Our Story
இணையத்தள நேயர்களுக்கு எமது அன்பான வணக்கம்
தமிழ் இணைய ஊடகப்பரப்பில் நிலவிவரும் போட்டிகளுக்கு மத்தியில் தேசியத்திற்காகவும் அதன் இலக்கினை எட்டுவதற்காகவும் புதியதொரு வரவாக புனிதபூமி என்கின்ற தமிழ் இணையத்தளம் தனது வருகையை மேற்கொள்கின்றது.
இன விடுதலைக்காக கொடுக்கப்பட்ட பல்லாயிரம் உயிர்விலைகளுக்கான பலனை என்றோ ஒரு நாள் தமிழினம் பெற்றுக்கொள்ளும் என்ற அசைக்கமுடியாத உண்மையை உலகம் உணர்ந்துகொள்ளும் நாள் தொலைவில் இல்லை.
தாயகத்தில் போருக்குப் பின்னான தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டே வருகின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் சர்வதேசத்திற்கு மாயைத் தோற்றம் காட்டப்படுகின்ற போதிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களில் பெருமளவானர்கள் சொல்லொணாத் துயர்களையும் வறுமை நிலையினையும் எதிர்கொண்டே வருகின்றனர்.
தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றன. தமிழர் வாழ்விடங்களில் பௌத்த சிங்களக் கலாசாரம் விதைக்கப்பட்டுவருகின்றது. தமிழினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இறுதிப்போரில் சரணடைந்து காணாமல் போனோர், இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கடத்தப்பட்டுக் காணாமல் போனோர், சிறைகளில் அடைக்கப்பட்டு பல்லாண்டுகளாக ஏங்கி வாழ்ந்துவருகின்ற உறவுகள் என பல்லாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்கவில்லை.
தமிழ்த் தேசம் தனக்கான விடுதலை என்பவற்றுடன் மேற்குறித்த அநீதிகளுக்கு பதில் பெற்றேயாகவேண்டி சூழலே தற்போது நிலவிவருகின்றது. இவ்வாறான சூழலில் எமது மக்களுக்காக நீதியான உண்மையான மனித உரிமைகளை முன்நிறுத்தும் வகையிலான செய்தித்தளமாக புனிதபூமி என்கின்ற எமது இணையத்தளம் இன்று முதல் உங்கள் முன் கையளிக்கப்படுகின்றது.
எண்ணிப்பார்க்க முடியாத இமாலய அர்ப்பணிப்புக்களைக் கடந்ததே எமது தாய்த் தமிழீழம். எம் தாய் நாட்டை பிரதி பலிக்கும் வகையில் புனிதபூமி என்ற பெயரிடப்பட்டுள்ள எமது தளமும் முடிந்தளவிற்கு பங்காற்றும் என உறுதிகூற முடிகிறது.
புனிதபூமி என்பதற்கு ஈழவிடுதலை வரலாற்றில் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவு ஒன்றும் உள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட முடியும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் தனியே சிங்கள பேரினவாதிகளுடன் மட்டும் நின்றிருக்கவில்லை என்பதை கடந்த கால வரலாறுகள் பறைசாற்றியிருந்தன. இந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழீழத்திற்கான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை பிடிப்பதற்கான முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.
இந்திய அரசின் மிக முக்கிய நடவடிக்கைகளில் இருந்து தேசியத் தலைவர் அவர்களை இந்திய இராணுவத்தினரால் நெருங்க முடியாதவகையில் காத்ததும் ஒரு ‘புனிதபூமி’.
மணலாற்றில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமுதகானம், உதயபீடம், கதிரமலை, காராம்பசு, நாசதாரி, நீதி தேவன், ஜீவ மலை ஆகிய விடுதலைப்புலிகளின் முகாம்களுக்கு நடுவே கம்பீரமாக நின்று தேசியத்தலைவர் அவர்களைப் பாதுகாத்தது ‘புனிதபூமி’.
மிகச் சிறிய படையணியுடன் மணறாற்றுக் காட்டுக்குள் சென்ற தேசியத்தலைவர் அவர்கள் மிகப் பெரிய படையணியுடன் வெளியேறிய வரலாற்று நிகழ்விலிருந்து புனிதபூமி முகாமை பிரித்துப்பார்க்க முடியாது.
இன்றும் தமிழினம் மிகப் பாரிய பின்னடைவைச் சந்தித்ததாக தோற்றங்காட்டினாலும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளையும் வரலாற்றையும் எமது தேசம் படைக்கப்போகிறது என்பதை மணலாற்றிலிருந்த புனிதபூமி சாதித்துக் காட்டிய சாதனையிலிருந்து அனைவரும் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் தமிழினம் நிமிர்ந்து நிற்கும் நாள் தொலைவில்லை. விடியும் நாளுக்காக ஒன்றிணைந்து முன்நகர்வோம்.
- புனிதபூமி இணையக்குடும்பம் -