27/12/2024
The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்
\
டிசம்பர் 25
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லூக். 2:10-11).
“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”
இந்த நற்செய்தியைப் பரிசீலனை செய்வதற்கு முன்பு, ஒரு மிகமுக்கியமான அறிக்கையை மேற்கொள்ளவேண்டியதாயிருக்கிறது. அதென்னவென்றால், டிசம்பர் 25 ம் திகதி, இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிறக்கவில்லை என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும். இந்தத் திகிலூட்டும் அறிக்கையை மேற்கொள்ளுவதற்கு வேதவார்த்தைகள் இசைவாக இருக்கின்றது.
முதலாவதாக , மரியாளும் யோசேப்பும் குடிமதிப்பெழுதப்படும்படி, நாசரேத்தூரிலிருந்து பெத்லகேமுக்குப்போனார்கள் என்று அறியக்கூடியதாயிருக்கிறது; குளிர்காலத்தில் கர்ப்பவதியாகிய மரியாள் இவ்வளவு தூரம் பிரயாணஞ்செய்வது அவ்வளவு இலகுவானதல்ல (லூக். 2:4-5) ; அதுமட்டுமல்ல, அகுஸ்துராயனும் அத்தகைய கட்டளையைக் குளிர்காலத்தில் கொடுத்திருக்கமுடியாது; இரண்டாவதாக , மேய்ப்பர்கள் வயல்வெளியில் இருந்தார்கள் என்று அறியக்கூடியதாயிருக்கிறது (லூக். 2:8) ; டிசம்பர் மாதம் குளிர்காலமாக இருக்கிறபடியினால், அதெப்படி மேய்ப்பர்கள் இராத்திரியிலே வயல்வெளியில் தங்கினார்கள்? மூன்றாவதாகக் குளிர்காலத்தில் பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கமுடியாது (லூக். 2:7) ; நான்காவதாக , டிசம்பர் 25 ம் திகதி இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிறந்தார் என்பதற்கு எந்த விதமான குறிப்பும் வேதத்தில் கிடையாது. ஐந்தாவதாக , அப்போஸ்தலர்கள் டிசம்பர் 25 ல் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடியதாக எந்தவிதமான சான்றுகளும் வேதத்தில் கிடையாது; எல்லாவற்றிற்கும் மேலாக டிசம்பர் 25 ம் திகதி கொண்டாடப்படும் பண்டிகை, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, புறஜாதிகளினால் அனுசரிக்கப்பட்டது என்பதற்கு வேதத்தில் சான்றுகள் உண்டு (எரேமி. 10:1-5) . மேற்கூறிய காரணங்கள் சந்தேகத்திற்கிடமின்றி இரட்சகராகிய இயேசுகிறிஸ்து டிசம்பர் 25 ம் திகதி பிறக்கவில்லை என்பதனை உறுதிப்படுத்துகிறது.
ஆயினும், அவர் எப்பொழுது பிறந்தார் என்பது வேதத்தில் குறிப்பிடப்படவில்லை; வேதவல்லுநர்களின் கணிப்பின்படி அக்டோபர் மாதத்தில் பிறந்திருக்கலாம் எனப் பொதுவாக நம்பப்படுகின்றது. கிறிஸ்தவர்களாகிய நமக்கு அவர் எப்பொழுது பிறந்தார் என்பது முக்கியமல்ல; ஏனென்றால், நாம் நாட்களை வழிபடுவதில்லை; ராஜாதி ராஜாவையும், கர்த்தாதி கர்த்தரையுமே நாம் வழிபடுகிறோம். ஒவ்வொரு நாளையும் இயேசுகிறிஸ்து பிறந்த நாளாகக் கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இப்படியிருக்க, கிறிஸ்மஸ் என்ற பாரம்பரியத்தின்கீழ் பல்வேறுவிதமான வழிபாட்டுமுறைகள் நடைமுறையில் உண்டு; இவை யாவும் மதமேதவிர உறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவைகள் அல்ல.
இத்தகைய பாரம்பரியத்தில் மிகமுக்கியமானது ஒன்று, கிறிஸ்மஸ் மரம் ; இந்த மரத்திற்கெதிராகப் பழைய ஏற்பாட்டில் எரேமியாமூலம் கர்த்தர் இஸ்ரவேலிய ஜனங்களை எச்சரித்திருப்பதை நாம் எரேமியா 10:1-9 ல் காணக்கூடியதாயிருக்கிறது. இப்படியாக இன்னும் அநேகமான பாரம்பரியங்கள் உண்டு; இவைகள் புராணக்கதைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதேதவிர, பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் அல்ல; கிறிஸ்துவே இவை எல்லாவற்றிலும் முக்கியத்துவம் பெறுகிறார்; கிறிஸ்து ஒருவரே நம்முடைய ஒருமித்த நோக்காக இருக்கவேண்டும்; அவர் சிலுவையில் நிறைவேற்றியதே நம்டைய விசுவாசத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அவர் பிறந்ததினம் தெரியாவிட்டால், வருஷத்தில் எந்த ஒரு நாளையும் அவரின் பிறந்த தினமாகக் கொண்டாடலாம்; ஆனால், அதற்கு வேதவார்த்தை இசைவாக இருக்கவேண்டுமே!
