தும்பி

தும்பி Thumbi is a humble initiative to bring children closer to nature; to being themselves. It's a bilingual Magazine meant for the young at heart.

Thumbi aspires to celebrate the infinite imaginative faculties abundant in children through ways more than one.

தன்னறம் இலக்கிய விருது - 2024 ~எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வர...
09/11/2024

தன்னறம் இலக்கிய விருது - 2024
~
எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார். சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார்.

தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அகதி வாழ்வு, நீங்காத அலைச்சல், அடையாளத் துயர், கதை, மொழி, அரசியல் ஆகிய உயிர்நிலைகளில் ஷோபா சக்தியின் செயல்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றன. அது நிலங்களைத் தாண்டி தன் அலைக்கழிப்பை இலக்கியத்தின் மூலம் முற்றளித்து, யுத்தத்தின் ரத்த சாட்சியாக தன்னை முன்னிறுத்தும் கலை நேர்மையின் பாங்கு உடையது. சமகால அரசியலும் இலக்கிய அழகியலிலும் காலத்தின் உண்மையுணர்வை அலைச்சலின் மொழியால் நிழல் படிமமாக புனைவில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதனால், சின்னஞ்சிறிய தீவுகளில் இருந்து உலகளாவிய அடையாளம் கொண்ட சுய வாழ்வின் மீதுள்ள நெருக்கடியை எந்த ஒப்பனைகளும் இன்றி புனைவுகளில் நம்மால் சந்திக்க முடிகிறது. சமூகத்தின் கூட்டுப் உணர்வான மௌனத்தின் அவல ஆழங்களை அனுபவப் பகிர்வாக முன்வைக்கும் ஷோபா சக்தி அவர்களின் புனைவுகளை நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறோம்.

கொரில்லா, பாக்ஸ் கதைகள், இச்சா, ம், ஸலாம் அலைக் ஆகிய புதினங்களையும் தமிழின் மிக முக்கியச் சிறுகதைகள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதித் தந்திருக்கிறார். பதிப்பாசிரியராக சில அவசியமான படைப்புகளை வெளியீட்டும் வருகிறார்.

தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அப்படைப்பாளிகளை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ வருடாவருடம் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), கவிஞர் பாலைநிலவன்(2023) ஆகிய ஆளுமைகளுக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. விருதுடன் இணைந்து விருது பெரும் ஆசிரியரின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் அச்சிடப்பட்டு ஆயிரம் இளம் வாசிப்பு மனங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் படைப்பு நேர்மையுடன் வாழ்வின் பரிணாமங்களை எழுதியும் பேசியும் வரும் எழுத்தாளர் ஷோபா சக்தி அவர்களுக்கு சென்றடைவதில் அகநிறைவு கொள்கிறோம்.
விருது நிகழ்வு குறித்த மேலதிகத் தகவல்களை விரைவில் தெரிவிக்கிறோம்.

நன்றி.

~

நன்றியுடன்,
தன்னறம் I குக்கூ

ஆசிரிய மனம் பொன்.சின்னத்தம்பி அவர்களுக்கு அஞ்சலி
03/10/2024

ஆசிரிய மனம் பொன்.சின்னத்தம்பி அவர்களுக்கு அஞ்சலி

ஒரு குழந்தையுடன் பேசும்போது எதைவேண்டுமானாலும் பேசிவிடலாம் என எண்ணக்கூடாது. ஏனோதானோவென்றும் பேசிவிடக் கூடாது. அதன் மனவார்...
14/05/2024

ஒரு குழந்தையுடன் பேசும்போது எதைவேண்டுமானாலும் பேசிவிடலாம் என எண்ணக்கூடாது. ஏனோதானோவென்றும் பேசிவிடக் கூடாது. அதன் மனவார்ப்பின் இயற்கைத்தன்மைக்கு நாம் ஊறு விளைவிக்கவும் கூடாது. இயல்பான வளர்ச்சிக்கும் கருணையுடன் கூடிய அணுகுமுறைக்கும் தடையாக விளங்கக்கூடிய எவ்விதமான முன்முடிவையும் அச்சத்தையும் குழந்தைகள் உள்ளங்களில் விதைத்துவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

