10/01/2018
ஈரோடு, சிவகிரியில் சண்டைச்சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்.
பொங்கல் என்றால் நம்நினைவுக்கு வருவது தமிழர்களின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. ஆனால், அதிக பேருக்கு நினைவுக்கு வராத ஒரு விளையாட்டு சேவல்கட்டு. குறிப்பாக கோவை, திருப்பூர், சேலம், கரூர், திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு காலத்தில் சேவல்சண்டை விளையாட்டு பிரபலம். தற்போது தமிழ்நாட்டில் சேவல்சண்டைக்கு அனுமதி இல்லை. பண்டிகை நாள்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று, விதிமுறைகளுடன் சேவல்சண்டை நடத்தப்படுகிறது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் அதற்கு அனுமதி உண்டு. பாரம்பர்யம் மிக்க தமிழ்நாட்டு சேவல்களுக்கு கர்நாடகத்தில் வரவேற்பு அதிகம் உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் சேவல்பண்ணை வைத்து சண்டைக்கோழிகளை வளர்த்து கர்நாடக வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவருகிறார்கள். அப்படியான சேவல்பண்ணையாளர்களில் ஒருவர்தான் சிவகிரி சீனு. ‘ஈரோடு, சிவகிரியில் சண்டைச்சேவல் வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். ‘ஓர் அதிகாலை நேரம் நண்பர் உதவியுடன் களத்துமேட்டில் இரண்டு சேவல்களை மோதவிட்டு, சண்டைப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தவருடன் பேசினோம்.
''ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம்போல சேவல்கட்டும் தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டில் ஒன்று. அதுவும் குறிப்பாக ஆடி, தை மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சேவல்சண்டை நடப்பது வழக்கம். என்னதான் காவல்துறை கட்டுப்பாடு விதித்தாலும் கண்டும்காணாமலும் தமிழ்நாட்டில் சேவல் சண்டை நடந்துகொண்டுதான் உள்ளது. பண்டிகை நாள்களில் நீதிமன்ற அனுமதியுடன் சிலவிதிமுறைகளைக்கொண்டு சேவல் சண்டை நடக்கும். எனது பண்ணையில் 200 சேவல்கள் உள்ளன. ரூ.5000 முதல் 50,000 ரூபாய் வரை சேவல்கள் விலைபோகும். கர்நாடக மாநிலத்தில் சேவல்கட்டுக்குத் தடையில்லை. அதனால், எனது பண்ணையில் உள்ள சேவல்களைக் கர்நாடக மாநிலத்தில் உள்ள சேவல்சண்டை பிரியர்கள் வந்து வாங்கிப்போகிறார்கள்.
ஆடுகளத்தில் அஞ்சி ஓடமால் எதிர்த்து நின்று வெற்றி பெற சேவல்களுக்குப் பயிற்சி அவசியம். குஞ்சுப் பருவத்திலிருந்தே தினந்தோறும் சேவல்களுக்குப் பயிற்சிகொடுத்து வருகிறோம். சேவல்களுக்கு மட்டுமல்ல சேவல்களை ஆடுகளத்தில் மோதவிடும் ஜாக்கிகளுக்கும் பயிற்சி முக்கியம். கத்தி கட்டிய சேவல்களை லாவகமாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். பட்சி சாஸ்திரம் என்கிற ஆரூடம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த சாஸ்திரம் தெரிந்தவர்களை அழைத்துவந்துதான் கட்டுச்சேவல்களைப் பலரும் தேர்வு செய்வார்கள். நிறம், உடல்கட்டு, உயரம் என்று அங்கலட்சணம் பல உண்டு. நிறைய சேவல்களை அடித்து வெற்றிபெறும் சேவல்கள் ‘ஹீரோ' அந்தஸ்தில் பார்க்கப்படும். நான் நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து அந்த வெற்றிச் சேவலை வாங்கிப்போவார்கள். 50,000 ரூபாய்க்கு மேல் விலைபோகும் ஹீரோ சேவல்கள் இங்கு நிறைய உண்டு.
இதில் இனக்கலப்பு சேவல்கள் பல இருந்தாலும், சுத்தமான நாட்டுரக சேவல்களைத்தான் சண்டையில்விட விரும்புவார்கள். காகம், மயில், வல்லூறு, கீரி, நூலான், செம்பை, கறுப்பு, பூதை, சுள்ளி, ஆந்தை, கோழி என்று நிறங்களை வைத்து பிரிக்கப்பட்ட பல நாட்டுரகங்கள் சண்டைக்கோழியில் உண்டு. ஆடுகளத்தில் அசராமல் நின்று எதிர்சேவலிடம் மோதி, தொடர்வெற்றிபெற்ற சேவல்களின் காலில் தங்க வளையம் போட்டு கௌரவம் செய்யும் வழக்கம் இங்கு இருந்துள்ளது. பொள்ளாச்சி புரவிபாளையம் ஜமீன்தார் கோப்பண்ண மன்றாடியார் சேவல் சண்டையில் ஆர்வம் கொண்டவர். 1,000 சேவல்கள் கொண்ட சேவல்பண்ணை ஒன்றை தனது ஜமீன் அரண்மனையில் வைத்திருந்தார். அரண்மனை வளாகத்தில் திருவிழாபோல் சேவல்சண்டை நடத்தி வந்துள்ளார். இவ்வளவு பாரம்பர்யமிக்க சேவல்சண்டை தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்று. எனவே, விதிமுறைகளுக்கு உள்பட்டு இங்கு சேவல்சண்டைக்கு நிரந்தர அனுமதி வழங்கினால், ஜல்லிக்கட்டு மாதிரி சேவல்கட்டும் பேசப்படும்'' என்றார் சீனு. Via vigatan tamilmagazine