24/04/2021
விடுவிக்கும்
சூழ்நிலையில்
நாடு இல்லை.
*வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம்
யோ.தர்மராஜ்
நாட்டில் பிரதேச செயலாளர் பிரிவையே ஒரு அலகாக நாங்கள் அடையாளப்படுத்தினோம். அதன்படி பரிசோதனைகளை முன்னெடுத்து ஒவ்வொரு பகுதியாக விடுவிப்பதே பொருத்தமாக இருக்கும் ஆகவே, தற்போது நாட்டை விடுவிப்பதென்பது ஆபத்தானது என்று தெரிவித்துள்ள அரசாங்க மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம்,நாட்டை விடுவிப்பதற்கு அரசு எடுத்துள்ள முடிவுக்கு பொது மக்களே ஆதரவு வழங்க வேண்டும். நாடு விடுவிக்கப்படாலும் அரசாங்கம் வழங்கியுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மாறாக, பின்பற்ற தவறும் போது மீண்டும் ஒரு பாரிய அழிவுக்கு இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி; இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்க முடியுமா?
பதில்; இலங்கையில் தற்போது 824 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் கொரோனாவின் ஆபத்து இன்னும் குறைவடையவில்லை. உயிர்ப்பான நோயாளர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். அதனால், தற்போதுள்ள 800 நோயாளர்களிடத்திலிருந்து அடையாளம் காணப்படும் நோயாளர்கள் 2500 வரை சென்றாலும் சிகிச்சை வழங்குவதற்கான ஆளுமை இலங்கை சுகாதார துறைக்கு இருக்கின்றது.
ஆகவே, இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு மட்டத்தில் இருந்தாலும் ஆபத்து நிலையும் குறைவடையவில்லை.
கேள்வி; இலங்கையில் சிலர் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்படுவதாக கூறப்படுகின்றதே. அவ்வாறாயின் இலங்கையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா?
பதில்; உலக சுகாதார ஸ்தாபகத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய இலங்கை இன்னும் மூன்று பீ பிரிவான கிராமத்திற்குள் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைமையிலேயே இருக்கின்றது. ஆகவே, சமூகத் தொற்றுக்குள் இலங்கை செல்லவில்லை.
குறிப்பாக, சமூகத்தில் ஏகமனதாக ஒருவருக்கு பரிசோதனை செய்யும் பொழுது அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்படுவதுடன், அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லாதிருக்குமாயின் அதனை சமூக பரவலாக அடையாளப்படுத்தலாம். இலங்கையில் ஒருவரிடத்திலிருந்து ஒருவருக்கு தொற்று பரவும் நிலைமையே தற்போதும் காணப்படுகின்றது. அதனால், இலங்கையில் சமூகத் தொற்று ஏற்படவில்லை.
கேள்வி; இலங்கையில் கடைசியாக மரணமடைந்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது கண்டறிய முடியாதுள்ளதாக இராணுவத் தளபதி கூறியிருந்தார். அவ்வாறாயின் அது சமூகப் பரவலாகக் கொள்ள முடியாதா?
பதில்; ஒருவர் அடையாளம் காணப்பட்டதை வைத்து நாங்கள் சமூகப் பரவல் ஏற்பட்டதாகக் கூற முடியாது. அவரிடத்திலான தொடர்புகள் முறையாக அறியப்படாமல் இருக்கலாம். முறையாக ஆராயப்படும் போது அவருக்கு எவ்வாறு கொரோனா ஏற்பட்டது என்பதை அறிய முடியும். ஆகவே, ஒருவர் அடையாளம் காணப்பட்டதை வைத்து சமூகத் தொற்று ஏற்பட்டதாக ஏற்றுக் கொள்ள முடியாது.
கேள்வி; எதிர்வரும் காலத்தில் இலங்கையில் சமூகப் பரவலுக்கான வாய்ப்புகள் இருக்கின்றதா?