~ யதி

“இந்த உலகின் எல்லா முட்டாள்தனமான அறிவுக்கும் நீங்கள் பரிச்சயப்பட்ட பிறகுதான், மீண்டும் நீங்கள் மறுபக்கத்தின் விளையாட்டுக...
14/05/2024

“இந்த உலகின் எல்லா முட்டாள்தனமான அறிவுக்கும் நீங்கள் பரிச்சயப்பட்ட பிறகுதான், மீண்டும் நீங்கள் மறுபக்கத்தின் விளையாட்டுக்கு வந்து மீண்டும் ஒரு குழந்தையாக ஆக முடியும். இரண்டு வருட காலம் பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகளைப் பற்றியான என் புரிதல் அதன்பிறகு மிகவும் மாறிவிட்டது.

அறிவெல்லாம் பெரியவர்களின் குத்தகை எனும் எண்ணம் எனக்கு இப்போது இல்லை. நான் குழந்தைகளுடன் இருக்கும்போது, அவர்களின் களங்கமற்றதும் சத்தியமுமான அறிவின் முன்னால் தலைவணங்கி, அவர்களின் தரிசனங்களைக் காண ஆசைப்படுவேன். பெரும்பாலும் அந்தப் புனிதப் பிறவிகள் என்னை அனுக்கிரகிப்பதுண்டு. கடவுளின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க விரும்புகின்றவர்களெல்லாம் குழந்தைகளைப் போல ஆகவேண்டும் எனும் யேசு கிறிஸ்துவின் உபதேசத்தை, உச்சமானதொரு உண்மையாகவே நான் கருதிக்கொண்டிருக்கிறேன்.”

~ நித்ய சைதன்ய யதி

11/05/2024

தும்பி சிறார் இதழ்கள் நிறுத்தப்படுகின்றமை பற்றிய கட்டுரை

11/05/2024

ஆகப் பெரிய கனவு Kirishanth -

தும்பி அச்சு இதழை நிறைவுசெய்கிறோம்...பத்து வருடங்களுக்கு முன்பு, பாரம்பரிய நெல் விதைகளைப் பெண்களிடம் ஒப்படைக்கும் நெல் த...
19/04/2024

தும்பி அச்சு இதழை நிறைவுசெய்கிறோம்...

பத்து வருடங்களுக்கு முன்பு, பாரம்பரிய நெல் விதைகளைப் பெண்களிடம் ஒப்படைக்கும் நெல் திருவிழா திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான கிராமப் பெண்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நல்லதிர்வுகள் நிறைந்த நாள் அது. அந்நாளில், நம் நிலத்தின் பலநூறுவகை பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுக்கத் தன் வாழ்வை ஒப்படைத்த 'நெல்தந்தை' வெங்கடாசலம் அய்யாவுக்கும், சிறார் இலக்கியத்தின் முன்னோடி ஆளுமை வாண்டுமாமா அவர்களுக்கும் முகம் விருதளித்து கெளரவிக்க எண்ணியிருந்தோம். உடல்நோய்மை காரணமாக வாண்டுமாமா அவர்களால் நிகழ்வுக்கு வர இயலவில்லை.

