26/12/2025
வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வித் துறையின் முன்னோடி-மர்ஹூம் காதர் முகைதீன் சேர் – ஒரு வரலாற்றுச் சேவையாளர்…
வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர், இலங்கை கல்வி நிருவாக சேவையின் மிக மூத்த அதிகாரி, மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் சேர் அவர்கள் கடந்த 20/12/2025 (சனிக்கிழமை) அன்று வபாத்தானார்கள் என்ற செய்தி எம்மனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.
அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டு, சாய்ந்தமருதுவை வசிப்பிடமாகக் கொண்ட அன்னார்,
கல்வித்துறையில் பல தசாப்தங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஓர் அரிய மனிதர்.
அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிரதம கல்வி அதிகாரியாகவும், மன்னார் மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும், வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி செயலராகவும் கடமையாற்றியதுடன்,
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் அதிபராகக் கடமையாற்றி பாடசாலைக்கு மிகப் பெரிய பங்காற்றியவர்.
குறிப்பாக, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக மாற்றப்படுவதற்கு
அவரது பங்கு மிக முக்கியமானது என்பதை
வரலாறு அறிந்தவர்கள் இன்று பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள். அந்த மகத்தான சேவையை நினைவுகூரும் வகையில், இன்று பாடசாலையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு
உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வை பாடசாலை நிருவாகமும் SDEC யும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு, பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
அதில் பாடசாலை அதிபர் அவர்கள், -மர்ஹூம் காதர் முகைதீன் சேர் கல்விக்காக செய்த தியாகங்களையும்,
அவர் விட்டுச் சென்ற தடங்களையும்
மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
அத்துடன்,
பாடசாலை SDEC செயலாளராக நான் கூறிய கருத்து:
“ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை
அவர் செய்து விட்டுப் போகும் பணிகளே பேசும்.
இன்று நாம் ஒரு சேவையாளருக்காக
இறைவனிடம் பிரார்த்திக்கும் நிகழ்வில்
ஒன்றுகூடியிருப்பதே
அவர் இந்த உலகில் எவ்வாறு வாழ்ந்தார் என்பதற்கான
மிகச் சிறந்த சாட்சி.”
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட
ஆசிரியர்கள், மாணவர்கள், SDEC உறுப்பினர்கள் அனைவரிடமும், “நாம் மறைந்த பிறகு இந்த சமூகம் எமக்காக பிரார்த்திக்கும் அளவுக்கு நாம் வாழ வேண்டும்” என்ற ஓர் எடுத்துக்காட்டாக மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் வாழ்க்கை எப்போதும் நினைவில் நிற்கும் என வலியுறுத்தினேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்,
மர்ஹூம் காதர் முகைதீன் சேர் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவருடைய கல்விச் சேவைகளை சதகா ஜாரியாக ஏற்று,
உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!
ஆமீன்!!