10/08/2023
பொது சிவில் சட்டம் - ஒரு சூழ்ச்சி
நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2023
கேரள சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் உரை
கேரள சட்டப் பேரவையில் ஆகஸ்ட் 8 செவ்வாயன்று பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரை:
சங்பரிவாரின் விவாதத்தின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் அரசமைப்பின் வழி காட்டும் கொள்கைகளில் கூறப்பட்டுள்ள படி ஒருங்கிணைந்த பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா என்பது அல்ல. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் அல்ல, மனுஸ் மிருதி அடிப்படையிலான ஒரு சட்டமே சங்பரிவார்க ளின் மனதில் உள்ள பொது சிவில் சட்டம். அதை சங் பரிவார் நீண்ட காலமாக தெளிவுபடுத்தியும் உள்ளது.
அரசமைப்புச் சாசனத்தை ஏற்காதவர்கள்
அரசமைப்புச் சாசன விவாதத்தின் போதே தனது நாளிதழின் முதற்பக்கத்தில் சங்பரிவார் தனது அரசியல் நிலைப்பாடை தெளிவுபடுத்தியது. அதில் உள்ள ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். அரச மைப்பை உருவாக்குவதற்கான மாதிரிகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசிய மில்லை; இந்த விசயத்தில் நம்முடைய சொந்த வழிகாட்டி நம் முன் உள்ளது, அதுதான் மனுஸ்மிருதி. இதுவே அதன் உள்ளடக்கமாக இருந்தது. பின்னர் 1950 இல் அரசமைப்பு உருவாக்கப்பட்ட போது, அந்த அரசமைப்பு சாசனத்தை தாங்கள் ஏற்கவில்லை என்று கூற அவர்கள் இருமுறை யோசிக்க வேண்டிய தேவை எழவில்லை. அரசமைப்பு சட்டத்தை எழுத்துப்பூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் நிராகரிப்பவர்கள் அரசமைப்பில் எதையாவது செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் யாரும் இருக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம் என்பது மனுஸ் மிருதியே. இந்திய சமூகக் கட்டமைப்பை அதன் விதிகளின்படி மறுகட்டமைக்க அவர்கள் விரும்பு கிறார்கள். இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையே சங் பரிவாரம் ஏற்கவில்லை. பின் எப்படி அதன் பரிந்து ரைக்கப்பட்ட கொள்கைகளில் கூறப்பட்ட பொது சிவில் சட்டத்தை ஏற்பார்கள்?. சங்பரிவார் எப்போதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையையே செய்து வருகிறது. இது அவர்களின் அரசமைப்புச் சட்ட விரோத நகர்வுகள் மற்றும் தாக்குதல்களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று தான். அதைத் தவிர, அரசமைப்பின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் கூறப்பட்டுள்ளபடி, அரசமைப்பை அமல்படுத்தவோ, வலுப்படுத்தவோ எதுவும் இல்லை. ஷரியத்தோ, முஸ்லீம் தனிநபர் சட்டமோ அல்லது அரச மைப்போ எதுவும் அவர்களின் விவாதத்தின் மையமாக இல்லை. மாறாக, ஒரு இந்து நால்வர்ண சாதிய அடுக்கிலான சட்டத்தின் மூலம் இதர மதத்தினரை ஒடுக்கி வைப்பது என்பதே நோக்கமாக உள்ளது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா லட்சியம்
2025 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா. அதற்குள் செய்ய வேண்டிய மூன்று விசயங்களை அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்துக்க ளும் முஸ்லீம்களும் ஒன்றாக வாழும் இந்திய மதச் சார்பின்மையின் அனைத்து அடையாளங்களையும் அழிப்பதாகும் அது. அந்த மதச்சார்பற்ற அடையா ளங்களில் ஒன்று பாபர் மசூதி. அதை உடைத்து நொறுக்கினர். அடுத்தது, முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் காஷ்மீர், பிரிவினைக்குப் பிறகும் இந்தியாவுடனேயே இருந்தது அந்த பகுதி. அந்த காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது இரண்டாவது விசயம். அதன் மூலம் காஷ்மீர் தனித்தனி துண்டுகளாக பிரிக்கப்பட்டது. மூன்றாவது விசயம் அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதி யைக் கொண்டு வருவது. எனவே, இது அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். இந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்ற சங்பரிவாரின் நித்திய கனவை அவர்கள் இப்போது நனவாக்கத் துடிக்கிறார்கள். இன்றைய இந்திய சமூகம் இங்கு நிலவிய பல்வேறு கலாச்சாரங்களால் ஆனது. அது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு கட்டங்களில் இங்கு வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்து தேசிய இயக்கத்தின் போது அந்த வரலாற்று, சமூக வியல் எதார்த்தத்தை கணக்கில் கொண்டு உருவாக்கப் பட்டது. இந்த உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முன்னேற்றம் என்பதே இந்தியாவின் மிகப் பெரிய பண்பு. அந்தக் கண்ணோட்டத்தை வலுப்படுத் தும் விதத்தில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மக்களை உள்ளடக்கி, அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்தோ பாது காப்போ தேவையென்றால் அதை உறுதிப்படுத்தும் அணுகுமுறையைக் கையாண்டது.
