03/06/2021
தூத்துக்குடி மாவட்டம் :03.06.2021
குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 3 பேர் கைது - 2350 மதுபாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், பணம் ரூபாய் 15 லட்சம், கண்டெய்னர் லாரி மற்றும் ஒரு கார் பறிமுதல் - தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலாஜி அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி. ரோஸ்லின் சேவியோ தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், தலைமைக் காவலர் திரு. கோபி தில்லா, திரு. எழில்நிலவன், திரு. ராஜ்பாரத் மற்றும் திரு. சங்கர மூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குரும்பூர் மெயிரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி (TATA Container Lorry) TN 58 AS 3174) மற்றும் காரை (Lancer Car TN 33 AJ 6494) மறித்து சோதனை செய்ததில், அதில் 49 அட்டைப் பெட்டிகளில் 180 மில்லி அளவு கொண்ட 480 மதுபாட்டில்கள், அதே அளவு கொண்ட 1872 மதுபான பாக்கெட்டுகள் என மொத்தம் 2352 குவார்ட்டர்கள் (2352 × 180Ml = 423 லிட்டர்) மற்றும் ரொக்கம் ரூபாய் 14,51,850/- இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது, உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மேற்படி மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக கொண்டு சென்ற விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த மகாதேவன் மகன் சிவராமன் (40), திருப்பூர் படியூரைச் சேர்ந்த மணி மகன் மெய்யழகன் (38) மற்றும் திருப்பூர் மன்னரை பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த மொக்கராசு மகன் பூபாலன் (35) ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை போலீசார் விசாரணை செய்ததில் மேற்படி 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் மொத்தமாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, அவற்றை தமிழ்நாட்டில் கும்பகோணம், புதுக்கோட்டை மாவட்டம், மதுரை, மேலூர் மற்றும் நாங்குநேரி உட்பட பல இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்து, அந்தப் பணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்யலாம் என்று நாங்குநேரியிலிருந்து வரும்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி 3 பேரைக் கைது செய்து 2352 மதுபாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், ரொக்கம் ரூபாய் 15 லட்சம், லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.