04/06/2023
ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை...வெற்றிபாபா உருவ தியானம்!
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள். இதை நினைவில் கொள்ள வேண்டும்.
தியானம்! மிக மிக சக்தி வாய்ந்தது. நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதை மிக எளிதாக அடைய தியானம் ஒன்றே கைகொடுக்கும்.
புத்தரும், இயேசுவும் அன்பை பிரதானமாக கொண்டனர். அன்பின் உருவமாக வாழ்ந்தனர். அதற்கு காரணம் அவர்கள் செய்த தியானம்தான். முகமது நபி, ஹீராமலையில் தியானத்தில் ஆழ்ந்தபோதுதான் மிகப் பெரிய மாற்றத்தை கண்டார்.
மகாவீரர் தியானம் செய்து தன்னையே வென்றார். இவர்களைப்போல நீங்களும், நானும் தியானம் செய்தால் நிச்சயமாக நாம் வாழ்க்கையில் நினைத்துப்பார்க்க முடியாத ஒருவராக மாறிவிடுவோம். சீரடி சாய்பாபாவும் இதைத்தான் சொன்னார். பாபா காட்டிய பல வகையான ஆன்மீக பாதைகளில் இந்த தியானப் பாதை தனித்துவம் கொண்டது. ஆத்மார்த்தமான பலன்களை அள்ளித்தரவல்லது. தன்னை நாடி வந்த லட்சக்கணக்கான பக்தர்களில் சில பக்தர்களை மட்டும் சாய்பாபா தேர்வு செய்து, ‘தியானம் செய். தியானம் செய்.’ என்று விடாப்பிடியாக வலியுறுத்தியது உண்டு. அதை ஏற்று தியானத்தில் மூழ்கியவர்கள் மிகப்பெரிய பலன்களை அறுவடை செய்தனர்.
தியானத்துக்கு ஆத்மாவை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. உங்களை சுற்றி மிகப்பெரிய கலவரமே நடந்தாலும்கூட தியானத்தால் ஆன்மா அமைதியும், தூய்மையும் அடையும். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் தெய்வீக சக்தி நிரம்பி இருக்கிறது. நம்மிடம் உள்ள கோபம், தாபம், காமம், ஆசை, பொறாமை காரணமாக நாம் அந்த தெய்வீக சக்தியை உணராமலேயோ அல்லது புரிந்து கொள்ளாமலேயோ இருக்கிறோம். ஆனால், யார் ஒருவர் தியானம் செய்கிறாரோ அவரிடம் ஆசை, கோபம், காமம், பொறாமை போன்றவை குறையும். இதனால் தெய்வீக சக்தியை பெறும் ஆற்றலை எட்டமுடியும். இப்படி தியானம் மூலம் நம் எண்ணங்கள் சுத்தம் அடைந்தால் தாமாகவே ஆத்மபலம் ஏற்பட்டுவிடும். எனவே ஒருவர் ஆன்மீகத்தில் மேம்படவும், ஆரோக்கியத்தில் மேம்படவும் தியானம் மிகமிக முக்கியமானதாக உள்ளது.
தியானம் சரிவர அமையப்பெற்றால் உடலில் உள்ள சக்கரங்களும், சுரப்பிகளும் சிறப்பாக செயல்படும். இது நமக்கு தெளிவான சிந்தனையைத் தரும். மனதை பக்குவப் படுத்தும். நம் மனதில் விநாடிக்கு 14 எண் ணங்கள் ஏற்படுவதாக ஆய்வுகளில் கண்டு பிடித்துள்ளனர். நாம் தியானம் செய்தால் இந்த எண்ண அலைகள் குறைந்துவிடும். இதன் காரணமாக நாளடைவில் நமது மனம் ஒருமித்த நிலைக்கு வந்துவிடும். புருவ மத்தியில் கவனம் செலுத்தி தியானத்தில் ஈடுபட்டால் அது நம்மை ஆன்மீகத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும். தியானத்தில் சுவாச தியானம், விளக்கு தியானம், ஓம்கார தியானம், குண்டலினி தியானம் என்று எத்தனையோ வகைகள் உள்ளன.
