31/10/2023
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் நிர்வாகிகள் மீது வவுனியாவில் வைத்து கடந்த 25/10/2023 வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விளக்கம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமானது எட்டு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தை ஸ்தாபித்து அவர்களை நிர்வாகித்து வரும் ஒரு தாய் அமைப்பாகும்.
வவுனியா மாவட்டத்தின் நிர்வாகமானது திருமதி சறோஜினி என்பவர் தலைமையில் இயங்கி வருகின்றது. வவுனியா மாவட்டத்தின் செயலாளராகவும் எட்டு மாவட்ட நிர்வாகத்தின் பொருளாளராகவும் இருந்த திருமதி ஜெனிதா அவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் நடந்த சில சம்பவங்களிற்காக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு 6 மாதங்களிற்கு பொறுப்புக்கள் அனைத்திலிருந்தும் விலகி சாதாரண உறுப்பினராக இருக்கும் படி எமது சங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டார். அவரிடம் உள்ள சகல ஆவணங்கள், வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு அனைத்தையும் மீள ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தார்.தொடர்ந்து பதிவுத்தபாலில் எழுத்து மூலமாகவும் அவர் மேற்படி தீர்மானத்தின்படி செய்யும் படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் இன்று வரை சங்கத்தின் ஆவணங்களையோ, வரவு செலவு கணக்கு, பணக்கையிருப்பு என்பவற்றை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இவ்வாறாக ஒழுக்காற்று நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் நிர்வாக ஒழுங்கிற்கு உட்படாமல் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் தலைவி திருமதி சறோஜினி அணுகிய, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் ( திருமதி ஜெனிதாவின் நடவடிக்கைகளால் அதிருப்திப்பட்டு விலகி இருந்தவர்கள்) வடக்கு கிழக்கு நிர்வாகத்தின் தலைவர் செயலாளர் ஆகியோரைச் சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தனர். அதன்படி அங்கு சென்ற நிர்வாக உறுப்பினர்கள் அவர்களின் குறை நிறைகளைச் செவிமடுத்ததுடன் திருமதி ஜெனிதாவின் வெளியேற்றத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக நிர்வாகத்தை தெரிவு செய்து எமது சங்கத்தை பலப்படுத்த வவுனியா மாவட்டத்தின் தலைவி திருமதி சறோஜினி மற்றும் பல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடுத்த வேண்டுகோளினை நாம் ஏற்று இருந்தோம்.
அதன் பிரகாரம் கடந்த ஒக்டோபர் 25ம் திகதி பொதுக்குழு கூட்டம் நடாத்தி நிர்வாகம் தெரிய உள்ளதை ஊடகச் சந்திப்பு மூலம் தெரியப்படுத்தியிருந்தோம்.கூட்டம் நடாத்துவதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தை பணம் செலுத்தி பதிவுசெய்து இருந்தோம்.
அதன்படி அன்றைய தினம் தாய் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உபசெயலாளர் மூவருமாக (முறையே கிளிநொச்சி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து )புறப்பட்டு புகையிரதம் மூலமாக வவுனியாவிற்கு காலை 9.30மணிக்கு வந்து சேர்ந்து நடந்து நகரசபை மண்டபத்திற்கு சென்றுகொண்டிருந்தோம். வவுனியா மாவட்ட தலைவியும் நேரத்துடன் வந்த உறவினர்களும் மண்டபத்திற்கு உள்ளே சென்று இருந்தனர்.
அப்போது கூட்டத்திற்கு என வந்த சிலர் வவுனியா மாவட்ட தலைவி திருமதி சறோஜினிக்கு போன் செய்து தம்மை மண்டபத்தினுள் வரவிடாது திருமதி ஜெனிதாவும் அவருடன் சிலரும் கேட் அடியில் நின்று துரத்துவதாக கூறினர். அதைக்கேட்ட தலைவி, குறித்த உறவுகளை அழைத்து வருவதற்காக வெளி வாசலுக்கு சென்ற போது திருமதி ஜெனிதா தலைமையில் அங்கு நின்றவர்கள் தலைவி சறோஜினிக்கு தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தினர். அவர் கீழே விழுந்து விட்டார். நடந்து வந்து கொண்டிருந்த நிர்வாக உறுப்பினர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்ணுற்று, திருமதி சறோஜினி அவர்களை காப்பாற்றுவதற்காக வேகமாக சென்றபோது திருமதி ஜெனிதாவும் வேறு சிலரும் தகாத வார்த்தைகளால் பேசிய படி எம்மை நோக்கி வந்து எட்டு மாவட்டத்தின் தலைவி மீது தாக்குதல் நடத்த, மற்றவர்கள் எட்டு மாவட்டத்தின் செயலாளர் மற்றும் உபசெயலாளர் மீதும் தாக்குதல் நடத்தினர். அனைவரும் மூர்க்கத்தனமாக அம்மூவரையும் வெளி வாசலுக்கு வெளியில் பாதையில் வைத்தே தாக்கினர். இதில் தலைவியின் வயது 63, செயலாளர் 71 வயதும் ஆன வயோதிபத்தாய்மார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் அன்றைய தினம் நிர்வாக கூட்டத்தில் கைகலப்பு ஏற்படவில்லை, மாறாக வவுனியா மாவட்டத்தின் உறவுகளின் அழைப்பை ஏற்று நிர்வாக தெரிவிற்காக சென்றிருந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே சரியான விளக்கம் ஆகும்.
எட்டு மாவட்டத்தின் தலைவியும் அதன் செயலாளரும் கிளிநொச்சியில் பல காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை இணைத்து 20/02/2017 இல் தொடர் போராட்டத்தினை தொடங்கினர். பின் இப்போராட்டமானது தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களையும் இணைத்து நிர்வாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று ஜெனிவா, ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம், இங்கிலாந்து பாராளுமன்றம் என தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தை கொண்டு சென்றதுடன் தூதரக அதிகாரிகள் தாமாகவே தேடிவந்து சந்திப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து நீதிக்கான பயணத்தில் முன்னேறியுள்ளது. இந்த சங்கம் பலப்படுவதும், தமிழ் மக்களின் நீதி தேடும் பயணம் வளரக்கூடாது என்பதிலும் பல சக்திகள் முனைப்புடன் செயல்படுவதை நாம் அறிவோம். ஆனாலும் எமது நீதி தேடும் பயணம் எத்தடைகளையும் தாண்டி பயணிக்கும் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது எட்டு மாவட்ட நிர்வாகமும் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு, புதிய உத்வேகத்துடன் எமது நீதிக்கான போராட்டம் தொடரும் என்பதனை சகலருக்கும் உறுதிபடத் தெரிவிக்கின்றோம். இதில் அனைவரினதும் பங்களிப்பினையும், ஆதரவினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.