நெல்திருவிழா முடிந்து சிலநாட்களுக்குப் பிறகு, விருதையும் பரிசளிப்புப் பட்டையத்தையும் எடுத்துக்கொண்டு வாண்டுமாமாவைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றோம். தமிழ் சிறார் இலக்கியத்தின் மூத்தமனிதரிடம் நெடுநேரம் மனம்விட்டு உரையாடினோம். 'குழந்தைகளுக்கான முழுவண்ண மாத இதழ் உலகக் கதைகளோடு தமிழில் வரவேணும்' என அவ்வுரையாடலில் சொல்லிக்கொண்டே இருந்தார். தீராத நோய்மையிலும் அவர் தன்னுடைய இறுதிவிருப்பமாக அதைத் தன் மனதில் ஏந்தியிருந்தார். அவரைச் சந்தித்துத் திரும்பிய நாள்முதல் எங்களுக்குள் அந்த இறுதிவிருப்பம் ஒரு கனவுச்செயலாக விதைகொண்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடுமையான நோய்மையைச் சுமந்திருந்த காலகட்டத்தில்கூட சிறார்களின் அகவுலகு சார்ந்து அத்தனைக் கனவுகளையும் ஆசைகளையும் கொண்டிருந்த வாண்டுமாமாவின் அகம் எங்களை நிலைகுலையச் செய்தது. எப்பாடுபட்டாவது குழந்தைகளுலகில் துளிர்ப்பை நிகழ்த்தும் ஏதாவதொரு செயலசைவைத் துவங்கி இயன்றவரை கொண்டுசெல்ல வேண்டும் என தீராத தவிப்புற்றிருந்தோம்.

காலப்போக்கின் நீட்சியில் அவ்விருப்பம் கனவிலிருந்து செயலாக சாத்தியம் அடைந்தது. 2016 ம் ஆண்டு ஜூன் மாதம் தும்பியின் முதல் இதழ் அச்சாகி வெளிவந்தது. ஐசக் பெஷவிஸ் சிங்கர் எழுதிய ஒரு யூதக்கதை 'சலேத்தா' எனும் பெயரோடு தமிழில் மொழிபெயர்ப்பு அடைந்து, ஓவியர் பிரகாஷ் வரைந்த உயிர்ப்புமிகு கோட்டோவியங்களுடன் அக்கதை பிரசுரமானது. குழந்தைகளுக்கான முழுவண்ண ஓவியக்கதையிதழாக ஒவ்வொரு மாதமும் தும்பி தொடர்ந்து வெளிவந்தது.

2017ம் ஆண்டில் ஆனந்தவிகடன் சிறந்த சிறார் இலக்கியத்திற்கான விருது தும்பிக்கு வழங்கப்பட்டது. கடந்த எட்டு வருடங்களாகப் பல்வேறு நெருக்கடிச் சூழ்நிலைகள் சூழ்ந்தபோதும் நண்பர்கள் மற்றும் சந்தா பதிந்த தோழமைகளின் உதவிக்கரங்களால் தும்பி மாத இதழ் மீண்டிருக்கிறது. இதுவரையில் 81 தும்பி இதழ்கள் வெளியாகியுள்ளது. ஆறரை வருடங்களுக்கும் மேலாகத் தும்பி இதழ் அச்சில் சாத்தியப்பட்டது. உலகின் பல்வேறு நிலப்பரப்புகளையும் அதன் வாழ்வியலையும் மையமாகக் கொண்ட உலகக்கதைகள் தும்பியில் மொழிபெயர்ப்பு அடைந்து தமிழில் வெளியானது. ஜவ்வாதுமலை அடிவாரம் புளியானூர் கிராமம் துவங்கி இப்பூமியின் பல்வேறு பகுதிகளில் தும்பி இதழ் குழந்தைகளால் வாசிப்படைந்தது.

தும்பி துவங்கிய காலகட்டத்தில் வாண்டுமாமா அவர்கள் 'பூந்தளிர் புத்தகம் படிச்சு நாம வளந்தமாதிரி தும்பி புத்தகம் படிச்சும் வருங்கால குழந்தைகள் வளருவாங்க' என்று சொன்ன வார்த்தைகள் தும்பிக்கான வாழ்நாள் ஆசி. இன்று எத்தனையோ குழந்தைகளின் விருப்பநூலாகத் தும்பி இதழ் அமைந்திருப்பதும், அவர்களுக்குள் நிறைய கனவுகளை தும்பி விதைத்திருப்பதும் நாங்கள் இன்று கண்முன் காண்கிறோம். நிறைய மனிதர்கள் தும்பி இதழைத் தூக்கிச் சுமந்து பரப்பியிருக்கிறார்கள்.

