26/08/2022
சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு
சென்னை: சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையின் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயனடைய, மாற்றுத்திறனாளிகளுக்கான வயதுவரம்பை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறு, குறு,நடுத்தரத் தொழில் துறைச் செயலர் அருண்ராய் வெளியிட்டஅரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2010-11-ம்ஆண்டு முதல், குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான பணி உருவாக்கும் திட்டத்தின் கீழ், சுய வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்படி, பயனாளிகள் பொதுப் பிரிவினராக இருந்தால் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்பிசி, பி.சி., சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும், பயனாளி 8-வது தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தொழில் துறை ஆணையர் எழதிய கடிதத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் சங்கங்ளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், தகுதிகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநல பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கான வயது வரம்பு,குடும்ப வருமானம் ஆகியவற்றை தளர்த்துவதுடன், கல்வித் தகுதியை நீக்க வேண்டும் என்றும்கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இந்த தளர்வுகளைஅளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதைப் பரிசீலித்த தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலப் பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறுவதற்கான அதிகபட்ச வயதுவரம்பை 45-லிருந்து 56-ஆக உயர்த்தியுள்ளது. மேலும், கல்வித் தகுதியும் நீக்கப்படுகிறது. இந்த தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.