01/09/2020
"தோழர் தமிழரசன் நினைவு நாள் இன்றாகும்!."
1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் ஆதிக்க சாதி பண்ணைக்காரர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலக்கட்டத்தில் இந்தியாவெங்கும் இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்த இயக்கங்களின் செயல்பாடு தீவிரமாகி 1960களின் பிற்பகுதியில் மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பான மக்கள் யுத்தக் குழு - People's War Group - PWG தோன்றியது. இந்த அமைப்பு மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவியது. குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் இந்த அமைப்பு வேகமாக வளர்ந்தது.
கடலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், பென்னாடம், தருமபுரி போன்ற பின் தங்கிய கிராமங்களில் தான் இந்த இயக்கம் வளர துவங்கியது. இதற்கு இந்தப் பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார சூழலும் முக்கிய காரணம். வடமாவட்டங்களில் பெரும்பாலான நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். இந்தப் பகுதியின் முக்கிய பொருளாதாரம் முந்திரி. முந்திரி வருடம் முழுக்க மகசூல் கொடுக்க கூடிய பயிர் அல்ல. வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே முந்திரி கிடைக்கும். பிறகு சீண்டுவார் இல்லை. இந்த முந்திரி காடுகளும் சிறு விவாசாயிகள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடியவை அல்ல. பெரும் பண்ணைக்காரார்கள் வசம் தான் நிலங்கள் இருந்தன.
இப்பகுதியின் பெரும்பான்மை மக்களான வன்னிய, தலித் மக்கள் இந்தப் பண்ணைக்காரர்களின் நிலங்களில் கூலி வேலை செய்பவர்களாக இருந்து வந்தனர். பிற மாநிலங்களில் பண்ணைக்காரர்கள் - அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான போராட்டம் வெடித்த பொழுது இப்பகுதியிலும் இந்தப் போராட்டம் வேரூன்ற தொடங்கியது. நக்சலைட் இயக்கங்களும் தமிழ் மண்ணில் அறிமுகமாகின.
நக்சலைட் இயக்கமாக ஆரம்பித்த இந்தப் போராட்டம் பின் தமிழ் தேசியமாக, ஆயுதப் போராட்டம் மூலம் தமிழ் தேசியத்தை அடையும் இயக்கமாக உருவெடுத்தது. தமிழகத்தின் முதல் குண்டுவெடிப்பும் இப்பகுதியில் தான் நடந்தேறியது. அதனை அறிமுகப்படுத்தியர் பென்னாடத்தைச் சேர்ந்த புலவர் கலியபெருமாள். பள்ளி ஆசிரியராக இருந்த புலவர் கலியபெருமாள் "மக்கள் யுத்தக் குழு" இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். மேற்குவங்க நக்சலைட் தலைவர் சாரு மஜும்தாருடனும் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
புலவர் கலியபெருமாள் மூலமாக நக்சலைட் இயக்கம் வடமாவட்டங்களில் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு புலவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்ட பொழுது அந்த குண்டுகள் வெடித்ததால், தீவிரவாத இயக்கம் பற்றிய செய்திகள் வெளிவரத்தொடங்கின. அவர் மீது கொலைக்குற்றம் போன்ற பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு அரசு அவரை சிறையில் அடைத்தது.
நக்சலைட் இயக்கத்தின் திருப்பு முனையாக இத் தருணத்தில் தோழர் தமிழரசன் உருவாகினார். 1980களில் இந்த இயக்கம் மிக வேகமாக வளர முக்கிய காரணம் தோழர் தமிழரசன் தான். People war Group இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் அவர் உயர்ந்தார். சாதியில்லா சமுதாயம் அமைப்பது, பண்னை நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுப்பது போன்றவை இவரின் முக்கிய கொள்கைகளாக இருந்தன. அதே சமயத்தில் தமிழ் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளில் நம்பிக்கை உடையவராக தமிழரசன் விளங்கினார்.
1985ம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு ஆதராக தமிழகத்தில் உணர்வு அலைகள் கரைபுரண்ட பொழுது, தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றோர் தங்களை தமிழ்தேசிய உணர்வுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். இதனால் மக்கள் யுத்தக் குழுவில் இருந்து தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் இருவரும் நீக்கப்பட்டனர். இதன் பிறகு தமிழ்நாடு மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியை இருவரும் துவங்கினர். இக் கட்சியின் ஆயுதப் பிரிவாக "தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA)" என்ற அமைப்பை தோழர் தமிழரசன் தோற்றுவித்தார்.