கண்பார்வையற்ற குழந்தைகளும் தும்பியின் கதைகளை தடவித்தடவி வாசித்துணரும் பிரெய்லி வடிவத்திலும் தும்பியின் சில கதைகள் அச்சடைந்தது. பின்பக்க அட்டையில் வெளியான பாடல்கள் நிறைய பள்ளிக்கூடங்களில் கூட்டாகப் பாடப்படுகின்றன. நிறைய கதைகள் நாடகங்களாக நிகழ்த்தப்படுகின்றன. நிறைய குழந்தைகள் தங்கள் வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கு தும்பியில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.

தும்பி இதழின் கதைகளும், அக்கதைகள் குழந்தைகளுக்குள் உருவாக்கிய கனவுகளும் நம்பிக்கைகளும் இன்னும் நெடுங்காலம் அவர்களோடு நிச்சயம் நிலைத்திருக்கும். தும்பி இதழ் உருவாக்கிய அத்தனை நல்லதிர்வுகளும் வாண்டுமாமா, அரவிந்த் குப்தா போன்ற மூத்த ஆசிரியர்களின் நிறையிருப்போடு கலந்துகிடக்கும். தமிழில் சமகாலத்தில் குழந்தைகளோடும் ஆசிரியர்களோடும் பெற்றோர்களோடும் ஒரு கதையிதழ் வழியாக உரையாடும் பெருவாய்ப்பு தும்பியால் எங்களுக்கமைந்தது.

ஆனால், ஒவ்வொரு மாதமும் தும்பி இதழை அச்சில் வெளியிடுவதென்பது மிகப்பெரிய சவலாகவே இன்றளவும் அமைந்திருக்கிறது. தரமான காகிதத்தில் வண்ண அச்சு, விநியோகம், வடிவமைப்பு, அலுவலக நிர்வாகம், ஊழியர் ஊதியம், கட்டிட வாடகை என ஒவ்வொன்றாய் அதிகரித்துக்கூடி இன்று எங்களால் சுமக்கவியலாத பெரும் சுமையாக மாறிவிட்டிருக்கிறது. ஏதேதோ கரங்களின் துணையிருப்பாலும் ஆசிரியர்களின் வழிநடத்துதாலும் இதுவரையில் நாங்கள் கடந்துவந்தோம். ஆனால், இனிமேலும் இப்பாரத்தை எங்களால் தாங்கிக்கடக்க இயலாது என்கிற உண்மையை உணர்ந்து செய்வதறியாது நிற்கிறோம்.

ஆகவே, தும்பி அச்சு இதழை 81வது மாதப்பிரதியுடன் நிறுத்திக்கொள்வது என நண்பர்கள் பேசி முடிவு செய்திருக்கிறோம். எவருக்குமே விருப்பமில்லாத ஒரு முடிவை எங்கள் இயலாமையால் எட்டியிருக்கிறோம். எல்லாவகையிலும் முயன்றுபார்த்து தோல்வியுற்றபிறகே, தும்பி இதழை நிறுத்தும் இந்த முடிவை பொதுவெளியில் அறிவிக்கிறோம். தும்பி இதழை இடைக்காலத்தில் நிறுத்துவதற்காக வாசகத் தோழமைகளிடத்தும் குழந்தைகளிடத்தும் பெற்றோர்களிடத்தும் கண்கலங்கி மன்னிப்பு கோருகிறோம்.

