் தொடர்ந்து இலண்டன் சிவயோக அறக்கட்டளையின் சார்பில் இலண்டன் நகரின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கில் சொற்பொழிவுகள் நடை பெற்றன. அதனைத் தொடர்ந்து இவரின் கல்விப் பணியின் விடுமுறைக் காலங்கள் யாவும் வெளிநாடுகளில்புலம் பெயர் தமிழினம் வாழுமிடங்கள் எங்கணும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
2001 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் ஆசிரியர்களின் உலக மகாநாட்டில் இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தார்.
2001 இல் பேரூர் ஆதீனத்தின் அழைப்பை ஏற்றுப் பெரிய முதுபெரும் அறிஞர்கள் மத்தியில் வயதில் குறைந்தவராக இருந்தபோதும் பேச்சுவன்மையால் யாவராலும் பாராட்டப் பெற்றார்.
இதே ஆண்டில் அவுஸ்திரேலிய சிட்னி வாழ் வைத்திலிங்கம் இளலிங்கம் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று பல இடங்களிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆன்மிக உரைகள் ஆற்றினார்.
2002 இல் ஈவிங்கில் முத்தமிழ் விழாவிற்குச் சென்று உரையாற்றினார். இதே வருடம் சுவிஸில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் உரையாற்றி வையகத்தை வியக்க வைத்தார்.
குறிப்பு ./(இளலிங்கம் என்பவர் இணுவிலில் பிறந்து மன்னாரில் வாழ்ந்த மன்னார் chairman வைத்திலிங்கம் அவர்களின் மூத்த மகன் ,charted accountant ஆக தொழில் புரிந்து சிட்னி நகரில் ஒரு சமூகத் தொண்டனாக இருக்கிறார் )
2003 இல் சிங்கப்பூர் செண்பக விநாயகராலயத்தில் தொடர் சொற் பொழிவாற்றினார். இதே ஆண்டில் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் வாழும் எம்மவரின் அழைப்பை ஏற்றுப் பல இனிய சொற்பொழிவை ஏற்படுத்தி மகிழ்வித்தார்.
2004 இல் தாய்லாந்தில் ஆன்மிக தலைவர்களுக்கான உலக சுகாதார நிறுவனம் நடத்திய AID S தொடர்பான மகாநாட்டில் இலங்கையின் இந்துமதப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
2004 இல் ஏழாவது தடவையாக இலண்டன் சிவயோகம் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
2005 இல் அமெரிக்கா சென்று Texas மாநில மகாநாட்டில் கலந்து சொற்பொழி வாற்றினார். இவர் சொற்பொழிவாற்றிய காலத்தில் எம்மண்ணில் ஏற்பட்ட யுத்த கால நிலையால் ஏற்பட்ட அவலங்களை தமது உரையினிடையே தெரிவித்தார்.
இதனால் இவர் அன்பளிப்புக்களைப் பெற விரும்பாத போதும் எம்மண்ணில் ஏற்பட்ட சிதைவால் பாதிப்புற்ற அநாதைச் சிறுவர்கள், இளம் விதவைகள், கல்வி கற்க வசதியற்ற மாணவர்கள், நோயாளிகள், மருத்துவமனைகளில் பெற முடியாதிருந்த மருத்துவ உதவிகளுக்கான உபகரணங்கள் போன்ற பல்வேறு அறப்பணிகளுக்குத் தாராளமாக உதவிககளை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தார்
யாழ் மக்களின் துயர நிலையைத் தமது வெளிநாட்டு பிரயாணங்களின் போது எடுத்துக் காட்டியதன் பேறாக எம்மக்களின் துயர் துடைக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்தார்கள்
அதன் பயனாக
புலம் பெயர் மக்கள் மூலம்
யாழ் போதனா வைத்தியசாலைக்கு பல உதவிகள் கிடைத்தன. சிவயோகம் அறக்கட்டளை மூலம் சத்திர சிகிச்சைக்கூடம் அமைத்துக் கொடுத்தமை.
இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை சுவீடனிலிருந்து இறக்குமதி செய்து யாழ் மருத்துவமனைக்கு உதவியது மேலும் பல அத்தியாவசியக் கருவிகளைப் பெற்றுக் கொடுத்தமை யாவும் மருத்துவமனையின் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தின.