சிறப்புப் பிரிவுகள் நீக்கம்
இத்தகைய பொதுவான பார்வையின் அடிப்படை யில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில் சில குறிப்பிட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பிரிவு 370, பிரிவு 371 மற்றும் பிரிவுகள் 371 ஏ முதல் ஐ வரை உள்ளவை முக்கியமானவை. அவற்றில், தற்போதைய ஒன்றிய அரசு ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தக்கூடிய 370 ஆவது பிரிவை ரத்து செய்த செயல்முறையை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம். இப்போது பொது சிவில் சட்டத்தை முன்வைப்பவர்கள்தான் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை நியாயப்படுத்த முன்வந்துள்ளனர். இந்தி யாவை ஒருங்கிணைக்க உதவும் என அதை வரவேற்ற சங் பரிவார் அல்லாத அரசியல் சக்திகளும் கூட, ஒன்றிய அரசு தங்கள் மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியபோது அதன் அபாயத்தை உணர்ந்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின்படி, பழங்குடியின சமூகங்க ளுக்காக தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் தற்போது 10 தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த அரசமைப்பு சாசன சுயாட்சி மாவட்ட சபைகளை வேண்டாம் என்று சொல்வார்களா? அது நடந்தால், பழங்குடியினருக்கு அவர்களின் நிலம் மற்றும் அதன் வளங்கள் தேவை, ஆனால் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற பிற்போக்குப் பார்வையை மாற்றுமா? அதன் மூலம் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைந்து வேண்டுதல் செய்து வழிபாடு நடத்த வாய்ப்பு கிடைக்குமா?.
பாகுபாடுகள் முடிவுக்கு வருமா?
பழங்குடியினர், தலித்கள், சிறுபான்மையினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதற்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் தீர்வு கிடைக்குமா? வேலை, உடை, வாழ்க்கைத் துணை என்ற பெயரில் தலித்துகள் தாக்கப்பட மாட்டார்களா? அதை வைத்து காப் பஞ்சாயத்துகள் ஒழிக்கப்படுமா? வாரிசுரிமை, பாதுகாவலர் மற்றும் தத்தெடுப்பு தொடர்பான சட்டங்களில் இந்துப் பெண்கள் எதிர்கொள்ளும் பாகு பாடுகள் முடிவுக்கு வருமா? சச்சார் குழுவால் முன்மொழியப்பட்ட சம வாய்ப்புக் குழு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இட ஒதுக்கீடு உள்ளிட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்து ரைகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இவை சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே சமத்துவத்தை உறுதிப்படுத்த உதவியாக இருந்த ஆலோசனை களும் பரிந்துரைகளும் ஆகும். ஆனால் அவை எதற்கும் செல்லாமல் ஒரே சட்டம் என்ற முழக்கத்து டன் வெளியில் வந்துள்ளனர். சிவில் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று சொன்ன வர்கள்தான், முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து மட்டுமே குற்றமாக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள்தான், குடியுரிமை அனைவருக்கும் சமமாக வழங்க முடியாது என்று சொல்பவர்கள். குஜராத் மற்றும் முசாபர்நகரில் நடந்தது, அனைவ ருக்கும் சமமாக பொருந்தும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்படுவதால், மீண்டும் நடக்காதா? கந்த மால், மணிப்பூர் மீண்டும் வராமல் இருக்குமா? இந்திய சமூகத்தைப் பாதிக்கும் இத்தகைய அடிப்படைப் பிரச்ச னைகளை பேசவோ, தீர்வு காணவோ ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில், சங் பரிவாரங்களும் அதிகா ரப் பதவிகளில் இருப்பவர்களும் இப்போது வகுப்புவா தப் பிளவுகளை உருவாக்கி, பொது சிவில் சட்டம் என்று கூறி அரசியல் ஆதாயங்களைப் பெற முயற்சிக்கின் றனர்.
2014 தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகள்
நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலை யில், மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்சனை களில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின் றன. 2014 மக்களவைத் தேர்தலின் போது, ஊழல், கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெண்கள் பாது காப்பு போன்றவற்றை பா.ஜ.க. கூறியது. ஆனால், 2019 தேர்தலின் போது கூட, இதற்கு தீர்வுகாண என்ன செய்தோம் என்று பாஜக சொல்லத் துணியவில்லை. தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து பேசினர். 2024-லும் இதைப் பற்றி பேசமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் தீவிர வாதத் தாக்குதல்கள் இன்னும் நடக்கின்றன. இந்திய வீரர்கள் இன்னும் கொல்லப்படுகிறார்கள். புல்வாமா வில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தற்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை யெல்லாம் முறியடிக்கும் இவர்களின் அடுத்த வேலைத் திட்டம், பொது சிவில் சட்டம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட விவாதங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது மக்களின் நிஜ வாழ்க்கை பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதற்கான உத்தி. வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம் அல்லது தலித் சமூகங்கள் மீதான தொடர்ச்சியான தாக்கு தல்கள் பற்றி பாஜக மற்றும் அவர்களின் அரசாங்கங் கள் ஒருபோதும் எதுவும் கூறாது. அவர்களைப் பொறுத்தவரை, பொது சிவில் சட்டம் என்பது நாடு எதிர்கொள்ளும் இத்தகைய அழுத்தமான பிரச்ச னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒரு தந்திரமாகவும் உள்ளது. இந்தியா பல மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் கலவையாகும். அவர்கள் அனை வருக்கும் இடமளிக்கும் வகையில் கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இந்தியா நமது அரசமைப்பில் கற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த மதிப்பீடுகளுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கையாகும். சங்பரிவாரமோ அவை அனைத் துக்கும் எதிரான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, இத்தகைய நகர்வுகள் அனைத்திற்கும் எதி ராக மிகவும் எச்சரிக்கையான பாதுகாப்பு இந்த கட்டத் தில் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த கேரளாவும் இத்த கைய விழிப்புணர்வைக் கடைப்பிடிக்கிறது என்ப தற்குச் சான்றாக கேரள சட்டப்பேரவை ஒருமனதாக இந்தத் தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதைத்தான் இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக மதச்சார் பின்மைவாதிகள் விரும்புகிறார்கள்.
தமிழில்: சி.முருகேசன்