சந்தா பதிந்துள்ள தோழமைகளுக்கான நிலுவைத்தொகையை மூன்றுமாத காலத்திற்குள் திருப்பியளிக்கிறோம். நண்பர்கள் விருப்பமிருப்பின் இதுவரை வெளிவந்த தும்பி இதழ்களாகவோ அல்லது தன்னறம் நூல்வெளியின் புத்தகங்களாகவோ பெற்று தங்கள் தொகையை கழித்துக்கொள்ளலாம். புத்தகங்களோ இதழ்களோ பெறவிரும்பாத நண்பர்களுக்கு உரிய கலத்திற்குள் நிலுவைத்தொகையை திருப்பி அளிக்கிறோம். ஒவ்வொரு சந்தாதாரரையும் தனித்தனியாக தொடர்புகொண்டு இந்த பதிலீட்டை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே, உரியவர்களின் தொலைபேசி எண்ணிற்கு கூடியவரைவில் தும்பி இதழிலிருந்து அழைப்புவரும். நீங்கள் தெரிவிக்கும் முடிவை நாங்கள் செயல்படுத்துகிறோம்.

சிறுகச்சிறுக உதவிகள் பெற்று இனியும் தும்பி இதழைத் தொடர்வது என்பது இயலாததாக உள்ளது. ஆகவே, இந்த இக்கட்டானச் சூழ்நிலையில் எவ்வகையிலாவது உதவ விரும்பும் நண்பர்கள் தன்னறம் பதிப்பகத்தின் புத்தகங்களையோ, தும்பி இதழின் முந்தைய இதழ் தொகுப்பையே நீங்கள் வாங்கினால் பெரும் உதவியாக இருக்கும். யாருடைய மனமும் நோகாமல் இந்த முடிவை செயல்படுத்த முடியமா எனத் தெரியவில்லை. ஆனால், இயன்றவரை நம்பிக்கை ஆதரவளித்துத் துணைநின்ற ஒவ்வொரு மனிதர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற முயல்கிறோம்.

'எங்கோ இருக்கும் ஒரு குழந்தையின் பிரார்த்தனைதான் தும்பி இதழை கொண்டுவருகிறது' என்பதுதான் என்றும் நாங்கள் நம்பும் நிஜம். அந்தப் பிரார்த்தனைக் குரலுக்கு என்ன பதிலளிக்கப்போகிறோம் என்பதுதான் தெரியவில்லை. மனதில் எழும் நடுக்கங்களைப் போராடிக் கடந்தபிறகே இக்கடிதத்தை எழுதுகிற சிறுநிதானத்தை அடைந்தோம். வேறு என்ன செயல்செய்து இந்தப் பதட்டத்தைப் போக்குவதென எண்ணித் தவிக்கிறோம்.

குழந்தைகளுலகு சார்ந்தும் கல்விசார்ந்தும் தொடர்ந்து தும்பி இயங்கும். அதற்கான திட்டமிடுதல்கள் துவங்கியுள்ளன. கைவசமுள்ள தும்பி இதழ்கள் அனைத்தையும் மின்னிதழ்களாக மாற்றி பொதுவெளிக்கு அளிக்கும் பணிகளையும் தொடங்கியுள்ளோம். ஒரு சிறுகனவாகத் துவங்கியவொன்று இத்தனை மனிதர்களை எங்களுக்குப் பெற்றுத்தந்திருக்கிறது. தும்பி இதழ் இவ்வழியில் நிறைவடைவது ஒரு கனவின் சிறுசுழல்வட்டம் தன்னை நிறைவுசெய்து இன்னொன்றாகப் பரிணமிக்கும் எனக் குழந்தையைப் போல நம்புகிறோம்.

இந்தியாவின் கட்டிடக்கலை பிதாமகன்களில் ஒருவராகிய பேராசிரியர் நீல்கந்த் சாயா அவர்கள், கடும் நோய்மையுற்று அவசரச்சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியிருந்த சூழ்நிலையில், தன்னுடைய குழந்தைக்குத் தும்பி இதழை வாசித்துக் காட்டும் காட்சியை நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். அதேபோல் மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் தும்பி இதழின் கதைகளாக வாசித்துவிட்டு ஒவ்வொரு காட்சியாக விவரிக்கிற அனுபவங்களையும் பெற்றடைந்தோம். இவ்வாறு சிறியவர், முதியவர், பெரியவர் என எல்லா வயதினருக்கும் மகிழ்வூட்டி ஏதேதோ நிலப்பரப்புகளில் தும்பி இதழ் நல்லதிர்வு ஈட்டியிருக்கிறது.