பதில்; கொரோனா தொற்றின் கட்டுப்பாடு, அதன் வீரியம் மற்றும் அதன் தாக்கம் என அனைத்தும் இலங்கை மக்களின் பங்களிப்பிலேயே தங்கியுள்ளது. சுகாதார அதிகாரிகள் முன் வைக்கும் ஆலோசனைகளை முறையாக பின்பற்ற தவறும் பட்சத்தில் சமூகப் பரவலுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, இலங்கையில் கொரோனா தொற்றின் ஆபத்து இன்னும் இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவது என்பது சுகாதார அதிகாரிகளுக்கு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது. பொது மக்கள் பொறுப்பற்றவர்களாக மாறுவார்களாயின் இலங்கையில் சமூகப் பரவல் ஏற்பட்டு பாரிய அழிவுக்கு வழிவகுக்கும். ஆகவே, கொரோனா தொற்று எவ்வாறு ஏற்படுகின்றது என்பது தொடர்பான பூரண அறிவை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதே சமூகப் பரவலை தவிர்க்க முடியும்.
கேள்வி; கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு மற்றும் இழப்பு ஏற்படும் நிலையில் நாட்டை விடுவிப்பதாக அரசின் முடிவை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? அது ஆபத்தை ஏற்படுத்தலாமா?
பதில்; பொருளாதார காரணங்களைக் கொண்டே 11 ஆம் திகதி நாட்டை விடுவிப்பது குறித்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஒன்றரை மாதங்களாக நாடு முடக்கப்பட்டிருந்த மையினால் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது போன்றே, கொரோனாவின் ஆபத்தும் குறைவடையவில்லை.
இந்த நிலையில், இது தொடர்பான மூலோபாயத்தை அரசாங்கத்திற்கு நாங்கள் முன்வைத்துள்ளோம். அதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட போதிலும், அதனை அமுல்படுத்துவதில் இன்றும் தாமதம் காணப்படுகின்றது.
நாங்கள் முன் வைத்த யோசனைகள் ஒரு சத்திரசிகிச்சை கூடத்துக்கு ஒப்பானதாகும். அதாவது, சத்திர சிகிச்சை பிரிவானது ஒரு தொற்றற்ற பகுதியாக காணப்படும் அதேவேளை, அதன் வெளிப்புறம் தொற்றுள்ள பகுதியாக காணப்படும். ஆகவே, தொற்றுள்ள பகுதியிலிருந்து தொற்றற்ற பகுதியான சத்திரசிகிச்சை பிரிவுக்குச் சென்றாலும் அது தொற்றற்ற பகுதியாகவே காணப்படுகின்றது.
அதன்படி, தொற்றுள்ள பகுதி, அவதானமிக்க பகுதி மற்றும் தொற்றற்ற பகுதி என மூன்றாக காணப்படுகின்றது. இவ்வாறானதொரு வடிவத்தையே அரசாங்கத்திற்கு முன்வைத்தோம். அதாவது, பரிசோதனைகளை வீரியமாக முன்னெடுக்க வேண்டும்.
அதன்படி, தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் அனைவருக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்க வேண்டும்.
ஆனால், அரசாங்கம் அதில் பாரிய தாமத்தை ஏற்படுத்தியது. அதனால் ஆரம்பத்தில் 200, 300 பரிசோதனைகளே முன்னெடுக்கப்பட்டது. எங்களுடைய அழுத்தங்களினாலேயே தற்போது அதிகளவான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனாலும் தற்போது முன்னெடுக்கும் பரிசோதனைகளை விட 3000 வரையான பரிசோதனைகளை முன்னெடுத்தாலே உண்மையான தொற்றாளர்களை அடையாளம் காண முடியும்.
அவ்வாறு உண்மையான தொற்றாளர்களை அடையாளம் கண்டு கொண்டாலே எந்த பகுதி தொற்றுள்ள பகுதி, எந்த பகுதி தொற்றற்ற பகுதி என்பதை தெளிவாக அறிய முடியும். அதன் பின்னர் தொற்றுள்ள ஒரு பகுதியில் 28 நாட்களுக்கு எந்தவொரு தொற்றாளரும் அடையாளம் காணப்படாவிட்டால் அதனை தொற்றற்ற பகுதியாக அடையாளப்படுத்த முடியும்.
