06/08/2023
முதலாம் உலக யுத்தம் துவக்கம்!
1914-ம் வருடம். பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் தொடங்கிய யுத்தம் ஒன்று, பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் உலக மகா யுத்தமாக மாறத் துவங்கியது. பிரிட்டனுடன் பிரான்ஸ் மற்றும் சோவியத் ரஷ்யா கூட்டணி அமைக்க, ஜெர்மன் தரப்பிலோ அன்றைய ஆஸ்திரிய – ஹங்கேரி பேரரசும், ஒட்டோமான் துருக்கி பேரரசும் யுத்தக்களம் கண்டன.
கோர்டைட்டும் அசிட்டோனும்!
இந்த யுத்தத்தில் பிரிட்டன் தரப்பில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளின் குண்டுகள் ’கோர்டைட்’ எனும் வெடிமருந்தினால் தயாரிக்கப்பட்டன. இந்த வெடிமருந்து கொண்டு தயாரிக்கப்படும் குண்டுகள் ‘புகையில்லா குண்டு’களாக வெளிப்பட்டன. ’கோர்டைட்’ மருந்தை 1889-ம் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே தயாரித்து வந்தது பிரிட்டன். ஏனெனில், பிரிட்டிஷ் இராணுவமும் அதன் கடற்படையும் தங்கள் பீரங்கிகளுக்கான குண்டுகளுக்கு ’கோர்டைட்’டையே சார்ந்திருந்தன. மேலும் தரைப்படை மற்றும் கடற்படை விமானங்களை தீயிலிருந்து காப்பது, அவற்றின் இறக்கைகளில் நீர்ப்புகாமற் பாதுகாப்பது, மற்றும் அவற்றை உறுதிப்படுத்துவது ஆகிய பாதுகாப்பு அம்சங்களில் மேற்பூச்சாகவும் இந்த ’கோர்டைட்’ பயன்படுத்தப்பட்டு வந்தது.
’கோர்டைட்’ தயாரிப்பில் பொதுவாக அசிட்டோன் எனும் வேதிப்பொருளே மிக முக்கிய அங்கமாக இருந்தது. அன்றைய வேதியியல் உலகில், அசிட்டிக் அமிலத்தன்மை கொண்ட மரங்களை சில வேதியியல் செயல்முறைகளுக்கு உட்படுத்துவதன் மூலமாகவே அசிட்டோனை தயாரித்து வந்தனர். இந்த முறையில் 1 டன் அசிட்டோன் தயாரிக்க மட்டுமே 100 டன் மரங்கள் தேவைப்படும். அந்த மரங்களும் பரவலாக எல்லா நாடுகளிலும் இருக்காது. ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற குறிப்பிட்ட நாடுகளிலேயே வளரும். அசிட்டோன் உற்பத்திக்கு, இந்த செயல்முறையையும் வழிமுறையையுமே பிரிட்டனும் பின்பற்றி வந்தது. அசிட்டிக் அமில வகை மரங்களை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றிலிருந்து அசிட்டிக் அமிலத்தை பிரித்தெடுப்பதன் மூலம் அந்நாடு அசிட்டோனை உற்பத்தி செய்துவந்தது. அதன் மூலம் தன் பீரங்கிகளுக்கான கோர்டைட் தேவையையும் அந்நாடு பூர்த்தி செய்துகொண்டது.
தோல்வி பயத்தில் தத்தளித்த பிரிட்டன்!
இந்த நிலையில், யுத்தக்காலத்தில் பிரிட்டன் இராணுவ பீரங்கிகளுக்கான குண்டுகளின் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க, அந்த குண்டுகளை தயாரிப்பதற்கான ’கோர்டைட்’டின் தேவையும் அதிகரித்தது. கோர்டைட்டை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், டன் கணக்கில் அசிட்டோன் தேவை.
பொதுவாகவே, ஒரு டன் அசிட்டோன் உற்பத்தி செய்வதற்கே, 100 டன் அளவில் ’அசிட்டிக் அமில’ மரங்கள் தேவை என்பதால், யுத்தக்கால அசிட்டோன் தேவையும் பல்லாயிரம் டன்களாய் அதிகரித்து, அவற்றிற்கான மரங்களின் தேவையும் பல லட்சம் டன்களாய் அதிகரித்தது. அந்த மரங்களையும் ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், ஆஸ்திரிய ஜெர்மனி நாடுகளோ அப்போது பிரிட்டனுக்கு எதிர் வரிசையில் யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால், அசிட்டோன் உற்பத்திக்கான மரங்களை இறக்குமதி செய்யும் வாய்ப்புகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன. செய்வதறியாமல் தவித்தது பிரிட்டன்.
