31/08/2022
பதிவு தபால், பார்சலுக்கு ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தலாம்: அஞ்சல் துறையில் புதிய வசதி அறிமுகம்
சென்னை: ஷாப்பிங் மால் முதல் தெருவோர தள்ளுவண்டி கடை வரை தற்போது ‘க்யூஆர் கோடு’ அட்டையை ஸ்கேன் செய்து, ஃபோன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்த முடிகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு உருவானது ‘யுபிஐ’.
நேரடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான, மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ. இது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. ஸ்மார்ட்போன் செயலி வழியாக ஒரு வங்கியில் இருந்து எந்தவங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது.
கடந்த 2016 ஏப்ரல் மாதம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ மூலமாக, முதல் ஆண்டிலேயே ரூ.707 கோடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டு ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2016-ல் யுபிஐயின் கீழ் 35 வங்கிகள் இருந்தன. தற்போது 282 வங்கிகள் உள்ளன. யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.
இந்நிலையில், யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது:
மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணுசேவையை அறிமுகம் செய்து வருகிறது. மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைப்பது மட்டுமின்றி, ஊழியர்களுக்கு பணிச் சுமையை குறைக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், அஞ்சல் துறையில் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்காக யுபிஐக்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சலகங்களிலும்இந்த சேவை கடந்த ஏப்ரலில் அறிமுகமானது.
முதல்கட்டமாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் பதிவு தபால்கள், விரைவு தபால்கள், பார்சல்களுக்கு யுபிஐ க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம்.
இதன்மூலமாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 19-ம்தேதி வரை 12,208 பரிவர்த்தனைகள், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 5,341 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளை அஞ்சலகங்களில் இது சோதனை கட்டத்தில் உள்ளது. சோதனை முடிந்ததும் விரைவில் அங்கும் அமல்படுத்தப்படும். சேமிப்பு கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு,மணியார்டர் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் யுபிஐ மூலம் பணம்செலுத்தும் வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்றார்.