04/11/2023
ஒரு காலத்தில்....
வகுப்பில இருக்கிற பிள்ளைகளின் குடும்ப சூழ்நிலைகளை எல்லாம் அறிந்து வைத்திருந்தார்கள் ஆசிரியர்கள்.
வெறுமனே புத்தகங்களை வாசிச்சு கரும்பலகையில் எழுதுவதோடு மட்டும் அவர்களின் பணி முடிந்துவிடவில்லை.
பள்ளிக்கூடத்துக்கு வெளியே நான் என்ன செய்கிறேன் என்பது வரை அவர்கள் அறிவார்கள்.
"ரியூசனில ஒரு பிரச்சினை எண்டால் அது ஆறுமுகம் ரீச்சருக்கு அடுத்த நாளே தெரியும்"
"என்னுடைய வீட்டில ஏதும் பிரச்சினை எண்டால் அது ஜூலியானா ரீச்சருக்கு தெரியும்"
"என்னுடைய நண்பனோடு பிரச்சினை எண்டால் அது ராமநாதன் ரீச்சருக்கு தெரியும்"
"கூடப்படிக்கும் பிள்ளைகளோடு பிரச்சினை எண்டால் அது முத்துலச்சுமி ரீச்சருக்கு தெரியும்"
"ஆமியோட ஏதும் பிரச்சினையெண்டால் அது குணசீலன் சேருக்கு தெரியும்"
"நான் பசியோடு இருந்தால் அது ஆழ்வாப்பிள்ளை ரீச்சருக்கு தெரியும்"
ரீச்சர் கொண்டுவரும் சாப்பாட்டை பகிர்ந்து உண்ணும் பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள்.
எனக்கு படிப்பித்த பெரும்பான்மையான ஆசிரியர்களின் வீடு தெரியும். அவர்களின் வீட்டு குசினி வரை சென்றிருக்கிறேன்.
கிழமைக்கு ஒருதரம் எண்டாலும் ஜூலியானா ரீச்சரும் முத்துலச்சுமி ரீச்சரும் அம்மாட்ட என்னைப்பற்றி ஒண்டு நல்லா சொல்லுவினம் அல்லது முறைப்பாடு செய்வினம்.
ஆழ்வாப்பிள்ளை ரீச்சர், ஆறுமுகம் ரீச்சர் , ராமநாதன் ரீச்சர் , முத்துலச்சு ரீச்சர் எனக்கு இன்னொரு அம்மா.
ஒருக்கால் நான் பள்ளிக்கூடத்தில் வேண்டுமென்றே "நிராகரிக்கப்பட்ட போது" அவர்கள் தான் என்னோடு கூட நின்றார்கள்.
மாணவன்- ஆசிரியர் என்ற உறவைத்தாண்டி அவர்கள் எங்களின் மேல் வைத்திருந்த அன்பும் பாசமும் மிகப்பெரியது.
பாடப்புத்தகங்களை தாண்டி நாங்கள் அரசியல் சமூக மாற்றங்களையெல்லாம் ஆசிரியர்களோடு பேசிவோம். விவாதிப்போம்.
"படிக்கிறது பாதி. கதைக்கிறது மீதி"
சத்தம் போடாமல் கதைக்காமல் இருங்கோ எண்டு சொன்ன ஆசிரியர்களை நான் வெறும் புத்தகப்பூச்சிகளாகவே பாத்திருக்கிறேன்.
தேவையெண்டால் ஆசிரியர்களைக்கூட நிமிர்ந்து நியாயமாக கேள்வி கேட்கும் பக்குவம் கூட எங்களிடம் இருந்தது.
ஆனால் பல பள்ளிக்கூடங்களில் இண்டைக்கு கனக்க ஆசிரியர்களுக்கு....
-மாணவர்களின் குடும்ப பின்னணி தெரியாது
-பள்ளிக்கூடத்துக்கு வெளியே என்ன செய்கிறான் எண்டு தெரியாது.
-பள்ளிக்கூட பையில் கொப்பி புத்தகம் இருக்கா? இல்லை கஞ்சா சிகறட் இருக்கா எண்டு தெரியாது
-மன அழுத்தம் பற்றி தெரியாது
-பசியோடு இருக்கிறானா எண்டு தெரியாது.பகிர்ந்து உண்ணவும் தெரியாது.
-மாணவனை சுற்றி ஊரில்/சமூகத்தில் என்ன நடக்கிறது எண்டும் தெரியாது.
வெறுமனே பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை தாண்டி உங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு...
-வாழ்க்கை என்றால் என்ன எண்டு சொல்லிக்குடுங்கள்
-அரசியலையும் நாட்டின் நிலமைகளும் கற்றுக்கொடுங்கள்.
-உரிமைகளுக்காக போராடுவதை சொல்லிக்குடுங்கள்.
-சமூகத்தில் நிகழும் அநீதிகளை எதிர்க்க சொல்லிக்குடுங்கள்.
அதற்கும் மேலாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாணவனை அரவணைத்து...
"சாப்பிட்டியாடா.."
"சுகமாக இருக்கிறியா.."
"ஏதேனும் பிரச்சினையெண்டால் என்னிட்ட சொல்லு.."
"நேரம் இருந்தால் என்ர வீட்ட வா.."
என்று கேளுங்கள்.
எங்களின் ஊரும் சமூகமும் பல நல்ல மாற்றங்களை காணும்.
#தமிழ்ப்பொடியன்