27/04/2020
"அக்கால நினைவுகள் அழகானவை"
மா. சிவசோதியின் 'நினைவுகள் சுமந்து...'
சிறுகதைத்தொகுப்பு : ஒரு கண்ணோட்டம்!
- அலெக்ஸ்பரந்தாமன், புதுக்குடியிருப்பு.
இன்றையகாலம் நவீனத்தை விரும்புபவர்களால்
ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. 'பழையன கழிந்து புதியன புகுதல்' என்ற போர்வையில், இனங்களின் பண்பாட்டியல் சிதைவடைந்து கொண்டிருக்கின்றன. இதற்கு எமது இனமும் விதிவிலக்கல்ல.
தற்கால நவீனயுகவாதிகளால் எமது பழைமைப்
பண்புகள் நிராகரிக்கப் படுகின்றன. அல்லது மறைக்கப்படுகின்றன. அதுவும் இல்லையெனில் மறக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன.
ஆயினும், எது மறக்கப்படுகிறதோ எவையெவை நிராகரிக்கப்படுகிறதோ அவைகள் மீண்டும் புத்துயிர்ப்புக் கொள்கின்றன, கொள்ள வைக்கப்படு கின்றன. இவை தூரநோக்குப் பார்வையும், தான் வாழும் சமூகத்தை கூர்ந்து அவதானித்துக் கொள்ளும் தன்மையும் கொண்ட படைப்பாளிகளால் மாத்திரமே சாத்தியமாகும் என்பதை சிறுகதைத் தொகுப்பு வெளிப்படுத்தியிருக்கின்றது.
வடமராட்சி - கரவெட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டு சிவசோதி என்பவரால் ஆக்கப்பெற்ற பத்துச் சிறுகதைகள் அடங்கிய ' நினைவுகள் சுமந்து...' எனும் சிறுகதைத் தொகுப்பினுள் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில கதைகள், நவீனத்தால் எது மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டுப் போனதுவோ அவைகளை மீண்டும் தமது எழுத்தாளுமை மூலம் இன்றைய தலைமுறைக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் சிவசோதி அவர்கள்.
இத்தொகுப்பில் உள்ள சில கதைகளைப் படிக்கும் போது, மனம் புறநிலைத்தாக்கத்திலிருந்து விடுபட்டு, கதைகளின் அகநிலைக்குள் பிரவேசித்து அங்குள்ள மாந்தர்களோடு, நாமும் ஒருவராக இருப்பதான உணர்வை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது.
இது கதாசிரியருக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறலாம். ஏனெனில், கதைகளில் வரும் பாத்திரங்களும் அவைபேசும் கிராமியப் பேச்சுவழக்கும் பொய்யற்ற வகையில், எம்முடன் ஒன்றித்து விடுகின்றன.
என்னதான் நவீனம் வந்து, பல் துலக்குவதற்கு பற்பொடியும் இரசாயனப்பதார்த்தங்கள் கலந்த
'பற்பசை'யை உருவாக்கிவிட்டு நின்றாலும், எமது
மூத்ததலைமுறையினர் அன்று பாவித்த அந்தக்
'கரித்துண்டு' இன்றும்கூட எம்மால் மறப்பதற் கன்று.
'தை பிறக்கட்டும்...' எனும் முதற் சிறுகதையில் -
"ஐயா அடுப்படிக்குள் சென்று ஒரு கிண்ணத்தில்
தண்ணி எடுத்துக்கொண்டுபோய், ஒரு கரித் துண்டை வாயில் போட்டுக் கடித்தபடி... ஆட்காட்டி விரலால் நாலைந்துதரம் இழுத்துத் தேய்த்து..."
காட்சிப்படுத்தலாக அமையும் இப்பகுதி ஒருகாலத்தில் கரவெட்டியின் யதார்த்தம் இன்று மிகமிக அருகிய அக்காட்சியைச் சிவசோதி கண்முன்னே விரிய விட்டுள்ளார்... என இத்தொகுப்புக்கான தனது அணிந்துரையில் பேராசிரியர் சிவலிங்க ராசா அவர்கள் கூறியிருப்பது நிதர்சனமே!
