16/07/2021
" ஆடிப் பிறப்புக்கு நாளை விடுமுறை ".
பார்த்தேன்; படித்தேன்; கேட்டேன்; இரசித்தேன்; பகிர்கின்றேன்.
ஈழத்து ஆடிப்பிறப்பு!
ஆடிப்பிறப்பு – தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை!
ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையைத் தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள்.
இந்த உணவுகள்தாம் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள்.
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயனக் காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயனக் காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயனத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைக்கால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தைக் கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.
தமிழகத்தில், இந் நாளில் விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை ‘ஆடிப்பெருக்கு’ என்றும் ஆடி 18 என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள்.
"ஆடி விதை தேடி விதை"
"ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்"
"ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்"
இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
"ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுமுறை"… என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப் பிறப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார்.
ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்புஅமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். இங்கு உத்தராயனம் தேவர்களுக்குரியதென்றும் தடசிணாயனம் பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.
கற்கடகம் என்பது ஆடி மாத்தின் பழைய தமிழ்ப் பெயராகும். ஆடி முதல் நாளை தமிழர்கள் வரவேற்கும் விழாவே ஆடிப்பிறப்பு. இப் பண்டிகையின் போது தேங்காய் சுடுதல் என்ற உணவுப் பழக்கமும் தமிழர்களிடம் காலம் காலமாக நிலவிவந்துள்ளது.
தேங்காய் நாரை முற்றிலும் உரித்துவிட்டு நன்றாக உருட்டியபின், தேங்காயின் மூன்று முகங்களில் ஒன்றில் மட்டும் துளையிட்டு தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளவும். அவல், பொட்டுக்கடலை, எள்ளு, வெல்லம், சிறிதளவு உப்பிட்டு ஊறவைத்து, தேங்காயின் ஒரு துவாரத்தின் வழியாக அடைத்து சிறிது தேங்காய் நீரை ஊற்றியபின் இத்துவாரத்தை மஞ்சளிட்டு அடைத்து வாதனங் குச்சியைத் துவாரத்தில் சொருகி தேங்காயைத் தீயில் சுட்டபின் கடவுளுக்குப் படைத்தபின் உடைத்து குடும்பத்துடன் சாப்பிடும் வழக்கம் தமிழ்நாட்டில் காணப்பட்டுள்ளது.
ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது.
சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது.
நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுமுறை" என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.
"ஆடிப் பிறப்புக்கு நாளை விடுமுறை"
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுமுறை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரின் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
தெங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுமுறை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
– நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்.
இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன.
ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது?
தற்போது ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளைப் பாடசாலைகளிலும், பொதுஇடங்களிலும் வடமாகாண பண்பாட்டுத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை விடுமுறை தினங்களாக்க வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை மகிழச்சிக்கு உள்ளாக்க முடியும்.
பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும்.
நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின்,"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுமுறை" பாடலை இசையுடன் கேட்டு மகிழ கீழ்வரும் இணைப்பினைச் சொடுக்குக.
https://youtu.be/08ftUzLRw1U
'தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கைத் தமிழறிஞர் சோமசுந்தரப் புலவர் (Somasundara Pulavar)
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் (1878) பிறந்தார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். உறவினர் இராமலிங்க உபாத்தியாரிடமும் மானிப்பாய் மாரிமுத்துவிடமும் ஆங்கிலம் கற்றார்.
சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருஊஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை.
ஆசிரியப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கினார். அங்கு 40 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இதிகாசம் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமயப் பாடங்களைக் கற்பித்தார்.
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, மாணவர்களுக்கு சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தி தமிழ்த் தொண்டு ஆற்றினார். கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞான போதம், கந்தபுராண செய்யுள்களைத் தெளிவாகவும், அழகாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பார்.
பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள் ளார். 400-க்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தம்.
யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். இது அட்டகிரி கந்தசுவாமி கோயிலில் அரங்கேற்றப்பட்டது.
‘சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910-ல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927-ல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். கந்தவனக் கடவை நான்மணிமாலை, தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்தாதி, நல்லை முருகன் திருப்புகழ், கதிரைமலை வேலவர் பதிகம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.
குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.
தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றினார். ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் 1955-ல் நூலாக வெளிவந்தது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. தமிழுக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தர புலவர் 75-வது வயதில் (1953)