
10/11/2024
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் சி.மு.கா. கட்சிக்கு வாக்களித்து தனித்துவமான பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வேட்பாளர் உதுமாலெவ்வை.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகையால், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து தனித்துவமான பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சி.மு.கா. திகாமடுல்ல மாவட்ட 07ம் இலக்க வேட்பாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கேட்டுக் கொண்டார்.
அட்டாளைச்சேனை சறா மண்டபத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த வேட்பாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மேலும் கூறுகையில்,
14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளிலிருந்து நமக்கான முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் அவதானமாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் வாக்குகளினால் பெரும்பான்மையினப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் கடந்த காலத் தவறு இனிமேலும் இடம்பெறக் கூடாது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நான் சி.மு.காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் வேறு கட்சியொன்றில் தேர்தலில் போட்டியிட்டால் பெரும்பான்மையின மக்களின் 15 ஆயிரம் தெரிவு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், நமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிலிருந்து பாராளுமன்றப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதனாலயே இக்கட்சியில் போட்டியிடுகின்றேன்.
அட்டாளைச்சேனை பிராந்தியத்திலுள்ள உலமாக்கள். கல்வியியலாளர்கள், சமூகப் பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கூட்டாக என்னை தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கோரினர். மாத்திரமன்றி, 35850 வாக்காளர்கள் உள்ள இப்பிரதேசத்தில் 80 வீதமானவர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். .
அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் நான் அரசியல், பிரதேச, இன, மத, பேதம் பார்க்காது பல்வேறு சேவைகளைச் செய்தேன். அதனை எங்குசென்றாலும் காண்டுகொள்ள முடியும். தற்பொழுது அப்பிரதேசங்களுக்கு நாங்கள் சென்றபோது மக்கள் பேராதரவு வழங்கினர். தேர்தலில் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
எதிர்காலத்தில் பாராளுமன்ற அதிகாரம் கிடைக்குமானால் எமது பணிகள் பேதங்களின்றி தொடரும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு தொழிப்பட வேண்டும் என்பதை செயலுருப்படுத்திக் காட்டுவேன். அதற்கான சந்தர்ப்பத்தை தேர்தலில் மரச் சின்னத்திற்கும், 07ம் இலக்கத்திற்கும் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றார்.
சிறிலங்கா சி.மு.கா. பிரதித் தலைவர் சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட், சி.மு.கா. அட்டாளைச்சேனை மத்திய குழுத் தலைவர் எஸ்.எல்.எம்.ஹலீம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Paid Post