யுத்த நெருக்கடியால் பாதுகாப்புத் தேடிய கண்பார்வையற்றவர்கள் நிலையான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். புற்றுநோயாளர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யவென ஒரு காப்பகம் நிறுவப்பட்டது. மன அபிவிருத்தி குன்றி வீட்டில் ஒதுக்கி வைக்கப்பட்ட இளஞ்சிறார்களை மேம்படுத்தும் சிவபூமிப் பாடசாலை நிறுவப் பட்டது. இதனால் சிவபூமி அறக்கட்டளை நிதியம் ஆரம்பிக்கப்பட்டதும் இவ்வறக் கட்டளை மூலம் தொல்புரத்தில் உறவினர்களால் கைவிடப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்களை அன்புடன் பேணும் முதியோர் இல்லம் அமைந்தது
கீரிமலையில் சைவ அன்பர்கள் தமது இறுதிக் கிரியைகளுக்காகச் செல்லும் போது இளைப்பாறவென சிவபூமிமடம் மற்றும் குப்பிளானில் போர்ச்சூழலாற் பாதிப்புற்ற பலரின் உளநல மேம்பாட்டுக்கான தியானம் அறநெறிக் கல்வி, வாரமொரு நாள் ஏழைகளுக்கான அன்னதானம் யாவும் வழங்கும் சிவபூமி மடம் யாவும் திருமுருகனின் அயராத பணியால் ஏற்பட்டன.
இவரின் வஞ்சகமில்லாத நெஞ்சிலிருந்து உதிக்கும் அன்பான, அமைதியான ஆன்மிக உரைகளும், கறைபடியாத கரங்களின் தூய்மையும், இல்லறம் நாடாது, இறையருளில் தஞ்சமடைந்ததால் தமக்கென ஏதும் தேடாது பொதுவான அறப் பணிக்கு அர்ப்பணித்த அன்பகலாத அரவணைப்பும் மூலதனமாக அமைந்தன.
ஏற்கனவே தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்தவர். சைவநெறியால் உலகமுய்யவென வழிகாட்ட முற்பட்டவரை நாடிய தொண்டு உள்ளங் கொண்ட அறப்பணியாளர்கள் பலர், காணியாகவும், கட்டட உதவிகளாகவும் பொருளாகவும், வாரி வழங்கி எம் மண்ணில் அறப்பணியை அலங்கரித்தனர்.
வெளிநாடுகளில் வாழும் சைவ நிறுவனங்கள் குறிப்பாக சிவயோக அறக்கட்டளை தொண்டுநாதசுவாமிகள் போன்ற பலரின் உற்சாகமூட்டும் உயர்ந்த பங்களிப்புகள் எம்மிணுவை மண்ணின் பெருமையை உலகறியச் செய்தன. உலகமெங்கும் பரந்து வாழும் எம்மவர் திருமுருகனின் உயர்வான பணி பரந்தளவில் சேர வேண்டிய இடங்களில் உரிய சேவை கிடைக்கப் பெற்று அவர்கள் துயர் நீங்கி உள்ளம் மலர்வதை நேரிற் கண்டதால் தாம் செய்யும் அறக் கொடையைத் தம்மாலியன்றதைச் செய்ய முன் வந்தனர்.
அவசிய தேவைக் கேற்பத் தாம் அன்றாடம் “உண்ணும்போது ஊருக்கும் ஒரு கைபிடி” என்னும் மகுட வாசகத்தை உணர்ந்து சிறுகச் சேர்த்து யாவரும் வழங்கும் போது பெரு நிதியாக வளர்கின்றது. இந்தநிதி குறிப்பிட்ட தேவைக்கு முறைப்படி பயன்படும் போது இதற்கு நிகரேதுமில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்பதை புலம் பெயர் தேசம் உணர்ந்ததால் தமது ஊர்களுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும்
புகழ் விரும்புவோரும் புகழ் விரும்பாதவரும் இன்று உதவி வருகிறார்கள்
இன்றைய இளம் சமுதாயம் இதனை உணர்ந்து புலம்பெயர் நாடுகளில் சசகல பொறுப்புகளையும் தூய சிந்தனைப்படி ஒருங்கிணைந்து செயற்படுவது கண்கூடு
கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலிய மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் சகல மக்களும் கைகொடுத்து . சமய, சமூகப் பணிகளுக்கும் மற்றும் பல பொதுப்பணிகளுக்கும் இன்று வரை தாராளமாக உதவி வருவது திருமுருகனைப் பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது
சிவத்தமிழ்ச்செல்வியின் தொடர்பால் ஆலயத்தின் சகல பணிகளையும் நிர்வகிக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார். அம்மையாரின் உதவுகரமாக இருந்து சிறப்பித்ததுடன் அவரின் அறக்கட்டளைக்கும் தாராளமாக வைப்பு நிதியை ஏற்படுத்தவும் உதவினார். துர்க்காதேவி திருத்தலம், சிவத்தமிழ்ச்செல்வியின் அறக்கட்டளை நிதியம், சிவபூமி அறக்கட்டளை யாவற்றுக்கும் தனித்தனி கணக்குகளும் நிர்வாக அமைப்புகளும் வேறாக இருந்த போதும் திருமுருகனே யாவற்றுக்கும் தலைமை தாங்குகிறார்.
