10/01/2025
யேசுதாஸ் எனும் மகா கலைஞன்! பிறந்த நாள்.
* ஒரு மலையாள நடிகர் தன் பேட்டியில், முதன் முதலில் தன்னுடைய வாய்ஸ் டெஸ்ட்க்காக திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷன் சென்ற பொது அவர்களால் நிராகரிக்கப்பட்டவர். பின்னாளில் அவர்களே இவரை இவர் இல்லத்தில் சென்று காணும் நிலை ஏற்பட்டது என்று சொல்லியிருந்தார். அவர் சொன்ன இவர் கே,ஜே.யேசுதாஸ்.
* கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பிறந்தார்.
*முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். அந்தப்பாடலே வரவேற்புப் பெற்றதென்றாலும், எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் படத்தில் இவர் பாடிய விழியே கதை எழுது பாடல் இவருக்குப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்ததென்று சொல்கிறார்கள்.
* தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம், விழியே கதை எழுது, செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே உட்பட ஏராளமான இனியபாடல்களைப் பாடி தமிழ்மக்களின் வாழ்வில் பிரிக்கமுடியாதவராகவே மாறிப்போனார்.
* எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி, மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.
* திரை இசை, கர்நாடக இசை, பன்மொழிப் பாடல்கள் மட்டுமின்றி தெய்வீகப் பாடல்களாலும் நம்மை எல்லாம்வசீகரித்து ஆட்கொண்ட இவர், 17 மொழிகளில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி மாபெரும் இசை வேள்வியையே நடத்திக் காட்டியிருக்கிறார்.
* சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளை 43 முறையும்வென்றவர். போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் விரிகிறது.
* 1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
*புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது. 1965ல் இந்தியா - சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார்.
* தமது திரை வாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.
✿ சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.
* 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார். திரையிசையுடன்,கர்நாடக இசைக்கச்சேரிகள்பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.
* மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.
* இவ்வளவு சாதனைகளைப் படைத்திருந்தாலும் 1977 இல் வெளியான அந்தமான் காதலி படத்தில், அந்தமானைப் பாருங்கள் அழகு..., நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்... ஆகிய இரு பாடல்களையுமே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருந்தனர்.
* இவற்றில் இரண்டாவது பாடலான நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்.. திருக்கோயிலே ஓடிவா.. என்ற வரிகளைப் பாடும்போது, திருக்கோயிலை 'தெருக்கோயிலே' என உச்சரித்திருப்பார் யேசுதாஸ். இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது.
* பத்திரிகைகள் மட்டுமின்றி சில கவிஞர்களும் கூட இதனைக் கண்டித்தனர். ஆனால் யேசுதாஸ் இதற்கு எந்த பதிலும் அளித்ததில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்ட இந்த உச்சரிப்பை, தனது திரையுலகப் பயணத்தின் 50 வது ஆண்டில் திருத்திக் கொண்டார் யேசுதாஸ்.
* சென்னையில் கடந்த 2015 ஜனவரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடினார் யேசுதாஸ். அப்போது திருக்கோயிலே.. வரி வந்தபோது சட்டென்று நிறுத்திய அவர், "ரொம்பப் பேர், ரொம்ப வருஷமா இந்தப் பாட்டில் என்னுடைய உச்சரிப்பைக் குறை கூறி வந்தனர். இப்போதும் சிலர் சொல்கிறார்கள்.
* அந்த உச்சரிப்பு தவறுதான் என ஒப்புக் கொள்கிறேன். காரணம் அப்போது நான் தமிழுக்குப் புதிது. அப்போதுதான் கற்க ஆரம்பித்தேன். அந்தப் பாடல் பாடும்போது இசையமைப்பாளர் எம்எஸ்வியோ, பாடலாசிரியர் கண்ணதாசனோ அங்கில்லை. வேறு வேலையில் இருந்தார்கள்.
*உதவியாளர்கள் எல்லாம் சாப்பிடப் போயிருந்தார்கள். அதனால் என் உச்சரிப்பை யாரும் கவனிக்கவில்லை. அப்படியே ரெக்கார்ட் ஆகி வந்துவிட்டது. இப்போது, இந்த மேடையில் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்,' என்று கூறி, திருக்கோயிலே ஓடி வா.. என சரியான உச்சரிப்புடன் பாடினார்.
* செயற்கரிய பல சாதனைகளுக்குப் பிறகும், தான் செய்தது பிழை என்பதை உணர்ந்து பொதுமேடையில் அதை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தது, அவர் செய்த சாதனைகளிலேயே பெரிய சாதனை என்று பலராலும் பாராட்டுப் பெற்றார்.