18/05/2020
உலக வங்கியைப்போல் செயல்படும் மத்திய அரசு. தன்னிச்சையாக கடன்கூட வாங்க முடியாமல் திணறும் தமிழக அரசு.
---------------------------------------------------------------
கொரோனா பெருந்தொற்றால் தவித்து வரும் அனைத்து மாநில அரசுகளும், கூடுதலாக கடன் பெருவதற்க மத்திய அரசு மனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. தமிழக அரசு சார்பாகவும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 2 சதவீதம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இந்த சலுகையை பயன்படுத்த, அதாவது கூடுதலாக கடனை பெறுவதற்கு, மாநில அரசுகள் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று. இதேபோல், மாநில அரசுகள் செயல்படுத்தும் பல மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்தினால்தான் கூடுதலாக கடன் பெற முடியும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மூன்றாம் உலக நாடுகளை தங்கள் வலையில் விழச்செய்ய, ஏகாதிபத்திய நாடுகள் இதுபோன்ற தந்திரமான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். அதாவது, அவர்களுக்கு கடன் கொடுப்பார்கள், ஆனால் அதற்கு பல நிபந்தனைகளை விதிப்பார்கள். அந்த நிபந்தனைகளும் தற்போது மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளைப்போலவே இருக்கும்.
ஒரு நாட்டின் அரசு, தனது மக்களுக்கு வழங்கி வரும் சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறுத்தினால்தான் கடன் வழங்கப்படும் என்று உலக வங்கி நிபந்தனை விதிக்கும். சர்வதேச நிதியமும் இதேபோன்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே ஒரு நாட்டிற்கு கடன் வழங்கும். வேறு வழியின்றி மக்களின் எதிர்ப்பையும் மீறி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி அந்த நாடு கடனை பெற்றாலும், அதை எப்போதும் திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு அந்த அரசு தள்ளப்படும். இறுதியில், உலக வங்கியும், சர்வதேச நிதியமும், அவை இரண்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கம் உலக ஏகாதிபத்தியங்களும் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் மிகக் கேவலமாக நிலைகக் அந்த நாடு தள்ளப்படும்.
இதேபோன்றுதான் தற்போது மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடன் பெறுவதற்கு, வெக்கமின்றி பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக காட்டமாக ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், கடன் பெறுவது மாநில அரசின் உரிமை. மாநில அரசு தனது வருவாயில்தான் கடனை திரும்ப செலுத்தும். மாநில அரசு பெறும் கடன், மத்திய அரசு தரும் நிவாரணம் இல்லை என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று மோடிக்கு பாடம் நடத்தியுள்ளார் எடப்பாடி. அதேபோல், இவ்வளவு பெரிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காதது ஏன் என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.