மண் பயனுறவேண்டும் என்ற கொள்கை முழக்கத்தோடு மக்கள் நலன் காக்க திரைவிரித்ததுதான் மக்கள் தொலைக்காட்சி. பொழுதுபோக்கு ஊடகம் என்பதற்கு அப்பாற்பட்டு பொழுதை பயனுள்ளதாக்கும் ஊடகம் என்ற முதல் விதையை தூவியிருப்பது மக்கள் தொலைக்காட்சியின் தனித்துவம்.
7732 பங்குதாரர்களோடு தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சி இன்று உலகத்தமிழர்களின் இல்லங்களுக்கெல்லாம் அலை பரப்பிவருகிறது.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் ஊடக அ
ரங்கில் கால் பதித்த மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை நோக்கம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டு கூறுகளையும் மீட்டெடுப்பதே.
தொழில்நுட்ப ரீதியில் முன்னேறினாலும் சிந்தனையில் பின்னங்கால் வைக்கும் ஊடகங்களால் உருவாகிக்கிடக்கும் வெற்றிடத்தை நிரப்புவதில் மக்கள் தொலைக்காட்சி முன் நிற்கிறது. தமிழ் நாகரீகத்தின் சமூக கூறுகளை எற்றம் பெறவைக்க முனைபவர்களின் சிந்தனைக்குழந்தையாகிறது மக்கள் தொலைக்காட்சி.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்த மக்கள் தொலைக்காட்சியின் இலக்கு தெளிவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. திறம்பட்ட ஊழியர்களின் முழு உழைப்பில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வார்தெடுக்கப்படுகின்றன. பார்வையாளர்களின் அறிவார்ந்த தேவையை நிரப்பும் வண்ணம் மக்கள் தொலைக்காட்சியின் கருத்தாக்கங்களின் அழகியலும், மரபியலும் சமவிகிதத்தில் மிளிர்கின்றன. இந்த புரிதலும் அர்ப்பணிப்பு உணர்வும்தான் மாநகரத்தின் எல்லை தாண்டி குக்கிராமங்களின் குடிசைவரை மக்கள் தொலைகாட்சியை இட்டுச்செல்கின்றன. மக்கள் தொலைக்காட்சியின் ஒவ்வொரு முயற்சியும் பார்வையாளர்களின் நேரத்தை பயனுள்ள நேரமாக்கவேண்டும் என்பதே.
படப்பிடிப்பு தளங்களிலும் தயாரிப்பு வசதிகளிலும் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மக்கள் தொலைக்காட்சி தன்னகத்தே கொண்டுள்ளது. மிகத்திறமைவாய்ந்த தொழில்நுட்ப குழுவினரும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், தயாரிப்பாளர்களும், செய்தியாளர்களும் மக்கள் தொலைக்காட்சியின் கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுக்கின்றனர்.
உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் ஊடகத்தேடலை மக்கள் தொலைக்காட்சி நன்கு புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான் கிராமங்கள் தொடங்கி பன்னாடுவரை ஒவ்வொரு நிமிடத்தின் அசைவுகளையும் செய்திகளின் வாயிலாக உலகத்தமிழர்களுக்கு தடையின்றி வழங்கிவருகிறோம். இந்த முன்னேற்ற பாதையில் மக்கள் தொலைக்காட்சிக்கு சிறந்த தொலைக்காட்சி என்ற அங்கீகாரம் வழங்கி முன்னணி தமிழ் வார நாளிதழ் ஆனந்தவிகடன் கௌரவித்தது. அதே போன்று பெண்ணிய சிந்தனை மேம்பாட்டு முன்னேற்றத்திற்காக UNFPA லாட்லி விருது அளித்தது. இதற்கெல்லாம் மேலாக மக்களின் மனங்களின் – தரமான படைப்புகளால் நிறைவான இடம்பிடித்து அலை வீசி வருகிறது மக்கள் தொலைக்காட்சி.
மண் பயனுறவேண்டும் என்ற இந்த லட்சிய பயணம் தடுமாற்றமில்லாமல் என்றென்றும் தொடரும்.....