Poetry is just the evidence of life.If your life is burning well Poetry is just the ash. _(leonard cohen)
மிகவும் சத்தியமான வார்த்தைகள் இவை. நல்ல கவிதைகள் அனுபவங்களில் இருந்து வெளிப்படுபவை. நன்றாக மொழியை கையாளத் தெரியும் ஒருவனால் வார்த்தைகளை அழகாக விதைத்து விட இயலும். ஆனால் வாழ்க்கையை பிரதிபலிக்காத கவிதைகள் வீண். இயற்கையை பாடுவதும், வர்ணிப்பதுமில்லை கவிதை எந்த இலக்கியவடிவமாயினும் எதனை மறைபொருளாக க
ொண்டு இயங்குகிறதோ அதனை பொறுத்தே அந்த எழுத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கு தெரிந்த அளவில் மிகச்சிறந்த படைப்பாளிகள் பலரும் ஒரு கட்டத்திற்கு மேல் தம்மால் எழுத முடியாமல் போவதை நேர்மையாக ஒப்புக்கொண்டவர்கள்.
நான் ஆரம்பத்தில் வைரமுத்து கவிதைகள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், போன்றோரின் எழுத்துக்களை மட்டுமே வாசித்தவன். பதினோராம் வகுப்பு படிக்கிற போது, எல்லா நதியிலும் என் ஓடம் வாசித்துவிட்டு கலீல் கிப்ரானின் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.அங்கிருந்து தான் எனக்கான இலக்கிய ரசனை உருவாக ஆரம்பித்தது. கண்ணதாசன் பதிப்பக வெளியீடுகளாக வந்த அனைத்தையுமே வாசிக்க ஆரம்பித்தேன். கிப்ரானின் முறிந்த சிறகுகள் போல் ஒரு படைப்பின் அனுபவம் இதுவரையில் எனக்கு வாய்த்திடவில்லை.
புவியரசு அவர்களின் மொழிபெயப்பு அதற்கு முன் எனக்கிருந்த வாசிப்பின் ரசனைகளை மெல்ல மாற்றிப்போட்டு விட்டது. அது தான் முதன் முதலாக என் தூக்கங்களை தொலைக்க வைத்த படைப்பு. அங்கிருந்து என் வாசிப்பு திசைமர்றத் துவங்கியது. ஓஷோவை மிகவும் கவர்ந்தவர் கிப்ரான் என்னும் குறிப்பில் இருந்து ஓஷோவை தீவிரமாக தேடினேன். இந்த சமயங்களில் தான் மலையாள இலக்கியங்கள் எனக்கு அறிமுகமானது. வைக்கம் முகமது பஷீர் புத்தகங்களை என் தங்கையிடம் வாங்கி, அவள் மூலமாக மெதுவாக வாசிக்க ஆரம்பித்தேன். அது என் வாசிப்பின் தளங்களில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியது. அதன் பின் கல்லூரி வாழ்க்கையில் என் பேராசிரியராக வந்து வாய்த்தவர், பழைய வானம்பாடி அக்கினிபுத்திரன். முதல் நாள் வகுப்பில் தன்னை ரங்கராஜன் என்று அறிமுகம் செய்துகொண்டு தான் எழுதியதாக அவர் ஒரு கவிதையை குறிப்பிட்டார். "சிறகடிக்கவா இல்லை, சீட்டு எடுக்க" என்னும் யாவராலும் அறியப்பெறுகிற கவிதையை அவருடையது என்று சொன்னபோது, அவரை ரங்கராஜனாக மட்டுமே அறிந்திருந்த நான், கோபமாய் எழுந்து இது அக்கினிபுத்திரனின் கவிதை, ஆங்கில இலக்கிய வகுப்பு என்பதால் எங்களை முட்டாள்கள் என்று நினைத்து விடவேண்டாம் என்று கத்தினேன். எல்லோரும் புதிய மாணவர்கள் என்பதால் வகுப்பில் ஆழ்ந்த மௌனம். கண்ணாடியை கழற்றிவிட்டு தாடையை சொறிந்தபடி உன் பேரென்ன? என்றார் அதிருக்கட்டும் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..என்றேன். அங்கிருந்து தான் அவரின் அரவணைப்புக்குள் செல்ல ஆரம்பித்தேன். அவர் மூலமாக ஞாநி, புவியரசு, பிரபஞ்சன், சிற்பி, என்று நிறைய பேரின் அறிமுகம் கிடைத்தாலும், ஞாநி அவர்களைத் தவிர வேறு யாரிடமும் விருப்பமில்லாமல் இருந்தேன்.
உலக சினிமா, நாடகங்கள், பரிக்ஷா, கூத்துப்பட்டறை, குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி, தேன்மொழி, மாலதி மைத்ரி, ஈழத்து எழுத்தாளர்கள், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், வில்வரத்தினம், அ.முத்துலிங்கம், ஷோபாஷக்தி, போன்றோரின் எழுத்துக்களையும், எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.. அன்றிலிருந்து இன்று வரை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் வரையில் என் விருப்ப பட்டியல் மிக நீண்டது.
