19/05/2021
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ( பாகம்-1)
"இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு வலுவான வரலாற்று சான்றுகள் உள்ளதா?" என்ற கேள்வியை கொண்டே இத்தொடர் ஆரம்பிக்க இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் இத் தொடர் நீண்ட ஆய்வின் பின்னனியில் பலரது ஆலோசனை மற்றும் முயற்சியில் செதுக்கப்படுகிறது.
முதலாவதாக வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில் இயேசு சிலுவையில் மரிக்கவில்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை முஸ்லிம்கள் கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஏனென்றால் சிலுவையில் இருப்பவர் இயேசுவாக கருதப்பட்டவர் மாறாக இயேசுவே அல்ல என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். அதற்கு வேதமும் சாட்சியளிக்கின்றது.
மேலும் இயேசுவின் எதிரிகள் சிலுவையில் அறையப்பட்டவர் இயேசு என்று நம்ப வைக்கப்பட்டனர் என்றே இஸ்லாம் கூறுகின்றது. அதனால் இயேசுவின் சிலுவை பலியை எந்த விதமான தேவ வெளிப்பாடும் இல்லாமல் கிறிஸ்தவர்கள் நம்புவது மாபெரும் பிழையே. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்ற வேத வெளிப்பாட்டை பெற்ற முஸ்லிம்களாகிய நாங்கள் கிறிஸ்தவர்கள் நம்புகின்ற இயேசுவின் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
இருந்தபோதிலும் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதை வரலாற்று ஆதாரத்தோடு நிரூபிக்கும் வகையில் இந்த பதிவு தொடர்கிறது.
கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்ட சான்றுகள்:
சிலை பலிக்கான ஆதாரங்கள் பைபிளிலிருந்தோ, யூதர்களிடமிருந்தோ, ரோமர்களிடமிருந்தோ அல்லது ஜோசபஸிடமிருந்தோ எடுக்கப்பட்டுள்ளன. பைபிளைப் பொறுத்தவரை, நான்கு நற்செய்திகளில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட கதையைப் பார்க்கும்போது, நற்செய்திகளுக்கு இடையில் பல்வேறான முரண்பாடுகளை காண முடிகிறது. மிக முக்கியமாக யூதாஸ் இயேசுவைக் காட்டி கொடுத்த விதம், யூதாஸ் இறந்த விதம், சிலுவையில் அறையப்பட்ட நேரம், இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர் கல்லறைக்குச் சென்றவர்கள் யார் என்பதில் உள்ள முரண்பாடுகள் போன்ற தகவலின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தாமல் சுவிசேஷ ஆசிரியர்கள் தாங்கள் கேட்டதை எழுதியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இயேசுவின் சிலுவை மரணத்தை பேசுகின்ற ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் இருவருமே சிலுவை சம்பவத்திற்கு பிறகு பிறந்தவர்கள்,
எடுத்துக்காட்டாக டசிட்டஸ்(Tacitus) கி.பி 56 இல் பிறந்தார், சமோஸ்டாவின் லூசியன்(Lucian of Samosta) கி.பி 125 இல் பிறந்தார். இந்த இருவரும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்து இருக்கவில்லை. அவர்கள் இருவரும் மக்கள் சொன்னதிலிருந்து செவிவழிச் செய்தியை மட்டுமே பதிவு செய்துள்ளார்கள். தவிர, மத்தேயு 27:51-ல் சொல்லப்பட்டுள்ள மாபெரும் நிகழ்வுகளை அவர்கள் பேசவே இல்லை. இதனால் அவர்களின் தகவல் நம்பத் தகுந்ததாக ஆகிவிடுகிறது.
இயேசுவைப் பற்றி ஜோசபஸ் கூறியதைப் பொறுத்தவரை, இதன் நம்பகத்தன்மை மிக மிக பலவீனமானது. ஆரம்பகால சர்ச் பிதாக்களில் யூசிபியஸ் வரை இதை பற்றி அவர்கள் அறிந்து இருக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஜோசபஸ் எழுத்துக்களை நன்கு அறிந்த ஓரிஜென் கூட ஜோசபஸின் சாட்சியத்தைப் பற்றி பேசாமல் இருப்பது தான் ஜோசபஸின் நம்பகத் தன்மையை முற்றிலும் மறுத்து விடுகிறது.
சிலுவையில் அறையப்பட்டவர் இயேசு என்ற கருத்தானது மக்களிடையே பரப்பப்பட்ட கதைகள் மட்டுமே. மேலும் இது குர்ஆனில் எல்லாம் வல்ல தேவன் கூறியது போல மிக துல்லியமான சான்றுகளாக ஆகாது.
இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(அல்குர்ஆன் 4:157)
இயேசுவின் சிலுவை மரணத்தை ஒட்டி ஒரு சில பெரும் சம்பவங்கள் நடந்ததாக பைபிள் பதிவு செய்கிறது. இதனை குறித்து ஆய்வு செய்தாலே இயேசுவின் சிலுவை மரணத்தை போதிக்கின்ற பைபிளின் நம்பகத்தன்மை வேரறுந்துவிடும்.