இதனால் தமக்குக் கிடைத்த கல்விப் பணியை ஓய்வுப் பணியாக்கி மேற்கூறிய கடமைகளுக்காக அயராது தம்மை அர்ப்பணித்துள்ளார். சைவத்துக்கும், தமிழுக்கும், அறப்பணிகளுக்கும் ஆணி வேராக அமைந்து வளர்ந்து வரும் திருமுருகனின் பணிச்சிறப்புக்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினரால் கலாநிதிப் பட்டமும் கிடைக்கப் பெற்றார்
இவரின் முயற்சியால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் சிவதட்சணாமூர்த்தி திருக்கோவிலுடன் திருவாசக அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.
21 அடி உயரமான கருங்கல் இரதம் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்ட 658 திருவாசக பாடல்கள், பதினோரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிவபுராணங்கள், கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் என்பவை கொண்டு திருவாசக நூல் ஆராய்ச்சி நிலையம் திரு திருமதி மனமோகன் சிவகௌரி தம்பதிகளின் அன்பளிப்பால் நிறைவேற்றப்பட்டு 2018 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.
எம் மண்ணை ஆண்ட 23 மன்னர்களின் உருவச்சிலைகள், புராதன பொருட்கள், அரிய புகைப்படங்கள் ஓவியங்கள், சூரிய குடும்ப கட்டுமானம், எம் மூதாதையர்களின் பயன்பாடு என்பவற்றை கொண்ட சிவபூமி அரும்பொருட் காட்சியகம் ஒன்றும் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவரின் சிவபூமி அறக்கட்டளையினால் கட்டாக்காலி நாய்களை பராமரிப்பதற்காக இயக்கச்சியில் 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிவபூமி நாய்கள் சரணாலயம், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வைத்திய சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காகவும் அபயம் மருத்துவ சேவை நிலையத்தையும் உருவாக்கி நிர்வகித்து வருகின்றார்.
இவற்றை எல்லாம் விட எதிர்கால சிவபூமியின் அறப்பணிக்கு உறுதுணையாக இருக்கவென சுழிபுரம் நாவற்குழி ஆகிய இடங்களில் வயல்கள் விவசாய பண்ணைகள் பஞ்சாமிர்த தோட்டங்களையும் அமைத்து பராமரித்து வருகின்றார்.
ஆறு திருமுருகன் அவர்கள் சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் துர்க்காதேவி தேவஸ்தான தலைவராகவும் பணியாற்றினாலும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உப தலைவராகவும் திருக்கேதீஸ்வர திருப்பணி சபை உறுப்பினராகவும், யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் என்று பல சமூக மட்ட சங்கங்களிலும் கழகங்களிலும் உறுப்பினராகவும் போசகராகவும் உள்ளார்
மேலும் அன்று புத்திஜீவிகள் கலைஞர்கள் தென் இந்தியாவுடன் தொடர்பில் இருந்து அங்கு ம் இங்கும் கலைகள் வளர்ந்தன .கல்வி கற்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன .அதனால் தான் வீரமணி அய்யர் ஏரம்பு சுப்பையா போன்றும் தட்சணாமூர்த்தி ,இருத்திராதிபதி போன்றும் இன்னோரன்ன தலைகள் எமது நாட்டை அலங்கரித்தனர் .சிறப்பு பெற்றனர் பெருமை கொண்டனர் .எனவே திருமுருகனின் சிந்தனை இந்தத் திசையிலும் பயணிக்க வேண்டும் .ஊக்கமுள்ள மாணவர்களை கலைஞர்களாக் பேச்சாளர்களாக இந்தத் துறைகளிலும் இந்தியாவுக்கு அனுப்பி பயிற்றுவிக்க வேண்டும்
மேலும் சிறு கைத்தொழில்களை ஊக்குவிக்கும் பயிற்சிப் பட்டறைகளை உள் நாட்டில் எங்காவது அமைத்து
இளைஞர்களை சுய தொழில் சிந்தனைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும் .இன்று புலம் பெயர் தேசங்களில் உள்ள திறமைகளை இங்கு எமது தேசத்திலும் உருவாக்க வேண்டும் .
அதை விட முக்கியமான விடயம் என்ன வெ னில் புலம் பெயர் தேச மக்களின் அறக் கொடைகளால் மாத்தறை முதல் கீரிமலை வரை அறப்பணிகள் நடைபெறுகிறது
தற்செயலாக ஏதாவது நடந்து விட்டால் .இப்பணிகளை மேற்கொண்டு நடாத்துவதற்கு உண்மையான தொண்டர்களை பயிற்றுவித்து வந்தால் மட்டுமே இந்த அறப்பணிகள் தொடர முடியும் .இதை ஆறுதிருமுருகன் உணர்ந்து தனது களப்பணி கேற்ற சுய நலமற்ற வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது அவா ,
நன்றி
Copyright @ Manikkavasagar Vaitialingam