ஆனால் சீரடி சாய்பாபா இத்தகைய தியானங்களை எல்லாம் சொல்லி தனது பக்தர்களை கஷ்டப்படுத்தவில்லை. ‘என்னை (பாபா) நினைத்து தியானம் செய். அதுபோதும்’ என்று பல தடவை தனது பக்தர்களிடம் கூறியுள்ளார். அதன் சாராம்சம் வருமாறு:-
நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. என் வழி அனைத்தில் இருந்தும் விலகி நிற்கும் தனி வழி. நம் உள்ளிருக்கும் ஞானத்தை அடைய தியானம் மிகமிக முக்கியமானது-. ஒருமுனை சித்தமாக தியானம் செய்வதால் ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அதை நீ தொடர்ந்து பழகினால் அலைபாயும் எண்ணங்கள் அமைதியாகிவிடும்.
உன் மனதில் துளி அளவுகூட ஆசை இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட நிலையில் நின்றுகொண்டு எல்லாவற்றிலும் வியாபித்து இருக்கும் கடவுளை நினைத்து தியானம் செய்தால் மனம் ஒருமைப்படும். அப்போது உன் இலக்கை நீ அடைவாய். இதுதான் ஆத்ம ஞானத்தை உணர்வதற்கு உரிய வழியாகும். அவ்வாறு உனக்கு தியானம் செய்ய இயலாவிட்டால் வேறு ஒரு எளிய வழியை சொல்லித்தருகிறேன் கேள். என்னையே நினைத்து தியானம் செய். அதாவது, என் அவதார உருவத்தை நினைத்துக்கொள். கண்களை மூடி அமர்ந்து என்னையே நினைத்துப்பார். என் முழு உருவத்தையும் உன் மனதுக்குள் கொண்டுவா. கால் நகத்தில் தொடங்கி தலை முடிவரை என் ரூபத்தை நினைத்துப் பார். எப்போது தியானத்தில் உட்கார்ந்தாலும் இத்தகைய குணாதிசயங்களுடன் தியானம் செய்.
இப்படி நீ தியானம் செய்யும்போது முழுக்க முழுக்க என் உருவத்தையே நினைத்துக்கொண்டால் நிச்சயமாக ஒரு காலகட்டத்துக்கு பிறகு உன்னுடைய மனம் அமைதி அடைந்துவிடும். அதன் பிறகு என் உருவம் உனக்குள் பதிந்து படிப்படியாக ஒருமுக நிலை உருவாகிவிடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள் ஆகிய 3-க்கும் இடையே உள்ள வேற்றுமைகள் மறைந்துவிடும். ஒரே முகமான சிந்தனைதான் இருக்கும். அந்த சிந்தனை தூய்மையான, உன்னதமான, உயர்வான நிலை கொண்டதாக இருக்கும். எனது உருவம் எல்லையற்ற ஞானம், கருணை கொண்டது. அதை நினைத்து தியானம் செய்ய செய்ய மனம் வெறுமையாகி பிரம்மத்தோடு பிரம்மமாக இணைந்து ஒன்றாகிபோவாய். சிலருக்கு எனது உருவத்தை தியானத்தில் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படலாம். அப்படி இருப்பவர்கள் என்னை நேரில் பார்க்கும்போது எதை உணர்ந்தார்களோ அதை நினைத்து தியானம் செய்யலாம். நிச்சயமாக பலன்கிடைக்கும்.
தாய் ஆமை நதியின் ஒரு கரையில் இருக்குமாம். மறுகரையில் அதன் குஞ்சுகள் இருக்கும். தாய் ஆமை அவற்றுக்கு பால் தருவது இல்லை. அரவணைத்து பாதுகாப்பது இல்லை. அதற்கு பதில் மறுகரையில் இருந்தபடியே கனிவான பார்வை ஒன்றை பார்க்கும். அந்த ஒரு பார்வையிலேயே ஆமை குஞ்சுகள் தெம்பான நிலைக்கு வந்துவிடும். ஆமை குஞ்சுகளின் தியானம்தான் இந்த வெற்றிக்கு காரணம். இதே போன்றதுதான் எனக்கும், உனக்கும் உள்ள உறவு. நீ எங்கு இருந்தாலும் என் பார்வை உன் மீது இருந்துகொண்டே இருக்கும். என்னையே நினைத்து தியானம் செய். அதற்கான பலனை அறுவடை செய்வாய்.
