25/01/2024
1991 டிசம்பர் மாதத்தில் காவிரி நதி பிரச்சனை காரணமாக மைசூரில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் உயிர்தப்பி கோவைக்கு வந்தார்கள். கோவை கலெக்டராக திரு. கலைவாணன் IAS இருந்தார். அந்த காலகட்டத்தில் கோவை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் இருந்த பல கமிட்டிகளில் நான் உறுப்பினராக இருந்தேன். அதனால் கலெக்டர் உடன் அறிமுகம் இருந்தது. அதனால் என்னை அழைத்த கலெக்டர் அடைக்கலம் தேடிவந்த தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யச் சொன்னார். அதனால் ரோட்டரி கிளப் மூலம் பல இடங்களில் தங்கியிருந்த அவர்களுக்காக மருத்துவமுகாம்கள் நடத்தினேன். பல்வேறு வியாபார சங்கங்கள் மூலமாக உணவு, உடைகள் மற்றும் பாத்திரங்கள் வழங்க ஏற்பாடு செய்தேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலெக்டர் கலந்து கொண்டார். 1992 பொங்கலுக்கு பின்னர் நிலைமைகள் மாறியது. குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் ஒரு வேலையாக கலெக்டர் ஆபீஸ் போனேன். அப்போது வெளியே போவதற்காக காரில் ஏறப்போன கலெக்டர் கலைவாணன் அவர்கள் என்னை பார்த்து விட்டு காரில் இருந்து இறங்கி ஒரு வாரமாக உங்களை பார்க்கணும் னு நினைச்சுட்டு இருந்தேன். நல்லவேளையா இன்னைக்கு நீங்களே வந்து விட்டீங்க என்றார். அவரின் அருகில் நின்று கொண்டிருந்த PA (General) திரு. பாலச்சந்திரன் ( பின்னாளில் IAS) அவர்களிடம் என்னைக் காண்பித்து நாளைய தினம் நடக்க உள்ள குடியரசுதின விழாவில் இவரின் சமூகசேவைக்காக சிறந்த இளைஞர் விருது வழங்க ஏற்பாடு செய்யவும் என்று சொல்லி விட்டு நாளை காலை வ.உ.சி பார்க் வந்துடுங்க என்று சொன்னார். அடுத்த நாள் 26.01.1992 குடியரசு தினத்தன்று எனக்கு அவர் விருது வழங்கினார். அப்போது அவர் அருகில் இருந்த திரு. ராதாகிருஷ்ணராஜா DCP (L&O) என்னைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக புன்னகைத்து என்னை வாழ்த்தினார். காரணம் அவருடன் இணைந்து பல போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளேன். எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் இந்த விருது வழங்கிய திரு. கலைவாணன் அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நபர் ஆவார்.