இவ்வாறு நாங்கள் படிப்படியாக பரிசோதனைகளை செய்யும் போது தொற்றுள்ள பகுதிகள் தொற்றற்ற பகுதிகளாக மாற்றமடையும். அவ்வாறு நாங்கள் தொற்றற்ற பகுதிகளை அதிகரிக்க வேண்டும். அதன்பின்னர் தொற்றற்ற பகுதிகளை விடுவிக்க முடியும்.
நாட்டில் பிரதேச செயலாளர் பிரிவையே ஒரு அலகாக நாங்கள் அடையாளப்படுத்தினோம். அதன்படி பரிசோதனைகளை முன்னெடுத்து ஒவ்வொரு பகுதியாக விடுவிக்கமுடியும். இதுவே, எங்களுடைய வடிவமாக இருந்தது. ஆகவே, தற்போது நாட்டை விடுவிப்பதென்பது ஆபத்தானது தான்.
எனினும், பொருளாதார நோக்கத்திற்காக நாட்டை விடுவிப்பதற்கு அரசு எடுத்துள்ள முடிவுக்கு பொது மக்களே ஆதரவு வழங்க வேண்டும். நாடு விடுவிக்கப்படாலும் அரசாங்கம் வழங்கியுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மாறாக, பின்பற்ற தவறும் போது மீண்டும் ஒரு பாரிய அழிவுக்கு இட்டுச் செல்லும்.
கேள்வி; அரசாங்க மருத்துவ சங்கம் கொரோனா தொற்று ஆரம்பித்த போது பல்வேறு யோசனைகளை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள போதிலும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொண்டதாக நினைக்கின்றீர்களா?
பதில்; நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டது தொடக்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு தெளிவான கடிதமொன்றை அனுப்பினோம். அதன்படி, நாட்டை முடக்குவது, விமான நிலையங்களை பூட்டுதல் போன்ற ஆலோசனைகளை வழங்கியிருந்தோம்.
அதன்படி, நாங்கள் வழங்கிய ஆலோசனைகளை அமுல்படுத்துவதில் சில சில தாமதங்கள் ஏற்பட்டாலும் ஜனாதிபதி எங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டார்.
இருப்பினும், பரிசோதனைகள் செய்யும் விடயத்தில் சுகாதார அமைச்சிலுள்ள அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பரிசோதனைகளின் வீரியமும் அதிகளவான பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவில்லை. நாங்கள் பாரிய அழுத்தம் கொடுத்த 2 வாரங்களுக்கு பின்னரே பரிசோதனைகளை அதிகரித்தனர். ஆகவே, எங்களுடைய ஆலோசனைகள் குறித்து கவனம் செலுத்தினாலும் அதனை அமுல்படுத்துவதில் பாரிய தாமதம் ஏற்பட்டது.
கேள்வி; உங்களுடைய ஆலோசனைகளை அமுல்படுத்தில் ஏற்பட்ட தாமதம் தற்போதைய நிலைமைக்கு காரணமாக இருக்கின்றதா?
பதில்; உண்மையில் பரிசோதனைகளை அதிகரிக்காதமையே 824 வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக் காரணமாகிற்று. எனினும் நாங்கள் இன்னும் முறையான வகையில் பரிசோதனைகளை அதிகரிக்காதமையினால் 800 வரையான தொற்றாளர்களே இருக்கின்றனர் என்று கூற முடியாது. அதனை விட அதிகளவான தொற்றாளர்கள் இருக்கக் கூடும்.
கேள்வி; இந்த நிலையில் 11 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்துவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கினீர்களா?
பதில்; பொளாதார ரீதியில் நாடு விடுவிக்கப்பட்டாலும் சரியான முறையில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்ட சகல ஆலோசனைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும். மேலும், பரிசோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
அத்தோடு, கிராமங்கள் மற்றும் சில பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியை முற்றாக முடக்க வேண்டும். அதேபோன்று, மீண்டுமொரு அலை போன்று பாரியளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் மீண்டும் நாட்டை முற்றாக முடக்க வேண்டிவருமெனவும் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
கேள்வி; 11 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையின் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதா? அல்லது இயல்பு நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதா?
