03/05/2024
அறிவியல் தமிழ் நூலகங்கள் மருத்துவமனைகளில் உருவாக்கப்படுவது பலருக்கு வியப்பை அளிக்கிறது.
மருத்துவமனைகள் நோய் நிலைகளைச் சீர் செய்து நல்ல உடல் நலனைத் தருவிக்கும் இடங்களாக உள்ளன, அவற்றுள் அறிவியல் தமிழ் நூலகம் எதற்காக உருவாக்கப்படுகிறது ?
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் மருத்துவமனைகளில் உள்ளாக உருவாக்கும் அறிவியல் தமிழ் நூலகங்களின் பயன்பாட்டினை சற்று ஆழமாகவும் கூர்மையாகவும் நோக்கினால் புரிந்து கொள்ள முடியும்.
பொதுவாக மருத்துவமனைகளில் இரண்டு பகுதிகள் உள்ளன.வெளி நோயாளிகள் பகுதி, உள் நோயாளிகள் பகுதி - வெளி நோயாளிகள் பகுதியில் மருத்துவரை காண்பதற்காக மக்கள் அமர்ந்திருப்பதைக் காண முடியும். அந்நேரத்தில் அவர்கள் தங்களது நேரத்தை எதிர்கொள்ளத் தொலைக்காட்சிப் பெட்டியைக் கண்டு கழிக்கிறார்கள்.
அப்பெட்டிகளில் செய்திகள் அல்லது நெடுங்கதைகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.இவை இரண்டுமே மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் தருவதாக பொதுவாக இருக்கின்றன. ரம்மியமான ஒரு மனநிலையை வழங்க அவை அதிகமான நேரங்களில் தவறி விடுகின்றன.
அறிவியல் தமிழ் மன்றம் உருவாக்க நினைக்கும் அழகிய சூழல் எதுவென்றால் மருத்துவமனைகளில் மருத்துவரைக் காண்பதற்காகக் காத்திருக்கும் நோயாளிகள் அந்த அறையிலேயே உள்ள நூலகத்தில் உள்ள அறிவியல் தமிழ் நூல்களைத் தெரிவு செய்து தாங்கள் காத்திருக்கும் நேரம், பத்து நிமிடமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ அதனை நூல் படித்து மிகவும் அறிவார்ந்த சூழலில் ரம்மியமான நிலையில் கடத்த வேண்டும் என்பதுதான்.
உள் நோயாளிகள் இரண்டு நாட்கள் சில சமயம் ஐந்து நாட்கள் வரை மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் சூழலில் அங்கும் இதே தொலைக்காட்சிப் பெட்டி இதே செய்திகள் இதே நெடுங்கதைகள் இதே மாணவ அழுத்தம்....
மேலும் - நோயாளிக்குத் துணையாக ஒருவர் இருப்பார் அவரும் தனது நேரத்தை அலைபேசியை வருடிக்கொண்டு கழிப்பதை நம்மால் காண முடியும்.
இனிவரும் காலங்களில், மருத்துவமனைகளில் உள்ள அறிவியல் தமிழ் நூலகத்தில் நூல்களை எடுத்து உள் நோயாளிகள் படிக்கலாம் அவர்கள் மருத்துவமனையை விட்டு வீடு செல்லும் நேரத்தில் அந்நூல்களைச் செவிலியரிடம் ஒப்படைத்துவிட்டு மன நிம்மதியோடும் அறிவைப் பெற்ற மகிழ்வோடும் ரம்மியமான மனநிலையோடும் மருத்துவமனைகளை விட்டுச் செல்லலாம்.
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கான சேவைகளில் ஒரு வித்தியாசமான, புதுமையான, அழகான, தெளிவான மாற்றமாக இது நெடுநாளில் அமையும் என்பது ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர்களின் கனவாகும்.
அன்புடன்,
பேராசிரியர் டாக்டர் மு.செம்மல்
அறிவியல் தமிழ் நூலகத் திட்ட இயக்குனர்
ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்