எதைச்சொல்லி இந்த அறிவிப்பை முடிப்பதென தெரியவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக தும்பி இதழுக்கு உயிரளித்த உங்கள் எல்லோருக்கும் சிரம்பணிந்த நன்றிகள். தமிழில் இவ்விதழை இத்தனைக்காலம் நிலைநிறுத்திய எல்லா நம்பிக்கைகளையும் இறுகப்பற்றி வணங்குகிறோம். இறையாற்றல் இதை நேர்மறையாகக் கடந்துசெல்லும் அகத்துணிவளிக்கும் என நம்புகிறோம். எண்ணிலா நண்பர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளதை அறிவோம். எல்லா கடன்களையும் அடைக்கும் சூழ்நிலையை காலமளிக்கும். தும்பி அச்சு இதழ் தனது பயணத்தை இதனுடன் நிறைவுசெய்கிறது. நண்பர்களின் துணையிருப்பால் இச்சூழலையும் கடந்து செயலாற்ற உறுதியேற்கிறோம்.

தமிழ் பதிப்புச்சூழலில் தங்களை முற்றளித்து வாழ்ந்து கரைந்த முன்னோடி மனிதர்களான சக்தி வை.கோவிந்தம், அக்கு பரந்தாமன் ஆகிய மூத்த ஆசிரியர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் இக்கணம் நெஞ்சார தொழுகிறோம். கைவிடும் முயற்சிகள் அனைத்தும் இன்னொரு வடிவில் எங்காவது முளைத்தெழும்; ஏதாவதொரு உள்ளம் அதை நிறுத்தாது இழுத்துச்செல்லும் என நம்புகிறோம்.

அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை!

இதுவரையிலான தும்பி இதழ்கள் பெற:
https://thumbigal.com/store/

தன்னறம் பதிப்பக நூல்கள் பெற:
https://thannaram.in/buy/

தொடர்புக்கு: 9843870059
[email protected]

மோகன் தினமும் ஊழியரகம் செல்கிறார். தினமும் பாட்டியுடன் சில மணிநேரம் உடன் இருக்கிறார். நேற்று தும்பி 81 வது இதழை பாட்டி ப...
12/04/2024

மோகன் தினமும் ஊழியரகம் செல்கிறார். தினமும் பாட்டியுடன் சில மணிநேரம் உடன் இருக்கிறார். நேற்று தும்பி 81 வது இதழை பாட்டி படித்துவிட்டு அதிலுள்ள கதையை கண்கள் விரிய ஆசையுடன் பேசியதை சொன்னார்.

நூறு வயதை அடையப் போகும் அந்த தூய மனதின் ஆழத்தில் தும்பியின் கதைகள் ஒரு காட்சிப் படிமமாக போய் சேர்வது நூற்றாண்டுக்கான ஆசிர்வாதமாக உணர்கிறோம்.

தும்பி இதழின் 79வது மாதப் பிரதியில் தோழமை மோனிகா ரவீந்திரன் அவர்கள் காட்சிப்பதிந்த ஒளிப்படங்கள் பிரசுரமாகியுள்ளன. சுவர்ச...
11/04/2024

