27/03/2020
ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்துங்கள் : மின் இணைப்பு துண்டிக்கப்படாது
வெள்ளி 27, மார்ச் 2020 5:30:00 PM (IST)
ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்த வில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டுக்குளே இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதத்திற்குள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஏப்ரல் 15ம் தேதி வரை செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞசெய்தி வந்ததையடுத்து இது வழக்கமாக வரக்கூடிய குறுஞசெய்தி என்று விளக்கம் அளித்துள்ள மின்சாரவாரியம், மின்சார இணைப்பு துண்டிக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.
மேலும் மார்ச் மாதம் கட்ட வேண்டிய பணத்தை ஏப்ரல் 15 வரை கட்டலாம் என்றும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் கட்டவில்லை என்றாலும் உங்கள் வீட்டில் மின்இணைப்பு துண்டிக்கப்படாது, தைரியமாக இருக்கலாம் என்று மின்சார வாரியம் நம்பிக்கை அளித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரீடிங் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தாழ்வழுத்த மின் இணைப்பு (Low tension & low tension current tranformer) கொண்ட வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மார்ச்-ஏப்ரல் மாத கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின்படி செலுத்த வேண்டுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஊடரங்கு உத்தரவால் மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ரீடிங் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், முந்தைய மாத கணக்கீட்டின்படி கட்டணத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பயனாளர்கள் நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் (BBPS) முதலிய ஆன்லைன் சேவைகள் மூலம் கட்டணத்தை செலுத்தலாம் எனவும், பணம் செலுத்த மின் கட்டண கவுண்டர்களுக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.