குண்டுகள் இல்லாமல் பீரங்கிகள் இயங்க முடியாது. கோர்டைட் இல்லாமல் குண்டுகள் உருவாக முடியாது. அசிட்டோன் இல்லாமல் கோர்டைட் உருவாக்க முடியாது. ஆஸ்திரிய, ஜெர்மனி மரங்கள் இல்லாமல் அசிட்டோன் தயாரிக்க முடியாது.
அவமானகரமான தோல்வியை சந்தித்த பிரிட்டன்
பிரிட்டனின் இராணுவ நிலை இப்படி இருக்க, யுத்தத்தின் நிலையோ இன்னும் இன்னும் நீண்டுகொண்டே இருந்தது. 1914-ன் இறுதியில் துவங்கிய யுத்தம், 1916-ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது. யுத்தம் நீண்டதால், பீரங்கி குண்டுகளின் கையிருப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போய், பிரிட்டனின் தோல்வி பயம் கூடிக்கொண்டே போனது; உயர் அதிகார மட்டங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், 1915 பிப்ரவரி முதல் 1916 ஜனவரி வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில், ஒட்டமான் துருக்கி பேரரசின் முக்கிய நிலைகள் மீது ’கல்லிபோலி’ என்ற இடத்தில் மையம் கொண்டு, தொடர் தாக்குதல்களை நிகழ்த்திய பிரிட்டன், .அதில் பெரும் தோல்வியை சந்தித்தது. பீரங்கி குண்டுகள் பற்றாக்குறை (lack of artillery shells) ஏற்படுத்திய பதற்றத்தோடு, ’கல்லிபோலியில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியும் (humiliating defeat) சேர்ந்துகொள்ள, தொடர்ந்து யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என கலங்கி நின்றது, அன்றைய உலக வல்லரசு.
பிரதமர் பதவியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
பிரிட்டனின் அரச குடும்பம் உள்ளிட்ட உயர் அதிகார மட்டத்திலிருந்து, பிரதமர் ஹெர்பர்ட் ஹென்றி அஸ்க்வித் மீது அதிருப்திகள் வெடித்தன. அவர் பிரதமர் பதவியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, டேவிட் லாயிட் ஜார்ஜ் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார். இவர், ஹெர்பர்டின் அமைச்சரவையில் யுத்த அமைச்சராகப் பணியாற்றியவர். பிரதமர் பதவியில் ஏற்பட்ட மாற்றம் பலன்கொடுக்கத் தொடங்கியது. பிரிட்டனின் தோல்வி முகம் மெல்ல மாற துவங்கியது.
இரட்சகனாய் வெளிப்பட்ட இங்கிலாந்து வாழ் யூதன்!
உண்மையில், பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜூக்கு பின்னணியில் இருந்து பிரிட்டனின் தோல்வி முகத்தை மாற்றி அமைத்தவர், செய்ம் வெய்ஸ்மான் என்ற யூதர் தான். இவருக்கும் பிரிட்டனின் உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த உறவுதான், உலக யுத்தத்தில் பிரிட்டனின் எழுச்சிக்கும், உலக அரங்கில் இஸ்ரேலின் பிறப்புக்கும் வித்திட்டது.
யூதர்களின் பூர்வ நிலமான பலஸ்தீனாவில் அவர்களுக்கென அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு அமைய வேண்டும் என்பதற்காக, 1897-இல் தியோடர் ஹெர்சல் என்பவர் சீயோனிஸ்ட் அமைப்பை துவக்கினார். இந்த அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்துவந்த யூத அறிஞர்களும், கல்வியாளர்களும், செல்வந்தர்களும் அங்கம் வகித்து வந்தனர். அவர்களில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த செய்ம் வெய்ஸ்மானும் ஒருவர். பின்னர் இவர் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தபோது, அந்நாட்டின் சீயோனிஸ்ட் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதன் தலைவராகவும் உயர்ந்தார். அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டபோது, அவருக்கு அதிகாரமட்டத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களோடு தொடர்புகள் ஏற்பட்டன.
வேதியியல் விஞ்ஞானியாக சாதனைக்களுக்கு வித்திட்ட வெய்ஸ்மான்!
