30/10/2023
இப்போதைய சினிமா வியாபாரத்தை பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு படம் பண்ணுங்கள்... (பகுதி-1)
முன்பு சினிமா வியாபாரம் நன்றாக இருந்தது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என திரைத்துறை சார்ந்த அனைவருமே நன்றாக இருந்தார்கள்.
வெற்றி படம் ஒன்றை வைத்து எல்லோரும் வெற்றியடைந்தார்கள். தோல்வி படம் ஒன்றை வைத்து எல்லோரும் தோல்வி அடைந்தார்கள்.
ஒரு படத்தில் லாபம் வரும். இன்னொரு படத்தில் கொஞ்சம் நஷ்டம் வரும். வேறு ஒரு படத்தில் பெரும் லாபம் வந்து அதை ஈடு செய்யும். இப்படி up & down வருமானம் வந்தாலும், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எல்லோரும் நன்றாகவே வாழ்ந்தார்கள்.
தமிழக ஏரியாக்களை பகுதி வாரியாக பிரித்துக் கொண்டு, அந்தந்த பகுதியில் இருக்கும் தியேட்டர்கள், அதற்கு வரும் ரசிகர்கள், முந்தைய வருமானத்தை அடிப்படையாக வைத்து, ஒரு படத்திற்கு விலை வைத்து விற்பார்கள்.
எடுத்துக்காட்டுக்கு நீங்கள் 5 கோடியில் ஒரு படம் பண்ணி இருந்தால், சென்னை மாநகரத்துக்கு (chennai city) ஒரு கோடி ரூபாய், வட ஆற்காடு தென் ஆற்காடு (N.S.A) ஒரு கோடி ரூபாய், செங்கல்பட்டு 50 லட்ச ரூபாய், தஞ்சை திருச்சிக்கு (TT) 75 லட்ச ரூபாய், மதுரை ராம்நாடு (MR) 75 லட்ச ரூபாய், திருநெல்வேலி கன்னியாகுமரிக்கு (TK) 50 லட்ச ரூபாய், சேலம் கோவைக்கு 75 லட்ச ரூபாய், கேரளா, ஆந்திரா, கர்நாடக (FMS) மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா (overseas) Audio Rights, Satellite's rights இப்படி பலவாறு பிரித்து, நட்டம் இல்லாமல் லாப நோக்கில் அனைவரும் நன்றாகவே வாழ்ந்தார்கள்.
MG என்று சொல்லக்கூடிய மினிமம் கேரண்டி, 60:40, 40:60, 50:50, Rental என பல வகையான அக்ரிமெண்ட் ஒத்துழைப்புகளோடு தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டு கொண்டிருந்தார்கள்.
ஒரு படம் எல்லா தளத்திலும், அதாவது ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர், ரீ ரிலீஸ் என நீண்ட வருமானங்களை தந்து கொண்டே இருந்தது. குட்டிகுட்டி விநியோகஸ்தர்கள் கூட காலை 11 மணி காட்சி போட்டு, பெண்கள் ரசிகர் மூலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சனி, ஞாயிறு காலை 11:00 மணி காட்சி ஆங்கிலப்படம் ஒன்றை போட்டு வருமானம் பார்த்தார்கள்.
அது ஒரு பொன்னான காலம்.
சில டிஸ்ட்ரிபியூட்டர்கள் புதிய தயாரிப்பாளர்களை பொய் கணக்கு காட்டி ஏமாற்ற ஆரம்பித்தார்கள். சில தயாரிப்பாளர்கள் மொத்த லாபமும் நமக்கு வேண்டும் என பேராசைப்பட்டார்கள். இந்த சிலராலேயே அந்த நல்ல வியாபாரக் காலம் காணாமல் போய்விட்டது.
இது மட்டுமல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு, ஓடும் குதிரையின் மீது, படப்பிடிப்புக்கு முன்பே, பணம் கட்டி பல விநியோகஸ்தர்கள் காணாமல் போனார்கள்.
அதீத தொழில்நுட்ப வளர்ச்சி வந்து, திரைத்துறையில் மாற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே, அந்த விநியோக தொழில் முறை முற்றிலும் படுத்துவிட்டது.