அதே சமயத்தில் என் பக்தனின் பெயரை உச்சரிப்பதே எனக்கு தியானம் ஆகும். என் பக்தரோடு நடப்பதே ஆனந்தம். என் பக்தன் தவறி விழும்போது என் கைகளை நீட்டி தாங்கி பிடிப்பேன். அவனை ஒருபோதும் விழுந்துவிட அனுமதிக்க மாட்டேன். என் பக்தன் தியானம் செய்து மேம்பட்டிருந்தால் நிச்சயமாக என்னிடம் இருந்து விலகமாட்டான். தியானத்திலும் என் பெயரை உச்சரிக்கும்போதும், உங்கள் மனக் கண் முன் என்னை நிலை நிறுத்துங்கள். இவ்வாறு தொடர்ந்து தியானம் செய்யும்போது ‘சாமீப்யமுக்தி’ என்ற முக்தி நிலையை நீங்கள் அடைய முடியும். இப்படி பாபா பல தடவை தன் பக்தர்களுக்கு தியானத்தின் முக்கியத்துவத்தை சொல்லியுள்ளார். பாபா காட்டிய இந்த பாதையை எத்தனையோ பக்தர்கள் கடைபிடித்துள்ளனர்.
சீரடி சாய்பாபாவின் அற்புதங்களை இந்த உலகுக்கு காட்டியவர்களில் ஒருவரான நரசிம்ம சுவாமிஜி தியானத்தின் மூலம் பாபாவை நெருங்கினார். பாபாவையே எப்போதும் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். பாபாவை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது சீடர் ராமகிருஷ்ண சுவாமிஸ்ரீக்கு ஒரு தடவை சொல்லிக் கொடுத்தார். அதை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
முதலில் உங்கள் வீட்டின் ஒரு பகுதியில் அமைதியாக அமருங்கள். கண்களை மூடி தியானத்தில் ஈடு படுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வதை வழக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். முதலில் சாய்பாபாவின் காலடிகளில் கவனத்தை செலுத்துங்கள். பிறகு அப்படியே மேல் நோக்கி உங்கள் பார்வையையும், கவனத்தையும் கொண்டு வாருங்கள்.
சாய்பாபாவின் ஜொலிக்கும் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் நினைத்துப் பாருங்கள். அவரது தலை முடி வரை உங்களது பார்வை, கவனம் செல்ல வேண்டும். இறுதியில் பாபாவின் திருஉருவம் முழுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து நினைத்துப் பாருங்கள். இப்படியே சாய்பாபா அவதார உருவத்தை கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் கொண்டுவந்து எண்ணிப் பாருங்கள். பிறகு மனம் முழுவதையும் சாய்பாபா திருஉருவத்தின் காலடியில் கொண்டுபோய் குவித்துவிடுங்கள். அப்படி செய்தால் பாபாவின் முழுமையான கருணையையும், அருளையும் நீங்கள் பெற முடியும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சாய்பாபாவுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்கள் எங்கும் நிறைந்தவர்கள். இதை நினைவில் கொள்ள வேண்டும். தியானத்தில் பாபாவை எந்த அளவுக்கு தேடுகிறீர்களோ அந்த அளவுக்கு ஆனந்தம் பொங்கும். சாய்பாபாவுக்கு உனக்கு என்ன தேவை என்பது தெரியும். அவரை தியானித்து வழிபட்டால் மிக உயர்ந்த ஆன்மீக பலன்களை பெற முடியும். சாய்பாபாவின் பாதங்களை விட்டுவிடாதே. கெட்டியாக பிடித்துக்கொள். நீ ஆசிர்வதிக்கப்படுவாய். இவ்வாறு நரசிம்ம சுவாமிஜி தனது சீடரிடம் தெரிவித்தார். இந்த கருத்து சாய்பாபாவின் ஒவ்வொரு பக்தனுக்கும் பொருந்தும். பாபாவை நினைத்து தியானம் செய்யுங்கள். பலன்கள் தானாக தேடி வரும்.
அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானம் செய்தால் நல்லது என்று சித்தர்கள் சொல்லி உள்ளனர். அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை தியானம் செய்வது உங்களை புனிதனாக்கும் என்று வள்ளலார் சொல்லி உள்ளார். குரு சக்தியுடன் இணைய வேண்டுமா? காலை 7 மணி முதல் 7.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 7.30 மணி வரையும் தியானம் செய்ய வேண்டும். இதில் உங்களுக்கு உகந்த நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாபாவை நினைத்து தியானம் செய்யுங்கள். விரைவில் மாற்றத்தை பார்ப்பீர்கள். ஏனெனில் இது பாபா காட்டிய பாதை! இதுமட்டுமா? பாபாவின் உருவப் படமும் மூல மந்திரமும்கூட பாபாவை நெருங்க செய்யும். அதற்கும் பாபா வழிகாட்டி உள்ளார்.