23/08/2024
நல்ல சினிமாக்களும், தமிழ் ஸ்டுடியோவும்...
இன்று நிறைய நல்ல சினிமாக்கள் வருகிறது என்றால், அதில் தமிழ் ஸ்டுடியோவின் பங்கு அளப்பரியது. அதற்கான எங்கள் உழைப்பு நீண்ட நெடியது. இயக்குனர் ராம் சொன்னது போல, என்னுடைய இளமைக்காலம் முழுவதையும் அதற்காக மட்டுமே செலவழித்திருக்கிறேன். நல்ல சினிமாக்கள் வர தொடங்கியிருக்கிறது. ஆனால் அதனை பார்க்க மக்கள் வருவதில் சுணக்கம் இருப்பதால், அதையும் சரி செய்ய, இந்தாண்டு தொடக்கம் முதல் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அதில் ஒன்றுதான், குழுவாக திரையரங்கம் சென்று படம் பார்த்து, அந்த படம் பற்றி விவாதிப்பது. நாளையும் கூட வாழை படத்திற்கு அவ்வாறு செல்லவிருக்கிறோம். இதில் இன்னொரு முக்கிய அம்சமாக படத்தின் தொழில்நுட்ப கலைஞரான என்னுடைய நீண்ட நாள் நண்பரான ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் எங்களோடு வந்து படம் பார்த்து, விவாதத்தில் பங்கு பெறுகிறார். தமிழ் ஸ்டுடியோவின் இந்த முன்னெடுப்பை பார்த்த பிவிஆர் நிர்வாகம், முன்கூட்டியே சொன்னால், திரையரங்கிலேயே படம் பார்த்து, விவாதிக்க நாங்கள் இடம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு கார்ப்பரேட்டாக இருந்தாலும், தமிழ் ஸ்டுடியோவின் முன்னெடுப்புகள் அவர்களையும் இறங்கி வர செய்கிறது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் போல, மற்றவர்களும் இப்படி பார்வையாளர்களோடு படம் பார்த்து விவாதிக்க முன்வரவேண்டும். அப்போது சினிமா இன்னமும் வீரியமாக, ஜனநாயகமாக மலரும். ஆனால் எல்லாரும் இப்படி முன்வருவார்களா என்று தெரியாது. ஏனெனில் முக்கியஸ்தர்கள் எல்லாரும் படத்தின் குழுவோடு சேர்ந்து பிரிவியூ ஷோ பார்த்துவிடுகிறார் பார்வையாளர்கள் எப்போதும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். நான் பிரிவியூ ஷோவிற்கு போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். யாரும் அழைக்கவில்லை என்பது வேறு விஷயம், அழைத்தாலும் போகும் எண்ணம் இல்லை. இயக்குநர் ராமின் பேரன்பால், நான் பிரிவியூ பார்த்த ஒரே படம், அவரது பேரன்பு மட்டுமே. அருமை நண்பர் சூர்யாவிற்காக ஜெய் பீம் படத்தையும் பிரிவியூவில் பார்த்தேன், அப்போதைய கொரோனா கால நிலவரப்படி படம் திரையரங்கிற்கு வராது என்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்.