மத்தேயு 27
51: அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
52: கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53: அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து கல்லறையை விட்டு புறப்பட்டு பரிசுத்த தலமான ஜெருசலேமில் நுழைவது என்பது மாபெரும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். குறிப்பாக இது சிலுவையில் அறையப்படும்போது நடந்ததாக சொல்லப்படுகிறது.
அப்படியென்றால் இதற்கு ஏதேனும் ஒரு வரலாற்று ஆதாரம் இருக்கிறதா என்று கிறிஸ்தவர்களிடம் கேட்டால், நிச்சயமாக இதற்கான பதில் இல்லை என்பதாகவே உள்ளது. இயேசுவின் சிலுவை மரணத்திற்கு பின்னர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானிய வரலாற்றாசிரியரான தல்லஸைப் பற்றி கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டலாம். ஆனால் பிற்கால கிறிஸ்தவ எழுத்துக்களில் இருந்து சில தெளிவற்ற மேற்கோள்களைத் தவிர தல்லஸின் எழுத்துக்களுக்கு உண்மையில் எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது கிறிஸ்தவமல்லாத சான்றுகளாக ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்கு மற்றும் யோவானின் நற்செய்திகள் கூட இந்த நிகழ்வைக் குறிப்பிடவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆரம்பகால கிறிஸ்தவ ஆவணங்கள் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்றும், மாறாக இயேசுவுக்கு பதில் வேறொருவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறுகிறது. (https://www.ccel.org/ccel/schaff/hcc2.v.xiii.xiii.html)
இயேசு (ஸல்) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டதாக எல்லா ஆரம்பகால கிறிஸ்தவ பிரிவுகளும் நம்பவில்லை, உதாரணமாக சிலுவையில் அறையப்பட்டது சைரனின் சீமோன் என்று நம்பிய பசிலிடேஸ் குழுவினர்; இயேசு அவருடன் தனது உருவத்தை பரிமாறிக்கொண்டார் எனவும், சீமோனின் வடிவத்தில் பிறருக்கு தெரியாமல் நின்று, அவரை சிலுவையில் அறைந்தவர்களை கேலி செய்து, பின்னர் விண்ணுக்கு ஏறினார் என்றும் நம்பினர்.
யூதாஸின் நற்செய்தியில் இயேசு யூதாஸிடம் சொன்னதாக கீழ்வரும் செய்தி வருகிறது:
“Truly [i] say to you, Judas, [those who] offer sacrifices to Saklas [… lines missing …] everything that is evil. But you will exceed all of them. For you will sacrifice the man thatclothes me. Already your horn has been raised, your wrath has been kindled, your star has shown brightly, and your heart has [been hardened…]” (Source here)
“உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன், யூதாஸ், [சக்லாஸுக்கு பலிகளைச் செலுத்துபவர்கள் [… வசனங்கள் காணவில்லை ] இவை அனைத்தும் தீமையே. ஆனால் நீ அவர்கள் அனைத்தையும் மீறுவாய். என்னை உடுத்தும் மனிதனை நீங்கள் பலியிடுவீர்கள். ஏற்கனவே உங்கள் எக்காளம் எழுப்பப்பட்டு விட்டது, உங்கள் கோபம் தூண்டப்பட்டுவிட்டது, உங்கள் நட்சத்திரம் பிரகாசமாகக் காட்டப்பட்டுள்ளது, உங்கள் இதயம் [கடினப்படுத்தப்பட்டுள்ளது…] ”
ஆகவே, யூதாஸின் நற்செய்தின்படி, யாரோ ஒருவர் இயேசுவின் உருவத்தை உடுத்தி சிலுவையில் மரணிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நூல் யூதாஸைப் பற்றி புதிய பிம்பதை தருகிறது. இயேசுவால் மிகவும் நேசிக்கப்பட்ட சீடராக யூதாஸ் இருந்துள்ளார் என்றும், மேலும், இயேசுவின் வேண்டுகோளின்படியே யூதாஸ், அவரைக் காட்டிக் கொடுத்துள்ளார் என்பவையும் இந்த நற்செய்தி நூல் சொல்லும் முக்கிய செய்திகளாகும். 1970 ஆம் ஆண்டு எகிப்தின் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ஆவணங்களில் (ancient documents), இதுவும் ஒன்று. தேசிய புவியியல் சங்கத்தால் (National Geographic Soceity) அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நூல் முற்கால கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூலின் பிரதியாகும் (copy). யூதாஸ் இஸ்காரியோத்தின் நற்செய்தி பற்றி, கி.பி.180 வாக்கில், லியனின் (தற்போதைய ப்ரான்ஸ் ) ஆயர் இரேனியஸ் (Bishop Iraneous) முதன் முதல் குறிப்பட்டிருக்கிறார். அவர் அது திருச்சபைக்கு முக்கிய கொள்கைக்கு விரோதமானது என்பதால் விலக்கப்பட்ட நூல் ( heresy), என அறிவித்தார்.
தொடரும்………………..