1904-ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறிய வெய்ஸ்மான், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் மூத்த பேராசிரியராகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், பல்கலைக்கழகப் பணியாளராக மட்டுமல்லாமல், தன் துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். அவற்றில் தான் கண்டறிந்த வெற்றிகரமான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களையும் அவர் பெற்று வந்தார். வேதியியல் துறையில் பெயர் சொல்லத்தக்க வகையில் அவர் நிகழ்த்திய பல்வேறு பங்களிப்புகளுள் ஒன்று, ’அசிட்டோன்’ என்ற கரைப்பான் (SOLVENT) தயாரிப்பு.
அறிவியல் உலகை ஆச்சரியப்படுத்திய வெய்ஸ்மான் செயல்முறை!
அசிட்டோன் தயாரிப்பில் அன்றைய அறிவியல் உலகில் பொதுவாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த கடினமான செயல்முறைக்கு, செய்ம் வெய்ஸ்மான் ஒரு எளிய மாற்று முறையை கண்டுபிடித்தார். அரிய வகை மரங்களுக்கு பதிலாக, எளிதாகக் கிடைக்கும் மக்காச்சோள வகைகளையும் உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தி அவர் அசிட்டோன் தயாரித்துக் காண்பித்தார். அதிலும் முக்கியமாக அவர் சோள வகைகளையே அதிகம் பயன்படுத்தினார். அசிட்டோன் உற்பத்தியில் செய்ம் வெய்ஸ்மான் புகுத்திய இந்த புதிய முறை "வெய்ஸ்மான் செயல்முறை" என்று அழைக்கப்படுகிறது. வெய்ஸ்மானின் இந்த கண்டுபிடிப்பு, அறிவியல் மரபுகளுக்கே அப்பாற்பட்டதாக இன்றும் ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகிறது.
’மரவகை’ அசிட்டோனுக்கு, செய்ம் வீஸ்மானின் ’மக்காச்சோள’ அசிட்டோன் மிகச்சிறந்த மாற்றுமுறையாக இருந்தது. ஆம். அசிட்டோனுக்கான மரங்களை இனி எந்த நாட்டிலிருந்து பெறுவது என இங்கிலாந்து தவிக்க, அந்த இங்கிலாந்தில் விளைந்த சோளத்தை வைத்தே அசிட்டோன் தயாரிப்பதில் வெற்றி கண்டிருந்தார் வெய்ஸ்மான்.
வெய்ஸ்மானுடன் கைக்கோர்த்த ஜார்ஜ் - சர்ச்சில்!
டேவிட் லாயிட் ஜார்ஜ் - வின்ஸ்டன் சர்ச்சில்
1916. ஆட்சியாளர்களின் கவனம் செய்ம் வெய்ஸ்மான் பக்கம் திரும்பியது. பிரிட்டனின் அதிகார வரிசையில் முதன்மையான இடத்திலிருந்த பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வெய்ஸ்மானிடம், ’’அசிட்டோன் மருந்தை பெரிய அளவில் தயாரித்துத் தர முடியுமா’’ என்று கேட்க, அதற்கு ’’தேவையான சோள வகைகளையும் தொழிற்சாலையையும் கொடுத்தால் வேண்டிய அளவு தயாரித்துத் தருகிறேன்’’ எனக் கூறினார் வெய்ஸ்மன்.
ஆய்வகத்திற்குள் மட்டுமே அதுவரை பயணித்த வெய்ஸ்மான் செயல்முறை, விரைவான போர்க்கால விரிவாக்கத்திற்குட்பட்டு, தொழில்சாலைகளை நோக்கி நகர்ந்தது. பிரிட்டிஷ் பேரரசின் ஆளுகைக்குள் இருந்த எல்லா நாடுகளிலுமிருந்தும் சோள வகைகள் கொண்டு வரப்பட்டன. தொழிற்சாலைகள் இரவும் பகலும் தீவிரித்து இயங்கத் தொடங்கின. தேவையான அசிட்டோனை வெய்ஸ்மான் உற்பத்தி செய்து கொடுத்துக்கொண்டே இருந்தார்.
பீரங்கி குண்டுகள் உற்பத்தியகம்
தடையில்லா அசிட்டோன் உற்பத்தியால், கோர்டைட் வெடிமருந்து உற்பத்தியும் அதிகரித்தது. கோர்டைட்டின் உற்பத்திப் பெருக்கத்தால் புகையில்லா குண்டுகளும் தயாராகிக்கொண்டே இருந்தன. குண்டுகளின் பெருக்கத்தால் பிரிட்டன் பீரங்கிகளும் தடையில்லா மல் தாக்கிக்கொண்டே இருந்தன. வெற்றியும் பிரிட்டன் வசமாகிக்கொண்டே இருந்தது.