எனக்கு முக்கியஸ்தர்களை விட பார்வையாளர்கள் முக்கியம். அதனால்தான் இன்றுவரை என்னுடைய மாணவர்கள், பொதுமக்கள், பியூர் சினிமா உறுப்பினர்கள், தமிழ் ஸ்டுடியோ ஆர்வலர்கள் என இவர்களை கூட்டிக்கொன்டு படம் பார்க்க செல்கிறேன். எனக்கு இன்னார்தான் முக்கியமாவர்க என்றில்லை, நல்லப்படங்கள் மட்டுமே எங்கள் இலக்கு. மனிதனின் வாழ்க்கை சுவாரசியமாக இருக்க வேண்டும், தொய்வடையாமல் இருக்க வேண்டும் என்றால் அவனது வாழ்வில் விஷன் இருக்க வேண்டும். விசனரி மனிதனாக இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்போம். எனக்கு அப்படி ஒரு இயக்கம் இருக்கிறது, அந்த இயக்கத்திற்கு ஒரு விஷன் இருக்கிறது. எத்தனை நம்பிக்கை துரோகங்கள் நடந்தாலும், யார் வந்தாலும், போனாலும், எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அந்த விஷன் இருக்கும் வரை எங்கள் இயக்கம் மாளாது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் எக்மோர் ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ குறும்பட வட்டம் என்றொரு நிகழ்வை தொடர்ந்து 8 ஆண்டுகள் நடத்தியது. அதில் வந்து பங்கேற்று பயன் அடைந்த நண்பர் ஒருவர் இன்று காலை தன்னுடைய இரண்டாவது படத்திற்கு பூஜை போட்டார், என்னையும் சிறப்பு விருந்தினராக அழைத்தார். சென்றிருந்தேன். எப்படி சார் 17 வருடங்கள் ஓயாமல் வேலை செய்துக்கொண்ட இருக்கீங்க என்றார், பதில் சொல்லவில்லை. அதே நிகழ்வில் இன்னொரு நண்பர் என்னை சந்தித்து நீங்க அருண் மோ தானே என்கிறார். ஆமாம் என்றேன். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, நான் எங்கள் ஊரில் இப்படி கலை-கலாச்சார நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கிறேன். அதற்கு இன்ஸபிரேசன் நீங்கதான், நீங்க செயறத பார்த்து எங்க ஊர்ல நாங்க செஞ்சிட்டு இருக்கோம் என்றார், முந்தைய நண்பர்க கேட்ட கேள்விக்கு பதில் இதுதான் என்று நினைத்துக்கொண்டேன். அவர் எந்த ஈகோவும் இல்லாமல் நேரில் பார்த்ததும் நீங்க இன்ஸபிரேசன் என்கிறார், பலர் அப்படி சொல்வதில்லை. ஆனால் தமிழ் ஸ்டுடியோவின் இந்த 17 ஆண்டுகால செயல்பாட்டை அப்படியே பிரதி எடுத்து நடத்தும் பல அமைப்புகளை நானறிவேன். தமிழ் ஸ்டுடியோவால் உந்துதல் பெற்று இயங்கும் பல இயக்குநர்கள், பியூர் சினிமா பதிப்பித்த புத்தகங்களால் பயன்பெற்று படம் எடுத்து பெயர் வாங்கும் பல இயக்குநர்களை நானறிவேன். அனால் யாருக்கும், எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், குறைந்தபட்சம், இதனால் பலன் அடைந்தோம் என்று கூட சொல்ல தோன்றுவதில்லை. எங்களுக்கும் அது முக்கியமில்லை என்பதால் அப்படியே கடந்துப்போகிறோம்.
இன்று தமிழ் சினிமாவில் கதை சொல்லலில், சினிமா உருவாக்கத்தில் நேர்த்தி உருவாகிறது என்றால் அதற்கு இரண்டு காரணம், ஒன்று கட்டற்ற வலைத்தளமான யூடியூப், இன்னொன்று பியூர் சினமென நிகழ்த்திய சினிமா ஜனநாயகமாக எல்லா தொழில்நுட்ப புத்தகங்களையும் தமிழில் கொண்டு வந்தது. பல யூடியூப்சேனல்கள் எங்கள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை வைத்துதான் பேசிக்கொண்டிருக்கின்றன. எல்லா இடத்தில் விரவி, ஒரு புதிய அலை சினிமாவை அமைதியாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. கிரெடிட் களை நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. காரணம் இந்த இயக்கத்தின் விஷன் எங்களை ஓட செய்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் விசனரி மனிதனாக இருங்கள், நான் சொல்வது புரியும்.