பொறியியல் பயின்ற தோழர் தமிழரசன் குண்டுகள் தயாரிப்பதிலும் வல்லவராக இருந்தார். 1985ம் ஆண்டு துவங்கி 2000வரை கணக்கெடுத்தால் தமிழத்தின் பல இடங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை இந்த இயக்கம் நடத்தியது. மைய அரசின் தளங்களை தான் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கியது. தனித்தமிழ்நாட்டை உருவாக்கி அங்கு சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயத்தை அமைப்பது தான் தன்னுடைய லட்சியம் என்று தமிழரசன் முழங்குவார். பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் ஏழைகளுக்கு அளிப்பார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது லட்சியமாக இருந்தது.
1987ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் நாள் பொன்பரப்பி கிராமத்தில், தன் இயக்கத்திற்கு பொருள் சேர்ப்பதற்காக தமிழரசன் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார். பொன்பரப்பியில் இருந்த ஸ்டேட் பாங்க் வங்கியை கொள்ளை அடித்து விட்டு வெளியேறும் பொழுது தமிழ்நாடு உளவுத்துறை இந்த கொள்ளை பற்றி அறிந்ததால், அவர்கள் ஏற்கனவே பொது மக்கள் என்ற போர்வையில் ஊடுவி இருந்தனர். அவர்கள் ஏற்படுத்தி கலவரத்தில் மக்களும் அறியாமல் தாக்குதலை தொடுத்தனர். உளவித்துறை ஏற்கனவே முற்கள் போட்டு அவர்களை தப்பிக்க விட முடியாமல் செய்தனர். இதேவளை அடையாளம் தெரியாமல், அவர் "தோழர் தமிழரசன்" தான் என்று தெரியாமல் ஊர் மக்கள் தாக்கினர். அப்பொழுது அவரிடம் குண்டுகளுடன் துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுட்டிருந்தால், மக்கள் ஓட்டம்பிடித்திருப்பர். குறைந்தபட்சம் அந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது சுடப்போவதாக நீட்டியிருந்தால் கூட மக்கள் நெருங்கியிருக்க மாட்டார்கள். ஆனால் தன் மக்களை மிகவும் நேசித்த தோழர் அவர்களை சுடப்போவதாக கூட சொல்ல வில்லை. எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களின் கையில் அடிபட்டு இறந்தார். இதற்கு பின்னால் சர்வாதிகார அரசின் திட்டமிட்ட சதிச்செயலால் கொல்லபட்டனர் என்பதும் உண்மை. இதை விட ஒரு சோகமான விடயம் பொன்பரப்பி தமிழரசனின் சொந்த கிராமம். தன்னை வெளிப்படுத்தினால் எங்கே தன்னை ஒரு கொள்ளையனாக தன் ஊர் மக்கள் நினைத்து விடுவார்களோ என்று எண்ணி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தோழர் மறைந்து போனார்.
கொல்லப்பட்டது தமிழரசன் தான் என்று பிறகு கேள்விபட்டவுடன் பொன்பரப்பிலும், பிற கிராமங்களிலும் நிலவிய சோகம் இன்றும் பலரின் நினைவில் நிற்கிறது. இப்பகுதி மக்கள் தமிழரசனை நேசித்தனர். அவரது முகம் கூட தெரியாமல் அவரது சேவைகள் மட்டுமே பலர் நினைவில் இருந்தது. இன்றும் நிற்கிறது.
தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் அர்த்தமற்றவையாக தெரியலாம். ஆனால் 1980களில் இப் பகுதியில் நிலவிய வறுமை, அறியாமை போன்றவையுடன் பொருத்தி பார்த்தால் அவருடைய போராட்டத்தின் பொருள் விளங்கும்.
தமிழகத்தின் அத்தனை ஊடகங்களும் இந்த நிகழ்ச்சி குறித்து பொய்க்கதைகளை தான் அவிழ்த்து விட்டனவே தவிர ஒரு பத்திரிக்கை கூட உண்மை நிலையை எழுதவில்லை.
தமிழக வரலாற்றில் மக்களை நேசித்த மாமனிதர்கள் பட்டியலில் தமிழரசனின் பெயர் முக்கியமானது.
#துவக்கு
#தோழர்_தமிழரசன்