20/10/2022
மகிழ்வித்து மகிழ் தீபாவளி
அனைவரும் தீபாவளி உட்பட பல பண்டிகைகளை மகிழ்வுடன் கொண்டாடும் நேரத்தில் பல குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் அது மிகக்கடினமான கனவு. அப்படிப்பட்ட நபர்களை கண்டெடுத்து அவர்களை மகிழ்விக்கும் நோக்கில், வெளியுலக இன்பங்களையும், மகிழ்வுகளையும் இன்றுவரை சற்றும் அறிந்திராத, கும்முடிப்பூண்டி அருகே வசித்துவரும் இருளர் இன குடும்பங்களை சேர்ந்த 36 குழந்தைகள் உட்பட 14 குடும்பங்களை, காந்தி உலக மையம் மகிழ்வித்து மகிழ் தீபாவளி எனும் நிகழ்வின் மூலம் மகிழ்விக்க முடிவு செய்தது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், அனைவருக்கும் காலை சிற்றுண்டியுடன் புத்தாடைகள் வழங்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து இரு பேருந்து மூலமாக, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்திற்கு, மகிழ்விக்கும் நோக்குடன் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் குடும்பத்துடன் பார்த்து, விளையாடி மகிழ்ந்தவற்றை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஏழைகளின் சிரிப்பிலும்,மகிழ்விலும் நாங்கள் அனைவரும் அன்று இறைவனை கண்டோம். அவர்கள் விரும்பிய அசைவ உணவுடன், அனைவருக்கும் இனிப்பு, அனைத்து குழந்தைகளுக்கும் கைநிறைய விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டு, மேலும் அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரைக்கு பேரூந்து நகர்ந்தது. அங்கு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ராட்டினம், கடல் குளியல்,விளையாட்டு என்று தங்களை மறந்து மகிழ்தனர். இது இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரின் பூர்வஜென்ம பாக்கியம். இறுதியாக தீபாவளி பட்டாசு, மேலும் ஒரு புத்தாடை, அவர்கள் விரும்பிய இரவு உணவுடன் மகிழ்வித்து மகிழ் தீபாவளி நிகழ்வு, பல அன்பு உள்ளங்களின் பேராதரவினால் சிறப்புடன் நடைபெற்றது.
இம்முயற்சியில் அவர்களோடு ஒன்றாய் கூடிமகிழ்ந்ததை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இந்நிகழ்வின் நோக்கமே, நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற சாமானியர்களின் வாழ்வில், இத்தகைய நிகழ்வு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, இதுபோன்ற மகிழ்வித்து மகிழும் நிகழ்வுகள் பெருகவேண்டும் என்பதே. நீங்களும் முயன்று பாருங்கள் உலகிலேயே இதுவரை நீங்கள் அனுபவித்திராத அந்த மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
பண்டிகை தருணங்களில் நமக்காக, நம் பிள்ளைகளுக்காக ஆடைகள், இனிப்புகள் வாங்கும்போது, இதுபோன்றவற்றை, கனவிலும் வாங்க இயலாத மக்களுக்கு, நீங்கள் வழங்கும் இந்த சிறிய வெகுமதிகள், உங்கள் சந்ததிகளுக்கும், உங்களுக்கும், உண்மையான மகிழ்ச்சியையும், ஏற்றத்தையும் வாரிவழங்கும் எளியவழி...
எளியவர்களுக்கு நாம் செய்யும் உதவி செலவல்ல... அது அனைத்திற்குமான முதலீடு...
இந்த மகிழ்ச்சியான நிகழ்வு வரும் 24/10/2022, பகல் 2.00 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் விதை போன்றது, பார்க்கும் நெஞ்சங்களிலெல்லாம் முளைக்கும் ஆற்றல் பெற்றது.
என்றும் அன்புடன்.
எம்.எல். ராஜேஷ்