பதில்; அது பொது மக்களின் கைகளிலே யே தங்கியுள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது ஏனைய காலத்தைப் போன்றதல்ல. தனி நபரின் பாதுகாப்புக்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டமாகும். ஆகவே, இதனை பொது மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, நாடு மோசமடையுமா அல்லது இயல்பு நிலைக்கு திருப்புமா என்பதை பொது மக்களின் செயற்பாடுகள் தீர்மானிப்பதுடன் பொது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக, சமூக இடைவெளியை பேணுதல், தேவையற்ற விதத்தில் வெளியில் செல்வதை தவிர்த்தல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிவது போன்ற சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
கேள்வி; சமூக இடைவெளியை தொடர்ந்து வலியுறுத்துகின்ற போதும் மக்கள் அதனை கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை. அவ்வாறாயின் மக்கள் கொரோனா தொற்றின் வீரியத்தை இன்னும் உணரவில்லையா?
பதில்; பெரும்பாலான நகரப் பகுதியில் சமூக இடைவெளியை பின் பற்றுவதை காணக் கூடியதாக்க இருக்கின்றது. மாறாக, கிராமப் புறத்திலேயே பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இது தொடர்பாக பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டிய பொறுப்பு, கிராம சேவகர்கள், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கின்றது. அவ்வாறு, அறிவுறுத்தல்கள் வழங்கியும் பொது மக்கள் பொறுப்பற்றவர்களாக இருப்பார்களாயின் அவர்கள் கொரோனா தொற்றின் வீரியம் மற்றும் பாதிப்பை இன்னும் உணரவில்லையென்றே கூற வேண்டும்.
கேள்வி;கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மீண்டும் சமூகத்தில் நடமாடுவதற்கு முன்னர் அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை அவசியமாகின்றதா?
பதில்; பரிசோதனைகள் வீரியமாக செய்யப்பட வேண்டுமென்பதில் நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள், நோய் அறிகுறிகள் தென்படாதவர்கள் மற்றும் நோய் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் பல்வேறு பகுதிகளாக பரிசோதனை செய்ய வேண்டும். அதன்படி, சுய தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு நிச்சயமாக பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
ஆகவே, எந்தளவுக்கு நாங்கள் பரிசோதனைகள் செய்கின்றமோ அந்தளவுக்கு கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண முடியும். ஆகவே, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் பரிசோதனை தேவைப்படுகின்றது.
கேள்வி; கடந்த 5 ஆம் திகதி மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறிய அரசு பின்னர் அதனை இல்லையெனக் கூறியதில் எந்தளவு உண்மையுள்ளது?
பதில்; பரிசோதனைகளில் நோயை கண்டறியும் ஆற்றல் மற்றும் நோய் இல்லையென்று கூறும் ஆற்றல் என இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அதன்படி, பீ.சீ.ஆர் பரிசோதனையில் 70 வீதமே இருக்கும் என்பதை காட்டும். ஏனைய 30 வீதம் இல்லையென்பதை காட்டும். ஆகவே, ஒரு முறைக்கு பதிலாக 3 முறை பரிசோதனை செய்யும் போதே 97, 98 வீத உண்மையை அறிய முடியும்.
பரிசோதனைகளின் போது தவறுகளும் காணப்படலாம். ஆகவே, சீனாவிலிருந்து வருகை தந்த பரிசோதனை கருவிகளை இந்தியா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகள் தரம் குறைந்த கருவிகள் எனக் கூறி திருப்பி அனுப்பியது. ஆகவே, அவ்வாறான கருவிகளில் கூட தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்.
கேள்வி; ஊரடங்கு சட்டத்தை நீக்குவது மோசமான முடிவு என உலக சுகாதார ஸ்தாபகம் குறிப்பட்டுள்ள போதிலும் அரசு அதனை கவனத்தில் கொள்ளவில்லையா?
