07/03/2024
தந்தை பெரியார் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்ட உடன் நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விடும். பகுத்தறிவுக் கருத்துகள் நம் மனதில் பதிந்த உடன் என்ன மாற்றம் எற்படும் என்பதற்கு சான்றாக என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளில் சில..
அப்போது பொன்னேரி உலகநாத நாராயணசாமி கல்லூரியில் பி. எஸ்சி. தாவரவியல் தமிழ் வழியில் படித்துக் கொண்டு இருந்தேன். தாவர இயலின் ஒரு பாடப் பிரிவான எவல்யூஷன் தியரி (உயிர்படி மலர்ச்சி அல்லது பரிணாம வளர்ச்சி) புரிந்து படிப்பவர்களிடம் கடவுள் நம்பிக்கை குறித்த ஐயங்களை எழுப்பி விடும்.
கூடப் படித்த பக்கத்து கிராமங்களில் இருந்து வரும் நண்பர்கள் அப்போது நிறைய பேய்க் கதைகளை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஒரு நண்பன் பொன்னேரியில் இருந்து தச்சூர் கூட்டு சாலை செல்லும் வழியில் ஒரு இடத்தில் உள்ள மரத்தின் அடியில் பேய் நடமாட்டம் இருக்கிறது என்றும் அதுவும் முள்ளம்பன்றி வடிவத்தில் நடமாடுகிறதாம் என்றும் நம்பிக்கையுடன் சொன்னான்.
அவனிடம், சரி நாம் ஒரு நாள் நடு ராத்திரியில் அந்த வழியாகச் செல்வோம். பேய்கள் கண்களில் படுகிறதா என்று பார்ப்போம் என்றேன். அவன் தயங்கினான். இன்னொரு நண்பனையும் சேர்த்துக் கொண்டு, நாங்களும்தானே கூட வருகிறோம். பயப்பட வேண்டாம் என்று கூற, கூட வர ஒப்புக் கொண்டான்.
அன்று இரவில் பொன்னேரியில் இருந்து புறப்பட்டோம். அவன் சொன்ன இடத்துக்கு சரியாக 12 மணிக்கு சென்று சுற்று முற்றும் பார்த்தோம். வெறும் இருட்டு. கையில் கொண்டு போய் இருந்த டார்ச் லைட்டை அங்கும் இங்கும் அடித்துக் காட்டினோம். ஒரு பேயையும் காணோம், முள்ளம் பன்றியையும் காணோம். அதன் பிறகு அந்த நண்பன் பேய்கள் தொடர்பான அச்சத்தில் இருந்து விடுபட்டான்.
இன்னொரு முறை கும்முடிப்பூண்டியில் இருந்த நண்பர்களிடம் பேய்கள் தொடர்பான உரையாடல் ஏற்பட, பேய்கள் எங்கே இருக்கும் என்று கேட்டபோது, மயானத்தில் என்றனர். ஒரு நாள் நடுஇரவில் அவர்களையும் அழைத்துக் கொண்டு மயானத்துக்கு சென்றோம். ஒரு பேயையும் காணவில்லை; பிசாசையும் காணவில்லை. பிறகு அந்த நண்பர்களும் அச்சத்தில் இருந்து விடுபட்டார்கள்.
ஒரு முறை சென்னையில் இருந்து கும்முடிப்பூண்டி செல்வதற்காக இரவு பத்து மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் கூடூர் பாசஞ்சரில் ஏறினேன். சற்று கண்ணயர்ந்ததில் வண்டி கும்முடிப்பூண்டி தாண்டி சென்று விட்டது. ஆரம்பாக்கத்தில் நின்ற போதுதான் இறங்க முடிந்தது. நடு இரவு. அங்கு இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவு உள்ள கும்முடிப்பூண்டி செல்ல எந்த போக்குவரத்தும் இல்லை. நல்ல இருட்டு. ஆரம்பாக்கத்தில் இருந்து எந்த அச்சமும் இல்லாமல் நடக்கத் தொடங்கினேன். இடைஇடையே ஜிஎன்டி சாலையில் செல்லும் வாகனங்கள் தரும் வெளிச்சம்தான். இரண்டு மணி நேரத்தில் கும்முடிப்பூண்டி வந்து சேர்ந்தேன்.
எல்லாம் பெரியார் தந்த துணிச்சல்!