மலையாள இலக்கியங்களில் மிகவும் குறைவாகவே வாசித்திருக்கிறேன். பாலச்சந்திரன்,மதுசூதனன் நாயர், சங்கம்புழா,சச்சிதானந்தன், போன்றோரின் கவிதைகள், பஷீரின் எழுத்துக்கள் என்று குறைவாகவே வாசித்திருக்கிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களோடு ஒரு தொலைகாட்சி தொடரின் படப்பிடிப்பின் இடையில் வைரமுத்துவின் எழுத்துக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அப்படி ஒருவர் இருப்பதே தனக்கு தெரியாது என்று மறுத்துவிட்டார். தமிழில் தான் அறிந்த படைப்பாளிகளாக, சுந்தர ராமசாமி, பா.வா.செல்லத்துரை, சுகுமாரன், ஜெயமோகன் ஆகியோரை மட்டும் குறிப்பிட்டார். நீங்கள் நிறைய வாசிப்பதுண்டா என்று கேட்டேன். அவசியமில்லை, அதிகமாக வாசிக்க வேண்டிய அவசியமுண்டு என்று நீ நினைக்கிறாயா என்றார்? அந்த கேள்விக்கு அப்போது என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இதுவரையில் தமிழ்நாட்டிற்கு இலக்கிய நிகழ்ச்சிக்காக ஒருமுறை மட்டுமே வந்திருப்பதாகவும், அது திருவண்ணாமலையில், த.மு.எ.ச நடத்திய சிதம்பர நினைவுகள் வெளியீட்டு விழா என்றார்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாகிப் போனது. இலக்கியத்தின் பேரால் கொடுக்கப்படுகிற விருதுகளையும், சன்மானங்களையும், புறக்கணித்தவர்.தனக்கென்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர், தன்னைப் பற்றி மறைத்துவைக்க ஒன்றும் இல்லாத அளவுக்கு படைப்புகளில் தன்னை முழுமையாக பதிவு செய்தவர், மலையாளிகளின் அபிமானம் என்றும், கேரள நவீனக்கவிதையின் சொத்து என்றும் அறியப்படுபவர். மலையாள இலக்கியத்தில் புகழின் உச்சியில் இருப்பவர். தற்போது அவர் எழுதுவதில்லை. எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.. காரணம் தனக்கு எழுதுவதற்குரிய உந்துதல் இல்லை என்கிறார்.கொஞ்சம் கவிதைகள் எழுதினேன் என்பதற்காக மீண்டும் எழுதவேண்டும் என்கிற அவசியமில்லை. முப்பது வருடங்களில் வெறும் 79 கவிதைகள் மட்டுமே எழுதி இருக்கிறேன் மீண்டும் இச்சாசக்திக்கு உந்துதல் உண்டானால் எழுதலாம் எதையும் தீர்மானமாக சொல்ல முடியாது என்கிறார்.
எழுதி லாபி செய்ய விரும்புபவர்கள் எண்ணிக்கையில் விருப்பம்கொண்டவர்கள். அவர்கள் படைத்துக்கொண்டே இருப்பார்கள். அடுத்தவனின் துயரத்தை எழுத்தில் வடித்து காசு பார்ப்பார்கள். பொழுதுபோக்காக வாசிப்பை கருதுகிற மக்கள் இருக்கின்ற வரையில், "எந்த காலத்திலும் எழுத்து என்பது நிறைவடையாப் பணி" என்பதில் வருத்தம்கொள்ளும் படைப்பாளிகள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
எனக்கு இந்த இரண்டு விதமான எழுத்தாளர்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவே தோன்றுகிறார்கள். கண்டதும் யாப்பது கலை, உற்றது உரைப்பது கலை, கண்டதில் உற்றதில் கற்பனை சேர்ப்பதும் கலை, காசில் விளையும் கலை, காசுக்கு விழையும் கலை, யோசித்துப்பார்த்தால், வாசிப்பு மட்டுமே நானறிந்த கலை.
சமீப காலமாக நான் எந்தக் கவிதையும் எழுதவில்லை.. கவிதை எழுதும் மனோநிலையை நான் என்றோ கடந்து விட்டேன். எப்போதோ எழுதிய சில கவிதைகளை எங்கே தொலைப்பது என்று தெரியாமல், இங்கே பதிந்தேன். வாழ்க்கை என்னை நெரிக்கிற போது எனக்குள் ஏதேனும் தெறித்து விழுமாயின், அந்தப் பொறியிலிருந்து என் கவிதைக்கான மூன்றாவது கண் திறக்கலாம் ஒரு எரிமலையின் ஊற்றென..