நவீனத்துக்குள் கிடந்து மீளமுடியாமல் அல்லலுறும் பழமைப் பண்புகளுக்கு ஒரு குறியீடாக 'கண்ணகை' சிறுகதையில் வருகிறது கண்ணகை எனும் பாத்திரம். இப்பாத்திரம் மூலம் கதாசிரியர்
இச்சமூகத்துக்கு கதையின் முடிவுகொண்டு, சிலவிடயங்களை அழுத்தமாகச் சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்து போகிறார்.
எம்முன்னோர்கள் மூடர்கள் அல்லர்! விஞ்ஞான வளர்ச்சியுள் மனித அறிவு இப்போது மேம்படைந்து நிற்பினும், எம்மூதாதையர்கள் இயற்கைமீது கொண்ட நம்பிக்கைகள், சமயசடங்குகள் நிராகரிக்க முடியாதவை.
பேத்தியின் திருமணத்தை வீட்டில் நடத்த விரும்பாமல், மண்டபத்தில் நடத்த முன்வரும்போது, " டேய் வீட்டில நல்லதுகளைச் செய்ய வேணும். அப்பத் தான் லட்சுமிகடாச்சம் வரும்..." எனக் கண்ணகை தன் மகனுக்குக் கூறுவதும், பத்துப்பவுண் தேறக்கூடிய தனது பதக்கத்தை பேத்திக்குப்போடும்படி கண்ணகை தனது மருமக ளிடம் கொடுத்து, போடுவிக்கும்போது, மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்தவள் அதைத் தடுத்ததால், கண்ணகை முகம் சிவந்து கொள்வதும், தாலி கட்டும் நேரம் பார்த்து கமெராக்காரன் "கொஞ்சம் பொறுங்கோ..." எனத்தடுக்க, "குறுக்கால போனவா எந்தநேரத்தில என்ன சொல்லுற..." என்று சீறி விழுவதும், எம் மூத்தவர்கள்வாழ்வில் பாரம்பரியமாக வந்து கொண்டிருந்த நம்பிக்கைச் சடங்குகளை தற்கால நவீனம் எந்தளவுக்குப் புறந்தள்ளிச் செல்கிறது என்பதை கண்ணகை எனும் சிறுகதையில் வெளிப்படுத்தி விடுகிறார் சிவசோதி.
அத்தோடு, இன்று எல்லாமே மாறிவிட்டன ; மாறிக்கொண்டிருக்கின்றன. இப்போதைய தலைமுறை, அவர்தம் பிள்ளைகள் உறவு முறைக்கான பெயர்களை ஆங்கிலமொழியிலும், அதேசமயம், அந்த வார்த்தைகளைச் சுருக்கமாகவும், அழைத்து மகிழ்கின்றனர். ஆனால், இத்தொகுப்பினுள் வரும் பாத்திரங்களுக்கான உறவுமுறைப்பெயர்கள் தற்போது நடைமுறையில் இல்லாதவையாயினும், இப் பெயர்களைச் சொல்லி அழைக்கும்போது ஒரு சுகம் இருந்தது. உறவுகளைப் பிரிய விடாமல் ஒன்றுக்குள் ஒன்றாக நெருக்கம் கொள்ள வைத்தது.
ஐயா, அப்பாச்சி, அம்மாச்சி, அக்காத்தை, கண்ணகை... போன்ற உறவுச் சொற்கள் இங்கே உதாரணமாக அமைகின்றன. இவைதவிர, இக்கதைகளில் இழையோடும் கிராமத்துப் பேச்சு வழக்குகள் ரசிக்கத்தக்கவையாகின்றன. மண் கமழும் எளிமை மொழியிலமைந்த வார்த்தைகள் இவை.
" நிலவு காலிச்சிட்டுது..."
"என்னடா மோன..."
" ஆரப்பு வா மோன..."
" போடா உன்ர கொப்பர் வீட்ட..."