தும்பி இதழின் 79வது மாதப் பிரதியில் தோழமை மோனிகா ரவீந்திரன் அவர்கள் காட்சிப்பதிந்த ஒளிப்படங்கள் பிரசுரமாகியுள்ளன. சுவர்சாய்ந்து சிரிக்கும் சின்னஞ்சிறுமி, தந்தையின் தோளமர்ந்து மகிழும் மொட்டைச் சிறுவன், அகன்ற மஞ்சள் இலையைக் கையிலேந்தி நிற்கும் விபூதிப்பாட்டி, சிறிய காகிதக்கொக்கை தாங்கியிருக்கும் முதிய உள்ளங்கை, ஜன்னல் வழியாக சாலையை எட்டிப்பார்த்து வியக்கும் பொட்டுச்சிறுமி, பதாகையைப் பிடித்து பல்தெரியச் சிரிக்கும் குட்டிச்சிறுவன், தாத்தாவுடன் நின்றிருக்கும் குட்டிக்குழந்தை, கோவில் தரையில் தாத்தாவோடு அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறுமிகள், கண்கள் விரிந்து முகம் மலர்ந்து நிற்கும் கிராமத்து மூதாட்டி என ஒவ்வொரு ஒளிப்படமும் ஒருவித மலர்தலை மனதுள் நிகழ்த்துகிறது.

மேலும், இவ்விதழின் அட்டைப்படமாக முகத்தில் வெயில்வாங்கி நிற்கும் பள்ளிச்சிறுமியின் படம் அச்சாகியுள்ளது. உயிர்ப்புமிகு ஒளிப்படங்களை தும்பி இதழுக்காக அனுப்பித்தந்த தோழமை மோனிகாவின் அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். எளிய மனிதர்களின் வாழ்வில் உணர்வூறும் தருணங்களை ஒளிப்படங்களாகக் காட்சிப்பதிந்து அகநிறைவு அடைகிற உங்கள் படைப்புமனம் இன்னும் நிறைய இலக்குகளை வசப்படுத்தும். செயலார்ந்த தவிப்புடன் நீங்கள் நிகழ்த்தத் துடிக்கும் அத்தனைக் கனவுகளும் எண்ணியவாறு நிறைவேறத் துவங்கும் காலமிது.

தும்பி இதழ்கள் பெற: https://thumbigal.com/store/

சமுத்திரக் கரையில்ஒதுங்கும் கிளிஞ்சல்கள்குழந்தைக்கு வைரங்கள்காட்சிதானே நிஜ வைரம்காண்பவன் குழந்தையானால்கிளிஞ்சல்கள் போதும...
15/03/2024

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.

~ நா.விச்வநாதன்

தும்பி சிறார் இதழின் 80வது மாதப்பிரதி அச்சாகி கைவந்து சேர்ந்திருக்கிறது. சந்தா பதிந்து காத்திருக்கும் தோழமைகள் அனைவரையும் இவ்வார இறுதிக்குள் இதழ் வந்தடையும். ஒருவேளை, இதழ் கிடைக்கப்பெறாத நண்பர்கள் இருப்பின் தும்பி எண்ணிற்கோ மின்னஞ்சலுக்கோ உங்கள் தகவல்களை அனுப்ப வேண்டுகிறோம். பிரதிகள் ஏதேனும் கைவந்து சேராமல் விடுபட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். இயன்றவரை எல்லா முகவரிக்கும் தும்பி இதழ் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்கிறோம்.

இருமொழிக் கதையிதழாகத் தமிழ்ச்சூழலில் தும்பி இதழைக் கொண்டுசெலுத்தும் எல்லா உள்ளங்களுக்கும் பணிந்த நன்றிகள். சிறுகச்சிறுக ஊர்ந்து இலக்கடையும் எறும்புகள் போலவோ, நத்தைகள் போலவோ, ஆமைகள் போலவோ... சிறாருலகின் பெருங்கனவுகளைச் சுமந்து தும்பி இதழ் ஒவ்வொருமுறையும் அச்சில் உருப்பெறுகிறது. எண்ணற்ற உளவேண்டலின் நிறைவேற்றத்தை கண்ணுற்று நிற்கிறோம் இக்கணம்.

இதழ் பெற: https://thumbigal.com/store/

நன்றியுடன்,
தும்பி சிறார் இதழ்
9843870059, [email protected]

Address

Madura

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+919843870059

Alerts

Be the first to know and let us send you an email when தும்பி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தும்பி:

Videos

Share

Category