27/11/2019
வையகம் உள்ளவரை....வாழும் மாவீரர்கள்!
கண்ணுக்கு புலப்படா கடவுளை
கைகூப்பும் மானிடமே!
கண்ணுக்குள் நாம் வைத்து காக்கும்
கடவுள் மாவீரர்களே!
எம்முடனே வாழ்ந்து
எம் விடியலுக்காய் உயிர் நீர்த்து
எம் விடுதலைக்காய் களமாடிய
வீரம்மிகு காவல் தெய்வங்களே!
சுழலும் காலம் உள்ளவரை
நீளும் எம்மூச்சு நிற்கும் வரை
நீங்கள் போற்றப்படவேண்டியவர்கள்.....அல்லர்
பூஜிக்கப்பட வேண்டியவர்கள்
நான் என்றும் எனது சொந்தம் என்றும்
தன்னலத்தே நீங்கள் நிற்காது
எமது இனமென்றும் எம் தாயகமென்றும்
உறுதி கொண்டு களம் கொண்டீர்.
வேங்கையென வெகுண்டெழுந்து
படைப் பகைவனோடு போராடி
உமைக்கொடுத்து எமைக்காத்த
வீரம்மிக்க மைந்தர்களே!
ஈழ விடுதலைக்காய் உறுதி கொண்டு
நகரும் இரவு பகல் பாராமல்
களத்தினிலே போராடி கண் துயின்ற
தமிழீழ விடுதலை தீபங்களே!
காலம் உமையென்றும்
தடுத்து நிறுத்த முடியவில்லை
அந்த காலத்தையே உம் வீரத்தால்
அடக்கி உடைத்தெறிந்தாய்
ஈழ வேந்தர்களே ! தமிழீழ மைந்தர்களே!
நாம் மண்ணில் உம்மை புதைக்கவில்லை
எம் நெஞ்சில் உம்மை விதைத்துவிட்டோம்
எம்முடலில் உயிர் உள்ளவரை
உமை என்றும் மறவோம் மாவீரர்களே!
இந்த மாவீரர் நாளில் இந்த சிறு கவியை வீர மரணமடைந்த எமது மாவீரர்களிற்கு,நெற்றிக்கண் தமிழ் HD வானொலி சிரம் தாழ்த்தி சமர்ப்பிக்கின்றது.