"மூதேசி போ அங்கால..."
- என்பவையே அவை.
சில கதைகளில் உள்ள முன்பந்திகளின் ஆரம்பமும் இடைநடுவிலும் வர்ணனைகளோடு கதைகள் நகருவது அவைகளை மேலும் மெருகூட்ட வைக்கின்றன.
காலை நேரத்துப்பனித்துளி, புற்களின்மீது முத்துக்களைப் பிரசவித்திருந்தது. அவை பளீர் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தன. பகலவன் மெதுவாகத் தன்கரங்களை உயர்த்தி வானவீதியில் ஊர்வலம் வரத்தொடங்கினான். மூடியிருந்த பனிப் புகை அச்சத்தில் கரைந்துது கொண்டிருந்தது.
(பாதை மாறிய பயணங்கள் எனும் கதையிலிருந்து...)
மாலைநேரத்து மயக்கும் வேளை, கதிரவன் தன்
வரவினை முடித்து கண்ணயர்ந்து போகிறான். செங்கம்பளம் விரித்து மேற்றிசைக்கோடியில் நிலவுப் பெண்ணுக்காய் இரவின் காத்திருப்பு.
(தொட்டில் பழக்கம் எனும் கதையில் இருந்து...)
மேற்குறிப்பிட்ட பந்திகளை சிறுவரிகளாக்கிப்பார்க்குப்போது, நல்லதொரு கவிதை அமைவதைக்காண முடியும்.
காலத்தைப் பதிவு செய்வதே இலக்கியமெனில்,
சிவசோதியின் 'நினைவுகள் சுமந்து...' தொகுப்புக்கதைகளும் ஒரு காலத்தைப் பதிவு செய்துவிட்டே நகருகின்றன.
தை பிறக்கட்டும்... சிறுகதையில் வரும்
கொட்டப்பெட்டி( பக் : 04).
அக்காச்சி வந்தா...சிறுகதையில் வரும்
மூக்குப்பேணி( பக் :10).
கிராமத்து நினைவுகள்... சிறுகதையில் வரும்
கிடுகுச்செத்தை ( பக் : 20).
நினைவுகள் சுமந்து... சிறுகதையில் வரும்
மட்டைப்படலை (பக் :45)... போன்ற பொருள்கள் ஒரு காலத்தின் வாழ்வியலை எமக்குள் ஞாபகப்படுத்தி நிற்கின்றன. கொட்டப்பெட்டி, மூக்குப்பேணி, கிடுகுச் செத்தை, மட்டைப்படலை... போன்ற பொருள்கள் தற்போதைய பாவனையில் இல்லை.
இப்போதைய தலைமுறைக்கு தெரியவும் வாய்ப்பில்லை.
சிவசோதியிடம் பல்வகை ஆற்றல் உண்டு என்
பதைச் இச்சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன.
இவரிலிருந்து பிரதிபலிக்கின்ற மண்வாசனை,
பேச்சுவழக்கு, இயற்கை ரசிப்பு, கூர்ந்து நோக்கும்
திறன், சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுதல்,
வில்லங்கமற்ற மொழிநடை, கவிரசனை... போன்ற
வை தேங்கிவிடாது அனைத்து ஆற்றல்களோடும்
மேலும் வளர்ச்சி கொள்ள வேண்டிய பகுதிகளும்
இல்லாமலில்லை. தீட்டத்தீட்டத்தான் கூரும் என்று
கூறுவார்கள், சிவசோதி எழுத எழுத அந்தக் கூர்மை சிறப்பாக அமைந்து விடும்... என்று பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா அவர்கள் இந்த நூலுக்கான தனது அணிந்துரையில் தெரிவித்தி
ருப்பதும் நிதர்சனமே!
ஒரு பழைக்காலத்தை கண்முன்னே கொண்டுவந்த திரு மா. சிவசோதி அவர்களுக்கு
வாழ்த்துகள்! பாராட்டுகள்!
●
https://www.facebook.com/alex.paranthaman.98