கிறிஸ்துவை அறியாதவர்கள் அந்தப் பாவத்திற்கும், இழிவான உணர்வுகளுக்கும் அடிமைகளாகி, சாத்தானை எஜமானாக்கி, அவனுக்கு அடிபணிகிறார்கள்; அவனோ கொடூரமான எஜமானாயிருக்கிறான் (யோவா. 10:10) ; இப்படியிருக்க, விடுதலையடைந்த ஜனங்கள் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறார்கள்; நாமோ, சாத்தானுக்கு அடிமைகளாக அல்ல, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே அடிமைகளாக இருக்கிறோம்.
அப்பொழுது, மேய்ப்பர்களுக்குத் தேவதூதன் தோன்றினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தற்பொழுது அது ஒரு பெரிய விஷயம் அல்ல; ஆனால், அப்பொழுது அது ஒரு பெரிய விஷயமாகக் கருப்பட்டது; ஏனென்றால், அந்த நேரத்தில் மேய்ப்பர்கள் இஸ்ரவேலியர்களால் கீழ்ஜாதிகளாகக் கருதப்பட்டனர். தேவதூதன் இஸ்ரவேலிய மதத்தலைவர்களுக்குத் தோன்றாமல் இந்தக் கீழ்ஜாதிகளான மேய்ப்பர்களுக்குத் தோன்றியது ஏன்? என்று பொதுவாகக் கிறிஸ்தவர்களால் கேட்கப்படுகிறது; ஆம், மதத்தலைவர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கவுமில்லை, அவரை ஏற்றுக்கொள்ளவுமில்லை. இந்த எளிமையான ஜனங்கள் என்பது பணரீதியில் கணிக்கப்படவில்லை, அவர்கள் ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருந்தார்கள்; நாம் ஆவியில் எளிமையாக இருந்தால், இயேசுகிறிஸ்துவிடமிருந்து வெளிப்பாடுகள்வரும் என்பதனை நாம் அறிந்திருப்போமாக. இங்கு மேய்ப்பர்கள் பெற்ற வெளிப்பாடு: “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்பதாகும்; தேவதூதன் அவர்களுக்கு முதலாவதாகப் “பயப்படாதீர்கள்” என்று சொல்லியிருந்தான்; இதற்குக் காரணம், மேய்ப்பர்கள் பயத்தினால் வஞ்சிக்கப்பட்டிருந்தார்கள்; இந்த நிலைமையில் தேவதூதன் சந்தோஷத்தை உண்டாக்கும் ஒரு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறான்; அந்த நற்செய்தி, இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்பதாகும்.
இயேசுவை ஒருவன் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன் 24 மணித்தியாலமும் அவனுக்குச் சந்தோஷமே. அவர் சிலுவையில் நிறைவேற்றியதும், நம்மை அந்தப் பாவத்திலிருந்து விடுதலையாக்கியதும் பெரும் சந்தோஷத்தை நமக்குக் கொடுக்கிறது; ஏனென்றால், நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டது; நாம் இரட்சிக்கப்பட்டோம்; நாம் பரிசுத்தப்படுத்தப்பட்டோம்; நாம் நியாயப்படுத்தப்பட்டோம்; நாம் குணமாக்கப்பட்டோம்; நாம் விடுதலையாக்கப்பட்டோம்; இவை யாவும் நமக்குப் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.
மற்றும், அவர் நம்மெல்லோருக்காகவும் மரித்தார் (ஆதி. 3:15; யோவா. 19:30) என்பது எல்லாவற்றையும்விட மிகப்பெரும் சந்தோஷமாகும். மனுஷன் தன்னை அந்தப் பாவத்திலிருந்து விடுவிக்க முடியாதிருந்தபடியினால், அவனை விடுவிப்பதற்கு உலகத்தோற்றத்திற்கு முன்னமே தேவன் திட்டம் தீட்டி ஒரு இரட்சகரை அனுப்பியிருந்தார் (Iபேது. 1:18-20) .
இப்படியிருக்க, மனுஷனுடைய பிரச்னை பணப் பிரச்னையாயிருந்தால், ஒரு வங்கி முகாமையாளனைத் தேவன் அனுப்பியிருப்பார்; பொருளாதாரப் பிரச்னையாயிருந்தால், ஒரு பொருளாதார நிபுணனை அனுப்பியிருப்பார்; கட்டிடப் பிரச்னையாயிருந்தால் ஒரு தச்சனை அனுப்பியிருப்பார்; மனுஷனுடைய பிரச்னை அந்தப் பாவமானபடியினால் , அவனுக்கு, அவர் ஒரு இரட்சகரை அனுப்பினார். அந்த இரட்சகர் தன்னைப் பலியாகக் கல்வாரி சிலுவையில் ஒப்புக்கொடுத்து, மனுஷனை அந்தப் பாவத்திலிருந்து விடுதலையாக்கினார்; சாத்தான் இதனை ஒருபொழுதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அந்த இரட்சகரின் உயிர்த்தெழுதல் நமக்குப் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது; இதனால் ஏற்பட்ட பெந்தெகொஸ்தே அனுபவம் பெரும் சந்தோஷத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவர் புதிய பரிணாமத்தில் வந்தது பெரும் சந்தோஷத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. காளை வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திற்குப் பதிலாக இரட்சகரின் இரத்தம் சிந்தப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசமாயிருக்கக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுள்ளோம் (Iகொரி. 3:16) . இப்படியாக, அவரை ஏற்றுக்கொண்டவனுக்கு சந்தோஷம் முடிவில்லாமலிருக்கிறது; விசுவாசிக்கு அவருடைய பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் மீண்டும் வருவது ஆகியவைகள் எந்த நாளும் சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக.