01/12/2024
பிரான்சில் கேணல் பரிதியின் 12 ம் ஆண்டில் அஞ்சல் தலை வெளியீடு.
தமிழ் பண்பாட்டு வலையத்தின் வரலாற்று நிகழ்வு: கேணல் பரிதி (நடராஜா மதீந்திரனின் ) நினைவாக அஞ்சல் முத்திரை வெளியீடு
தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்ஸ் மற்றும் பிரான்சின் அஞ்சல் சேவையான La Poste உடன் இணைந்து, 2012ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள், பாரிஸில் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர், கேணல் பரிதி என்று அழைக்கப்பட்ட நடராஜா மதீந்திரன் அவர்களின் நினைவாக ஒரு அஞ்சல் முத்திரை வெளியீட்டு நிகழ்வை நடாத்தியது.
இந்த நிகழ்வு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி Bobigny நகரசபையின் Salon d’honneur de l’Hôtel de Ville மண்டபத்தில், Bobigny நகரபிதாவும் Seine-Saint-Denis மாவட்டசபை உறுப்பினருமான திரு. Abdel Sadi அவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள்:
நிகழ்வில் Bondy நகரசபை உறுப்பினரும் Seine-Saint-Denis மாவட்டசபை உறுப்பினருமான திருமதி Oldhynn Pierre, Seine-Saint-Denis மாவட்டத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான திருமதி Raquel Garrido, மற்றும் Seine-Saint-Denis மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திரு Alexis Corbière ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நடராஜா மதீந்திரனின் படுகொலைக்கு நீதி பெற்றுத்தர தாங்கள் துணை நிற்பதாகவும், இந்த நினைவுச்சின்னம் தமிழரின் தியாகத்திற்கான முக்கியமான அடையாளமாக இருக்குமென்றும் அவர்கள் உறுதியாகக் கூறினர்.
முத்திரை வெளியீடு:
நடராஜா மதீந்திரனின் தாயார் தருமதி நடராஜா கமலாம்பிகை மற்றும் Bobigny நகரபிதா திரு. Abdel Sadi இணைந்து முத்திரையை வெளியிட்டனர். முதல் முத்திரையை பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. இரா. சிறிதரன் பெற்றுக்கொண்டார்.
நினைவு நிகழ்வின் சிறப்பு:
இந்த அஞ்சல் முத்திரை வெளியீடு ஒரு சாதாரண நினைவு முத்திரை அல்ல. இது ஈழத்தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய ஒரு வீரத்தின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் நீதி பெற வேண்டிய போராட்டத்தின் அடையாளமாக அமைந்தது.
இந்த நிகழ்வு, ஈழத்தமிழர்களின் உரிமை மற்றும் இனநீதி எதிர்ப்பில் அவர்களின் தார்மீகமான நிலைப்பாட்டை முத்திரை செய்யும் ஒரு முக்கியக் கணமாகும்.
•• தமிழ் பண்பாட்டு வலையம், பிரான்ஸ்