சினிமா - தயாரிப்பாளர் கையில் இருந்தா போது நன்றாக இருந்தது. இயக்குனரின் கையில் இருந்த போது நன்றாக இருந்தது. என்றைக்கு ஹீரோ கைக்கு போனதோ அன்றைக்கு ஒழிந்தது. ஹீரோ மட்டுமே வாழ்ந்து, தியேட்டர் கூட கட்டாமல், கல்யாண மண்டபமாக கட்டிவிட்டு, நல்லா கல்லா கட்டுகிறார்கள். 'எவன் செத்தால் எனக்கென்ன, என்ற மனநிலையில் வாழும் ஹீரோ பின்னாடி தான் இன்னும் இவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக!... எதனால் அழிந்தார்களோ?.. அந்த பேராசைக்காக... 200 கோடி போட்டால், மேலும் 200 கோடியை மொத்தமாக அள்ளி விடலாம் என்ற பேராசை... ஆனால் பெரும்பாலும் அவர்கள் கையில் கிடைப்பது என்னவோ 10 கோடியோ, 20 கோடியோ தான்... 'மாஸ் பட தயாரிப்பாளர்' என்ற பெயருக்காகவே, புகழ் தரும் போதைக்காகவே, ஆறு மாதம் மாஸ் ஆக மீடியா முன் உலாத்திவிட்டு பலர் முன்னாள் தயாரிப்பாளர் என்று அடையாளத்தோடு வீட்டுக்குள் முடங்கிப் போய் கிடக்கிறார்கள். அதுவும் வெளியில் சொல்லி அழ முடியாமல் கூட, மூலையில் அமர்ந்து தன்னந்த்தனியாக விம்மிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே நீங்கள் ஹீரோக்களை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 'ஹீரோ என்ற ஒருவர் இல்லை என்றால் மொத்த சினிமா உலகமும் இல்லை...' என்ற மசாலா நிலைக்கு சினிமா ரசிகர்களை உருவாக்கி விட்டது இந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தான்.
தயாரிப்பு நிறுவனம் பார்த்து, இயக்குனர் பார்த்து வரும் ரசிகர்களை காணாமல் செய்தது அதே தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தான். அதனால் அவர்கள் வாங்கிக் கொண்ட ஆப்பு சரியே.
தமிழ்நாட்டில் ஆங்கில படங்கள் ஓட, ஆங்கில படம் என்ற ஒரு தகுதி இருந்தால் போதும். ஒரு சதவீத ரசிகர்கள் தான் அந்த ஆங்கில படத்தின் இயக்குனர், ஹீரோ பார்த்து திரையரங்குக்கு வருவார்கள். மற்றவர்கள் ஆங்கில படம் என்றால் நன்றாக இருக்கும், கொடுத்த காசுக்கு பிரயோஜனப்படும் என வருவார்கள்.
இதுபோலவே நல்ல படம் என்றால் ஓடும் என்ற நல்ல நிலையை காலி செய்தவர்கள் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களுமே... இந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும், ஹீரோக்களும் ஒன்றிணைந்து, ஏதாவது ஒரு நல்ல முடிவை எடுத்தால் மட்டுமே திரைத்துறை இனி செழித்தோங்கும்.
இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த துறையில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் சில விஷயங்களில் நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். கடைபிடிக்க வேண்டும்.
நீங்கள் ஜெயிப்பதற்கு முன் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம், உங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் எப்படி தோற்றார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தோல்வியில் இருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள முடியும்... இதை நீங்கள் படமெடுத்து தோற்கத் தேவையில்லை... உங்களுக்கு முன் தோற்றவர் சரித்திரத்தை நீங்கள் படித்தாலே போதும்... நீங்கள் ஜெயித்து விடுவீர்கள்... அதனாலதான் மேலே நான் விலாவாரியாக சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன்...
சிலர் தோற்ற வரலாறுகளோடு... எப்படி ஜெயிக்க முடியும் என்ற வழிமுறைகளையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்...
நன்றி!
முகமது அலி.