
12/10/2022
பேரழகி! பெருங்காதலி!
அவள் மௌனமும் மொழி பேசும்.
அவள் பார்வையும் பகையறுக்கும்.
அவள் புன்முறுவல் கண்டிடவே
மதங்கொண்ட யானையும் மண்டியிடும்.
அவள்தன் நகம்கூட ஆணையிடும்,
அதனை தலையில் வைத்து பணியாற்ற
ஆயிரம் சிங்கங்கள் ஆர்ப்பரிக்கும்.
கூரிய குத்துவாள் தேவையில்லை
ஒற்றைப் புருவங் கொண்டே
எதிர்நிற்போரை வெல்பவள்
கடைக்கண் திறந்தால் சொல்லவா வேண்டும்
கலிங்கத்துப்பரணி பாடப்பெற்றவர் கூட
கதிகலங்கியே மூர்ச்சையிடுவர்.
காதல், களிப்பு, மயக்கம்,
கோபம், வெறி, வேட்கை,
துணிவு, திறன், பகட்டு
என பாரபட்சமின்றி அனைத்தையும்
ஒருங்கே தன்வசப்படுத்திய
பெண்ணுருவங் கொண்ட அழகிய
நச்சுப் பாம் பவள்.
பேரழகி! பெருங்காதலி!
- காயத்ரி