பதில்; உலக சுகாதார அமையம் குறிப்பிட்டது போன்று, முதலில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் வேண்டும். அதன்படி, இலங்கையில் இந்த கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நிலைமையிலேயே இருக்கின்றது. அடுத்து, பரிசோதனைகளை அதிகரித்து உண்மையான தொற்றாளர்களை அடையாளம் காண வேண்டும்.
அத்தோடு, அபாயமிக்க பகுதிகளை கண்காணிக்கக் கூடிய வகையிலான பொறிமுறைகள் காணப்பட வேண்டும். மேலும், சுகாதார ஆலோசனைகளை பொது மக்களுக்கு முறையாக வலியுறுத்தி பின்பற்ற வேண்டிய நிலைமை கொண்டிருத்தல், விமான நிலையங்கள் திறக்கப்பட்டால் அதன் ஊடாக வரும் மக்களை தனிமைப்படுத்தி சமூகத்திற்கு விடுதல் போன்ற பொறிமுறைகளை கடைபிடிக்க முடியுமானால் ஊரடங்கை தளர்த்த முடியும்.
அவுஸ்திரேலியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நாட்டை இயல்பு நிலைமைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், இங்கு உயிர்ப்பான தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. ஆனால், இலங்கையில் தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்வதால் அந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தற்போது ஊரடங்கை தளர்த்துவது ஆபத்தானதே. எனினும் நாடு விடுவிக்கப்பட்டாலும் நாட்டில் நிலைமை மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
கேள்வி; இலங்கையில் தற்போதுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டும் அபாயமுள்ளதா? அல்லது 1000 இற்குள் கட்டுப்படுத்தும் நிலைமையுள்ளதா?
பதில்; இலங்கையில் முதல் நோயாளர் அடையாளம் காணப்பட்டது தொடக்கம் முதல் 100 நோயாளர்கள் அடையாளம் காணப்பட 57 நாட்களும் அடுத்த 100 (200) நோயாளர்கள் அடையாளம் காணப்பட 16 நாட்களும் அடுத்த 100 (300) நோயாளர்களை அடையாளம் காண 8 நாட்களும் அடுத்த 100 (400) நோயாளர்களை அடையாளம் காண 4 நாட்களும் அடுத்த 100 (500) நோயாளர்களை அடையாளம் காண 2 நாட்களும் அடுத்த 100 (600) நோயாளர்களை அடையாளம் காண ஒன்றரை நாட்களும் சென்றது.
எனினும் தற்போது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்படும் போக்கு குறைவடைந்துள்ளது. ஆகவே, தற்போதும் கொரோனா தொற்று முகாமைத்துவம் செய்யும் அளவிலேயே காணப்படுகின்றது. எனினும் ஏப்ரல் நடுப்பகுதி - இறுதி பகுதி வரையே கொரோனா தொற்றுக்கான வீரியம் அதிகமாக இருக்குமென நாங்கள் கூறியிருந்தோம்.
அதன்படி, ஏப்ரல் இறுதியிலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆகவே, இதன் போக்கு நாளாந்தம் மாறிக் கொண்டே செல்கின்றது. அதனால், நோயின் சரியான தாக்கத்தை எதிர்வு கூற முடியாதுள்ளது. குறிப்பாக, இலங்கையில் 1000 நோயாளர்களை அடையாளம் காணப்பட இன்னும் 8 நாட்கள் எடுக்கலாம் அல்லது இரண்டு வாரங்கள் கூட எடுக்கலாம். ஆகவே, கொரோனா தொற்று புதிது என்பதால் இது தொடர்பாக எதிர்வு கூற முடியாதுள்ளது.
குறிப்பாக, கொரோனாவின் வயது 5 மாதங்கள் என்பதால், இது எப்போது முற்றாக ஒழியும், எந்த காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று எதிர்வு கூற முடியாததால் பொது மக்கள் இது தொடர்பாக எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.