19/01/2024
யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். 107வது பிறந்தநாள் விழா!
இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் பாசையூர் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழ் நகரின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னால்ட் தலைமையில், பாரிசிலிருந்து ஐரோப்பிய தமிழர் எம்ஜிஆர் நற்பணி மன்ற தலைவர் மேரி பீட்டர் இணைந்து விழா ஏற்பாடுகள் குருநகரிலும், பாசையூரிலும் நடைபெற்றன.
குருநகரில் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகள் வண்ணம் தீட்டி அலங்கரிக்கப்பட்டு, அங்குள்ள மன்றத்தினரால் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் இதயக்கனி ஆசிரியர் எஸ். விஜயன், கடலூர் திரு. முருகமணி (மதுரையில் 1980ல் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டின் தலைவராக, எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவுடன் இணைந்து செங்கோல் வழங்கியவர்). சின்னசேலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. பரமசிவம், 'அல்லையன்ஸ் பதிப்பகம்' விஜய் பிரசாந்த், பட்டுக்கோட்டை அதிமுக பிரமுகர் ஜெயபிரகாஷ் நாராயணன் (தம்பிக்கோட்டை) ஆகியோர் பங்கேற்றனர். இங்கு 200 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் (ரூ. 3500 மதிப்புடையது) வழங்கப்பட்டன. இவற்றை 'இதயக்கனி' ஆசிரியர் வழங்கி தொடங்கி வைத்தார்.
பாசையூரிலும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவையொட்டி ஊர்வலம் நடைபெற்றது. இங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையணிவித்து, அதிமுக கொடியேற்றி வைத்து, 150 பேர்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. 50 பேர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. 200 பேர்களுக்கு மேல் வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
விழாவையொட்டி மெல்லிசை நிகழ்ச்சியில். எம்.ஜி.ஆர். பாடல்கள் பாடப்பட்டன. யாழ் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னால்டும் பாடல்கள் பாடினார். விழாவில் இதயக்கனி ஆசிரியர் விஜயன், கடலூர் முருகுமணி, ஆர். பி. பரமசிவம் உரையாற்றினர். நடுவே இதயக்கனி எஸ்.விஜயன் எழுதிய 'எம்.ஜி.ஆர். கதை' தமிழ் மற்றும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பில் வந்த நூலும் வெளியிடப்பட்டன.
அரசியல் பின்புலமின்றி நடத்தப்பட்ட இந்த விழாக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வையொட்டி இதயக்கனி விஜயன் குழுவினர் மறைந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்ந்த, தரைமட்டமாகியுள்ள வீடு இருந்த வல்வெட்டித்துறையிலுள்ள இடத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செய்தனர்.
இந்திய அமைதிப்படை இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது அவர்களை எதிர்த்து திலீபன் 11 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீட்ட இடத்தில் கடலூர் திரு. முருகமணி, இதயக்கனி ஆசிரியர் விஜயன், யாழ் நகரின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னால்ட், சின்னசேலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. பரமசிவம், பட்டுக்கோட்டை அதிமுக பிரமுகர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தமிழீழ தேசிய தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இடம் முன்பு. இலங்கை ராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் இருக்கும் காட்சி. அருகில் கடலூர் திரு. முருகமணி, இதயக்கனி ஆசிரியர் விஜயன், சின்னசேலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. பரமசிவம்
ஆசியாவின் பெரிய நூலகமான யாழ்ப்பாணம் நூலகத்தில் இதயக்கனி மாத இதழ் மற்றும் இதயக்கனி ஆசிரியர் எழுதிய புத்தகங்களை வழங்கினோம். 1983ல் தீக்கரை ஆன நூலகம் இன்று புனரமைக்கப்பட்டு மீண்டு வந்துள்ளது.
தமிழீழ தேசிய தலைவர் வெ. பிரபாகரன் வாழ்ந்த இல்லம் என்று எழுதிய பலகை முன்பு இதயக்கனி ஆசிரியர் விஜயன்.
Ithayakkani S Vijayan | Ithayakkani News